சினிமா ஒரு மாய உலகம். யார் எப்போது சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. யார் என்றே தெரியாத ஒருவரை நூற்றாண்டின் நடிகராக மாற்றும் சக்தி சினிமாவுக்கு உண்டு. அத்தனை திறமைகளை கொண்டிருந்தாலும், சில படங்களிலேயே ஒரு கலைஞனை ஒதுக்கி வைக்கவும் இந்த சினிமா தயங்காது. இந்த புரிதல் இல்லாமல் எத்தனையோ பேர் இந்த மாய உலகில் நுழைந்து, காணாமல் போய் உள்ளனர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வெறியோடு சுற்றும் ஒருவனை கடைசிவரை கண்டுகொள்ளாது. அதுவே சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒருவனை தனக்குள்ளே இழுத்து, நீச்சல் அடிக்க வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுத்து, இந்த சினிமா கடலில் மாபெரும் மரியானாவாக மாற்றும். அப்படி மாறிய ஒருவர் தான் நடிகர் தனுஷ்.
மழித்த மீசை; பென்சில் தேகம்; அப்பாவி முகம்; விடலைப்பருவம்… இப்படியான உருவத்தோற்றம் கொண்ட ஒருவரை 19 வருடங்கள் கழித்து உலக சினிமாவே கொண்டாடப் போகிறது என்று அப்போது யாராவது கூறியிருந்தால், ‘உளறாதீங்க சார்!’ என்றுதான் பதில் வந்திருக்கும். ஆனால், விடலை வேய்ந்த அந்த இளைஞனிடத்தில் ஒல்லியான தேகம் மட்டுமல்ல, அடர்த்தியான ஒன்றும் இருந்தது. அதுதான் அவருடைய உழைப்பு; சமரசமில்லாத உழைப்பு!
‘காதல் கொண்டேன்’ படப்பிடிப்பு தளத்தில் ‘இவனெல்லாம் ஹீரோவா?’ எனக் கூறி சுற்றியிருக்கும் கூட்டமே சிரிக்கும்போது, விமர்சனங்களை எதிர்கொள்ளத் தெரியாத அந்த வயதில் என்னவெல்லாம் யோசித்திருப்பார் தனுஷ். ‘சினிமாவே வேண்டாம்’ என்று கூட யோசித்திருக்கலாம். ஆனால், காலம் அவரை கைபிடித்து அழைத்து வந்து, ஹாலிவுட் வரை சேர்த்திருக்கிறது. இது, கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எந்தத் தடைகளையும் தகர்த்தெறிந்து சாதிக்க முடியும் என்பதற்கான ஒரு வாழும் உதாரணம். தனுஷின் திரைப்பயணம், கனவுகள் காணும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம்!
வெள்ளித்திரையில் தனது சில்வர் ஜூபிலி ஆண்டுகளை நெருங்கும் தனுஷ் உடைத்திருப்பது பிராந்திய, தேசிய, சர்வதேச எல்லைகளை மட்டுமல்ல. உடல்வாகு, தோற்றம், மாஸ் நடிகர், கிளாஸ் நடிகர், மசாலா படம், விருதுகளுக்கான படம் என்பது போன்ற அனைத்து வரம்புகளையும் அவர் தகர்த்தெறிந்திருக்கிறார்.
தனுஷின் பயணம் என்பது வெறும் நடிப்புத் திறமையின் வெளிப்பாடு மட்டுமல்ல, அது ஒரு அசாத்தியமான லட்சியவாதத்தின் கதை. ஒரு சராசரி இளைஞனின் தோற்றத்துடன் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த தனுஷ், ‘துள்ளுவதோ இளமை’யில் தொடங்கி, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘ஆடுகளம்’ என ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொண்டார். குறிப்பாக, ‘ஆடுகளம்’ திரைப்படம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. இது அவரது திறமைக்குக் கிடைத்த முதல் தேசிய அங்கீகாரம்.
சில பல போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த பிறகு, அவரது பார்வை பாலிவுட்டை நோக்கித் திரும்பியது. ‘ராஞ்சனா’ (Raanjhanaa) திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் கால் பதித்த தனுஷ், தனது இயல்பான நடிப்பால் வட இந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். ஒரு நடிகராகப் பிராந்திய மொழி பேதங்களைக் கடந்து, இந்திய அளவில் அவர் புகழ் பெற்றார்.
தனுஷின் அடுத்த கட்டப் பாய்ச்சல் சர்வதேச அரங்கை நோக்கியது. ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ (The Extraordinary Journey of the Fakir) போன்ற சர்வதேசப் படங்களில் நடித்து, உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். பின்னாளில் வெளியான ‘தி கிரே மேன்’ (The Gray Man) திரைப்படத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து, உலக அளவில் தனது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்தார். இது ஒரு தமிழ் நடிகர் சர்வதேசப் படங்களில் நடிப்பதற்கான புதிய கதவுகளைத் திறந்தது.
தனுஷ் வெறும் ஒரு நடிகரா மட்டுமல்லாமல், ஒரு பாடகராக, பாடலாசிரியராக, இயக்குநராக, தயாரிப்பாளராக எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர். அவர் பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி டி’ (Why This Kolaveri Di) பாடல் உலக அளவில் வைரலாகி, அவருக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரத்தின் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.
தனுஷின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க அம்சம், அவர் ‘மாஸ்’ மற்றும் ‘கிளாஸ்’ என்ற இரு துருவங்களுக்குள்ளும் அடங்காதவர் என்பதுதான். ‘வேலையில்லா பட்டதாரி’ போன்ற படங்களில் ‘மாஸ்’ ஹீரோவாகவும், ‘வடசென்னை’, ‘அசுரன்’ போன்ற படங்களில் நுட்பமான ‘கிளாஸ்’ நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞனாகவும் மிளிர்ந்தார். ‘அசுரன்’ படத்திற்காக இரண்டாவது முறையாகத் தேசிய விருது வென்று, தனது நடிப்புத் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்.
உடல்வாகு, தோற்றம் போன்றவை எல்லாம் ஒரு நடிகருக்கு வரம்புகளாக அமையாது என்பதை தனுஷ் நிரூபித்தார். தனது யதார்த்தமான தோற்றத்தை ஒரு பலவீனமாக அல்லாமல், தனது பலமாக மாற்றிக்கொண்டார். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும், கதாபாத்திரங்களும் அவரது தனித்துவமான பயணத்திற்கு அடிப்படையாக அமைந்துகொண்டே இருக்கின்றன. மசாலாப் படங்களுக்கும், விருதுகளுக்கான கலைப் படங்களுக்கும் இடையே அவர் சமநிலையைக் கடைபிடிக்கிறார்.
இந்த 42 வயதுப் பையன் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி, ஒரு இன்ஸ்பிரேஷன். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மற்றும் திறமையால், எந்த எல்லைகளுக்கும் அப்பாற்பட்டு ஒரு கலைஞர் சாதிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.
அவரது பிறந்தநாளில், இந்தப் பன்முகத் திறமையாளரின் தொடர் வெற்றிக்கு சினிமா பிரஸ் கிளப் சார்பில் வாழ்த்துகள்!