“சரண்டர்” – திரை விமர்சனம்!!

தயாரிப்பு – விஆர்கே குமார்
இயக்கம் – கௌதமன் கணபதி
நடிகர்கள் – தர்ஷன், லால்.

கௌதமன் கணபதி இயக்கத்தில் பிக்பாஸ் தர்சன் மற்றும் லால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சரண்டர். இந்த வார திரைப்படங்களில் ஒரு ஆச்சரியம் தந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் காவல்துறை படங்கள் என தனி ஜானர் இருக்கிறது. இது கொஞ்சம் வித்தியாசமாக ஒரு காவல்நிலையத்தில் நடக்கும் சம்பவங்களை, வைத்து கதை பின்னி அதை அசத்தலாக சொல்லியிருக்கிறார்கள்.

சென்னையில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் பயிற்சி எஸ்ஐ-யாக பணிபுரிந்து வருகிறார் தர்ஷன். அதே காவல் நிலையத்தில் சீனியர் கான்ஸ்டபிளாக நடிகர் லால் பணிபுரிகிறார். ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் சரண்டர் செய்கின்றனர். அதில் நடிகர் மன்சூர் அலிகான் சரண்டர் செய்யும் துப்பாக்கி மட்டும் காணாமல் போய்விடுகிறது. இன்னொரு பக்கம் தேர்தலுக்காக ரவுடியாக இருக்கும் சுஜித் சங்கர் அனுப்பும் 10 கோடி பணம் ஆக்ஸிடெண்டில் காணாமல் போகிறது. இந்த இரண்டு சம்பவங்கள் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பது தான் படம்.

படத்தை முதலில் பெரிதாக ஹிரோயிசம் என்று கதை சுற்றாமல் நிஜத்திற்கு நெருக்கமாக அடுத்தடுத்து சம்பவங்களை கோர்த்து, அழகான திரில்லராக தந்திருக்கிறார்கள். இயல்பான மலையாள படத்தை பார்க்கும் உணர்வை தருகிறது படம்.

அனைத்து கதாபாத்திரங்களுமே கதைக்குள் வருவது போல மனதிற்குள் நிற்கும்படி நன்றாக எழுதியுள்ளார் இயக்குநர் கௌதமன். முதல் காட்சி முதலே பரபரப்பான திரைக்கதையுடன் நம்மை கதைக்குள் கொண்டு சென்று விடுகிறார் இயக்குனர் கௌதமன் கணபதி. நாயகனாக நடிகர் தர்ஷன் ஒரு பயிற்சி எஸ்ஐ- ஆக நடித்துள்ளார். ரொமான்ஸ் கேரக்டரில் நடிக்கும் வயதில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக அசத்தியிருகிறார் ரவுடியாக சுஜித் சங்கர் கொடூரமான வில்லனாக கலக்கியிருக்கிறார்.

நடிகர் லால் மிகச்சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். போலீஸ் ஸ்டேஷனில் நேரமையான ஒரே ஆளாக இருப்பது, துப்பாக்கி தொலைந்ததும் தவிப்பது, என அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அங்கங்கே காட்சிகளில் தலை காட்டும் மன்சூர் அலிகான், முனீஸ்காந்த், வில்லனின் தம்பியாக வருபவரும் சிறப்பாக செய்துள்ளனர்.

அதிக காட்சிகள் இருட்டில் நடந்தாலும் அதை மிகச்சிறப்பாக படமாக்கியிருக்க்கிறார் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன். விகாஸ் படிஷா இசை படத்திற்கு கூடுதல் பலம்.

இடைவேளை வரை பரபரப்பாக பேசிக்கோண்டிருக்கும் பிரச்சனைகளை இடைவேளைக்குப் பிறகு அப்படியே விட்டுவிட்டார்கள், ஆனாலும் எடுத்துக்கொண்ட கதையை சிறப்பாக சொன்னதில் ஜெயித்திருக்கிறார்கள்.

 

error: Content is protected !!