கோடம்பாக்க ரீலும், ரியலும்! – சாப்டர் 1

யக்குநர் சி.வி.ஸ்ரீதருக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இடையில் அந்த காலத்தில் அப்படி ஒரு கெமிஸ்ட்டிரி.எதிர்பாராதது, அமரதீபம், உத்தமபுத்திரன், விடிவெள்ளி என்று பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நேரம்.அந்தப் படங்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒருவகையில் ஸ்ரீதரின் கைவண்ணம் மிளிர்ந்தது. அமரதீபம், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் ஸ்ரீதரின் வீனஸ் நிறுவனத்தின் பங்களிப்பு இருந்தது. இந்தநிலையில் ஒரு விழாவில் இயக்குநர் ஸ்ரீதரும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவரும் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டார்கள்.

‘என்னங்க, எப்பப் பார்த்தாலும் நடிகர் திலகத்துக்கு கூடவே ஒட்டி உறவாடுறீங்க? அவரை வச்சே படம் எடுக்கிறீங்க? ஏன் மக்கள் திலகத்தை வச்சு படம் எடுக்க மாட்டீங்களா?’ என்று கேட்டிருக்கிறார் அந்த வேண்டப்பட்டவர்.

ஸ்ரீதருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அவர் இயக்குநர்களுக்கான நடிகர். இயக்குநர்கள் சொல்வதைக் கேட்டு நடிப்பார். சொந்த ஐடியாக்கள் எதுவும் இருந்தால் அதை இயக்குநரிடம் சொல்லி தனது நடிப்பை மேலும் மெருகேற்றி மின்னி மிளிர வைப்பார். இன்னும் நடிகர் திலகத்தின் பாணியிலேயே சொல்வதானால் அவர் பீடம் தெரியாமல் ஒருநாளும் சாமியாட மாட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆரின் கதை அப்படியில்லையே.

ஒரு திரைப்படத்தின் கதை, வசனம், இசை, பாடல்கள் உள்பட அனைத்து அம்சங்களிலும் எம்.ஜி.ஆர். புகுந்து புறப்படக்கூடியவர். தலையிடக்கூடியவர். திரைப்படத்தின் காட்சிகள், கேமரா கோணங்களில் கூட அவ்வளவு எளிதாக எம்.ஜி.ஆர் சமரசம் ஆகிவிட மாட்டார். எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்குவது என்பது குறிப்பிட்ட சில இயக்குநர்களுக்கு மட்டுமே கைவந்த கலை. இதெல்லாம் ஸ்ரீதருக்கு நன்றாகவே தெரியும். நடிகர் திலகத்துக்கும் ஸ்ரீதருக்கும் இடையில் இருக்கும் புரிந்துணர்வு, ஒட்டுறவு வேறு ரகம். இதை எம்.ஜி.ஆரிடம் எதிர்பார்க்க முடியுமா? இதுவரை காலம் எம்.ஜி.ஆர். பக்கம் ஸ்ரீதர் தலையைத் திரும்பாமல் இருந்ததற்கு இதுவே காரணம்.

ஆனால் இப்போது என்ன செய்வது? ‘மக்கள் திலகத்தை வச்சு படம் எடுக்க மாட்டீங்களா?’ என்று எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஒருவர் கேட்கிறாரே? அவருக்கு என்ன பதில் சொல்வது?’

ஸ்ரீதர் அப்போது சூப்பராக சமாளித்திருக்கிறார். ‘என்னங்க நீங்க? எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய ஆளுமை? எவ்வளவு பெரிய நடிகர் அவர்? அவரை வச்சு படம் எடுக்கணும்னு எனக்கும் ஆசைதான். ஆனால் அவரை எப்படி நெருங்குறதுன்னு எனக்குத் தெரியலை. அது தெரியாமல் இவ்வளவு நாளும் நான் சும்மா இருந்திட்டேன்’ என்றிருக்கிறார் ஸ்ரீதர். (அருமையான சமாளிபிகேஷன்!)

எம்.ஜி.ஆருக்கு வேண்டப்பட்டவர் விடவில்லை.

‘இல்லை ஸ்ரீதர் சார். எம்.ஜி.ஆரை நெருங்குறது அப்படியொண்ணும் கஷ்டமான வேலை இல்லை. நீங்க எம்.ஜி.ஆருக்கு ஏத்தமாதிரி ஒரு கதை ரெடி பண்ணுங்க. அவரைப் பார்க்க நான் ஏற்பாடு பண்றேன்’ என்றிருக்கிறார்.

வேறு வழியில்லை. ஸ்ரீதர் இப்போது எம்.ஜி.ஆருக்கு ஏற்றமாதிரி ஒரு கதையைச் சுடச்சுட தயார் செய்து விட்டார்.

ஒரு சுபயோக சுபநாளில் எம்.ஜி.ஆர், ஸ்ரீதர் இடையே சந்திப்பு நடந்தது.

‘கதையை சொல்லுங்க ஸ்ரீதர்’ என்றிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஸ்ரீதர் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கதை சொல்ல ஆரம்பித்தபோது கதையில் எம்.ஜி.ஆர் அடிக்கடி குறுக்கிடுவார் என்று ஸ்ரீதர் எதிர்பார்த்தார். திரைப்படக் கதையை சொல்லும்போது எம்.ஜி.ஆர். நொடிக்கு ஒரு நோனாவட்டம் சொல்லுவார் என்று ஸ்ரீதர் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார்.

ஆனால், ஸ்ரீதர் கதை சொன்னபோது எம்.ஜி.ஆர் ஒருமுறை கூட இடையில் குறுக்கிடவே இல்லை. கதையை சொல்லி முடித்ததும், ‘பிரமாதமா இருக்கு ஸ்ரீதர். இப்படியே படத்தை எடுத்திறலாம்’ என்றிருக்கிறார் எம்.ஜி.ஆர். ஸ்ரீதரால் அவரது காதையே நம்ப முடியவில்லை.

‘அடப்பாவிகளா! அப்படின்னா எம்.ஜி.ஆரை பத்தி இவ்வளவு காலமும் நாம கேட்ட தகவல் எல்லாம் பொய்யா? பச்சைப்புள்ள மாதிரி அமைதியா கதையை கேட்டு ஓகே பண்ணிட்டாரே. எம்.ஜி.ஆர் இப்படித்தான் இருப்பார்னு முன்கூட்டியே தெரிஞ்சிருந்தால் எம்.ஜி.ஆரை வச்சு நாலைந்து படம் பண்ணியிருக்கலாமேய்யா?‘ என்கிற எண்ணம் ஸ்ரீதருக்குள் ஓடியது.

எம்.ஜி.ஆர் பொதுவாக கதையைக் கேட்டு, அந்த கதை பிடித்து, அவர் நடிக்க ஒப்புக் கொண்டால் அதன்பிறகு சில சம்பிரதாயங்கள் உண்டு. அட்வான்ஸ் பணத்தை அவர் கைநீட்டி வாங்க மாட்டார்.

‘நேரா ராயப்பேட்டைக்குப் போங்க. அண்ணன் (எம்.ஜி.சக்கரபாணி) கிட்ட கதையை சொல்லுங்க. சொல்லிட்டு, அட்வான்சை அவர்கிட்ட குடுத்திடுங்க’ என்பார் எம்.ஜி.ஆர்.

‘அண்ணன்கிட்ட ஏதோ தானான்னு எல்லாம் கதை சொல்லக்கூடாது. எனக்கு சொன்ன மாதிரியே அண்ணனுக்கும் கதை சொல்லணும்’ என்று சொல்லி சில இயக்குநர்களை ராயப்பேட்டைக்கு எச்சரித்து அனுப்பி வைப்பார் எம்.ஜி.ஆர்.

‘எம்.ஜி.ஆர்.தான் ஒத்துக்கிட்டாரே அப்புறம் என்னன்னு நினைச்சு எம்.ஜி.சக்கரபாணியிடம் அலட்சியமா கதை சொன்னால் அது ஆபத்து. இராயப்பேட்டையில் இருந்து ராமாவரத்துக்கு போன் மூலம் ஏதாவது புகார் வந்தால் ஒப்புக்கொண்ட படத்தை எம்.ஜி.ஆர். தட்டிக்கழிக்க வாய்ப்பிருக்கிறது.

நகைச்சுவை நடிகர் ஜே.பி.சந்திரபாபு, எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப் போட்டு மாடி வீட்டு ஏழை என்ற திரைப்படத்தை உருவாக்க முயன்றபோது, எம்.ஜி.சக்கரபாணியுடன் சந்திரபாபுவுக்கு ஏற்பட்ட சண்டை காரணமாக மாடி வீட்டு ஏழை படம் தொடக்கத்திலேயே படுத்துவிட்டது. அது தனிக்கதை.). அதுபோல எம்.ஜி.ஆர் நடிக்கப்போகும் படங்களின் அட்வான்ஸ் தொகை எப்போதும் அவரது அண்ணனுக்குத்தான். அண்ணன் மீது எம்.ஜி.ஆருக்கு அவ்வளவு அன்பு.

ஆனால் இந்த அட்வான்ஸ் மேட்டர், அண்ணனிடம் கதை சொல்லும் சம்பிரதாயம் எல்லாம் ஸ்ரீதர் விஷயத்தில் நடந்ததா என்பது தெரியவில்லை. ஸ்ரீதருக்காக எம்.ஜி.ஆர் ஒருவேளை இந்த சம்பிரதாயத்தை விட்டுக் கொடுத்திருக்கலாம்.

சரி. இப்போது புரட்சிகரமான ஒரு வீரனின் கதை ரெடி. ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கப் போகும் முதல் படம் அது. படத்தின் தலைப்பு கூட தயாராகி விட்டது. படத்தின் பெயர் அன்று சிந்திய ரத்தம்.இது நாள் வரை இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஜி.ஆரை வைத்து படத்தை இயக்கியதில்லை என்பதால், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நடுவில் இந்த புதிய பட அறிவிப்பு எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. இந்தநிலையில் இப்போது முதல்நாள் படப்பிடிப்புக்கான ஆயத்தப்பணி நடந்தது. ‘முதல்நாள் படப்பிடிப்பில் வயல்வெளி ஒன்றில் டிராக்டரில் அமர்ந்தபடி கதாநாயகன் விவசாயத் தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற காட்சி.

இந்த காட்சியை எங்கே எடுக்கலாம் என்று ஸ்ரீதர் யோசித்தபோது, எம்.ஜி.ஆர் அருமையான ஒரு யோசனையைச் சொல்லியிருக்கிறார். ‘சென்னைக்கு கொஞ்சம் வெளியே எனக்கு ஒரு வயல்வெளி, தோட்டம் எல்லாம் இருக்கு. அங்கே படப்பிடிப்பை வச்சுக்கலாம். தோட்டத்தில் வேலை செய்யுற தொழிலாளர்களைக்கூட துணை நடிகர்களாகப் பயன்படுத்திக்கலாம்’ என்றிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஸ்ரீதருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

குறிப்பிட்ட நாளில் எம்.ஜி.ஆர் சொன்ன அவரது வயல் வெளியிலேயே சூட்டிங் நடந்து முடிந்தது. சூட்டிங்கின்போதுகூட எம்.ஜி.ஆர் எதுவும் குறுக்கிடவில்லை. ஸ்ரீதர் சொன்னதைக் கேட்டு அப்படியே சமர்த்தாக நடித்து முடித்தார்.ஸ்ரீதருக்கு உள்ளத்துக்குள் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. ஆனால் அவரது உள்மனது மட்டும் ‘இது எங்கோ போய் முட்டிக்கொள்ளப் போகிறது, ஏதோ சிக்கல் வரப்போகிறது’ என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

எம்.ஜி.ஆர். நடிப்பில், ஸ்ரீதர் இயக்கத்தில் அன்று சிந்திய ரத்தம் திரைப்படம் உருவான நேரம், காதலிக்க நேரமில்லை என்ற நகைச்சுவை படத்தையும் ஸ்ரீதர் எடுக்கத் திட்டமிட்டிருந்தார். அதையொட்டி அன்று சிந்திய ரத்தம், காதலிக்க நேரமில்லை என்ற அந்த இரண்டு திரைப்படங்களுக்கான விளம்பரங்களும் ஒரேநாளில் நாளிதழ்களின் முழுப்பக்கங்களில் வெளிவந்து பட்டையைக் கிளப்பின.

இப்போது அன்று சிந்திய ரத்தம் திரைப்படத்தின் இரண்டாவது நாள் படப்பிடிப்பு. சூட்டிங் எங்கே? எப்போது என்பதை எல்லாம் தெளிவாகக் கேட்டுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.ஆனால் படப்பிடிப்புக்குத் திட்டமிட்டிருந்த நாளில் குறிப்பிட்ட லொகேஷனுக்கு ஸ்ரீதர் உள்பட எல்லோரும் வந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆரை மட்டும் காணோம்.

‘என்ன ஆச்சு? ஒருவேளை இன்னைக்கு படப்பிடிப்பு என்பதை மறந்திட்டாரோ?’ இப்படி குழம்பத் தொடங்கினார் ஸ்ரீதர். ‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து பார்க்கலாமா?’ என்றுகூட அவருக்குள் சிந்தனை ஓடியது.

எம்.ஜி.ஆரிடம் நெருக்கமான ஒருவரிடம் இதை சொன்னார். ‘எம்.ஜி.ஆர். சூட்டிங் நாளை எல்லாம் மறந்து போகிறவர் இல்லை. அவர் வராவிட்டால் அதற்குத் தனி காரணம் இருக்கும். அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் வரவில்லை. அவ்வளவுதான். இனிமேல் அவருக்கு போன் செய்து வீண் வேலை’ என்று பதில் வந்தது.
அவ்வளவுதான். அன்று சிந்திய ரத்தம் திரைப்படம் அப்படியே கைவிடப்பட்டது. அதன்பிறகு எம்.ஜி.ஆரும் பேசவில்லை. ஸ்ரீதரும் பேசவில்லை.

இந்தநிலையில் காதலிக்க நேரமில்லை பட உருவாக்கத்தில் முழுமூச்சாக இறங்கினார் ஸ்ரீதர். படம் ஒருவழியாக முடிவடைந்து திரைக்கு வரத் தயாரானது.
‘காதலிக்க படத்தைப் பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் அதற்கு சித்ராலயா நிறுவனம் பொறுப்பில்லை’ என்று நாளிதழ், வார இதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது.சென்னையில் இருந்த காசினோ தியேட்டர், அந்த காலகட்டத்தில் ஆங்கிலப் படங்களை அதிகம் திரையிடும் திரையரங்கம். ஸ்ரீதரின் திரைப் படங்களும் காசினோவில் திரையிடப்படுவது வழக்கமாம்.

அந்த அடிப்படையில் காதலிக்க நேரமில்லை படத்தை காசினோவில் திரையிட ஸ்ரீதர் ஏற்பாடு செய்திருந்தார்.படத்தின் முதல்காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். இயக்குநர் ஸ்ரீதரும் முதல் காட்சியில் மக்களின் நாடித்துடிப்பைப் பார்க்க காசினோ தியேட்டருக்கு வந்து மேலாளரின் அறையில் ஆர்வத்துடன் காத்திருந்தார்.

இப்போது படம் ஓடத் தொடங்கியது. காதலிக்க நேரமில்லை நகைச்சவை படம் என்பதால் திரையரங்கு முழுக்க சிரிப்பலை மோதும் என்று ஸ்ரீதர் எதிர்பார்த்திருந்த நேரம், ஒரே அழுகையும் கூப்பாடுமான குரல்கள் தியேட்டர் முழுவதும் எதிரொலித்தன.

தியேட்டருக்குள் இருந்த ரசிகர்கள் இரு குழுக்களாக மாறி மோதிக் கொண்டார்கள். தியேட்டர் இருக்கைகளில் இருந்து குஷன் பிய்த்தெறியப்பட்டு தியேட்டர் முழுக்க பூ மழை தூவப்பட்டது.

காசினோ திரையரங்க உரிமையாளர் அதைப் பார்த்து கலங்கிப் போய் இருக்கிறார். ‘ஸ்ரீதர். என்னோட தியேட்டர் ஆங்கிலப் படங்கள் பார்க்க வர்ற கொஞ்சம் மேல்மட்ட ரசிகர்களுக்கான தியேட்டர். உங்களை மாதிரி ஒரு சிலரோட தமிழ்ப் படங்களை மட்டும்தான் இங்கே போடுறேன். என்னோட தியேட்டர்ல இந்தமாதிரி கலாட்டா நடக்குதுன்னு தெரிஞ்சா அப்புறம் உயர்தட்டு ரசிகர்கள் என் தியேட்டர் பக்கமே வர மாட்டாங்க’ என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார் தியேட்டர் உரிமையாளர்.

ஆக, திரைப்படத்தின் முதல் காட்சியில் ஆஊ என்று ஒரே கூச்சல், அழுகைச் சத்தம். படத்தின் வசனம் யார் காதிலும் விழுந்திருக்காது. முதல் காட்சி முடிந்ததும், தியேட்டரில் இருகுழுக்களாகப் பிரிந்து சண்டையிட்ட கூட்டம், வெளியே அடுத்த காட்சிக்கு நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்ற ரசிகர் கூட்டத்தை கலைத்து ஓடவிட்டது.

‘படம் நல்லா இல்லைப்பா. இது ஒரு படம்னு நீங்க எல்லாம் பாக்க வந்துட்டீங்களா?’ என்று படம் பார்க்க வந்திருந்தவர்களை அது விரட்டியடித்தது.

அடுத்தடுத்த காட்சிகள். அடுத்தடுத்த நாள்கள். இதே கதை. இதே கூத்து. ஒரு கட்டத்தில் காதலிக்க நேரமில்லை படத்துக்கு வந்தால் கலாட்டாதான் என்பதால் தியேட்டர் பக்கம் மக்கள் வரத் தயங்கினார்கள். கூட்டம் குறைய ஆரம்பித்தது. படம் ஓடத் தொடங்கினால், டைட்டில் போடுவதில் இருந்து வணக்கம் போடுகிற வரை தியேட்டருக்குள் வழக்கம்போல அடிதடி கலாட்டா.

‘என்ன செய்யலாம்?’ ஸ்ரீதர் கையைப் பிசைந்தார்.

இந்தநேரம் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. காசினோ தியேட்டரில் இப்படி திட்டமிட்டு கலாட்டா செய்யும் கும்பலின் தலைவர் யார் என்பதை அவர் கண்காணிக்கச் செய்தார். படம் முடிந்து கூட்டம் கலையும்போது அந்த கும்பலின் தலைவரை மிகவும் கண்ணியமாக பூப்போல மேனேஜரின் அறைக்கு அழைத்து வரும்படி அவர் கூறினார்.அப்படியே நடந்தது. கலாட்டா குழுவின் தலைவர் மேனேஜர் அறையில் மரியாதையுடன் உட்கார வைக்கப்பட்டு அவருக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.

‘என்ன சார் பிரச்சினை? ஏன் இப்படி கலாட்டா செய்றீங்க?’ திரையரங்க மேலாளர் கேட்டார்.

‘நாங்க எல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்ங்க. ஸ்ரீதர் எப்பவுமே சிவாஜி கணேசன் கூடத்தான் ஒட்டி உறவாடுவார். சிவாஜியை வச்சுத்தான் படம் எடுப்பார். எம்.ஜி.ஆரை வச்சு அவர் படம் எடுத்ததே இல்லை. முதல் முதலா எம்.ஜி.ஆரை வச்சு அன்று சிந்திய ரத்தம்னு அவர் படம் எடுக்கப் போறதா கேள்விப்பட்டோம். ஆர்வமா இருந்தோம். ஆனா அவர் எங்க தலைவர் படத்தை அப்படியே நிறுத்திவச்சிட்டு காதலிக்க நேரமில்லை என்கிற காமெடி படத்தை எடுத்து ரிலீஸ் செஞ்சிருக்கார். எங்க தலைவர் படத்தை டிராப் பண்ணிட்டு இப்படி காமெடி படம் எடுத்தா அதை நாங்க ஓட விட்ருவோமா?’ என்று சொல்லியிருக்கிறார் அவர்.

ஸ்ரீதருக்குப் புரிந்துவிட்டது. அவரைப் போகச் சொன்ன ஸ்ரீதருக்கு இப்போது இருந்து ஒரே வழி, எம்.ஜி.ஆருக்கு போன் செய்வதுதான். வேறு வழியில்லை. ஸ்ரீதர் போன் செய்தார்.

‘வணக்கம் சார். நான் ஸ்ரீதர் பேசுறேன்’

வேறு ஒருவர் என்றால், ‘எந்த ஸ்ரீதர்?’ என்று கேட்டிருப்பார். ஆனால் எம்.ஜி.ஆர் அப்படி கேட்கவில்லை. ‘சொல்லுங்க ஸ்ரீதர். எப்படி இருக்கீங்க?’ என்றிருக்கிறார்.

‘சார் நான் காதலிக்க நேரமில்லைன்னு ஒரு படம் எடுத்திருக்கேன். அது தியேட்டருக்கு வந்திருக்கு’

‘தெரியும் ஸ்ரீதர். நான் சினிமா உலகத்திலேதான் இருக்கேன். நடிகராக இருக்கிற எனக்கு சினிமா உலகத்திலே என்ன நடக்குதுன்னு தெரியாதா? எந்தெந்த படம் திரைக்கு வருது? எவ்வளவு நாள் ஓடுதுன்னு எல்லாத்தையும் நான் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன்’

‘காதலிக்க நேரமில்லை படம் ஓடுற தியேட்டர்கள்ல தினமும் கலாட்டா நடக்குது சார். படத்தை ஓட விடாம பண்றாங்க’

‘யார் அப்படி பண்றா?’

‘மன்னிக்கணும் சார். அவங்களைக் கேட்டா உங்க ரசிகர்கள்னு சொல்றாங்க’

எம்.ஜி.ஆர் அதைக்கேட்டதும் கோபமானார். ‘என்னது? என் ரசிகர்களா? அவங்களா கலாட்டா பண்றாங்க? அது தப்பாச்சே? அப்படி பண்ணக்கூடாதே. படம் பிடிச்சா தியேட்டருக்குப் போய் பார்க்கணும். படம் பிடிக்கலைன்னா போகக்கூடாது. அதுதானே சரி? ஓகே ஸ்ரீதர். இதைப் பத்தி நான் விசாரிக்கிறேன். நீங்க இனிமேல் கவலைப்படாதீங்க’ என்றிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

என்ன ஆச்சரியம்?

எம்.ஜி.ஆருடன் ஸ்ரீதர் பேசி முடித்த மறுநாளில் இருந்து தியேட்டர்களில் கலாட்டா நின்று போனது. காதலிக்க நேரமில்லை படம் நன்றாக இருப்பதாக தகவல் பரவ, கூட்டம் அதிகரித்து படம் சூப்பராக ஓடத் தொடங்கியது.மனதுக்குள் எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் ஸ்ரீதர்.

சரி. எம்.ஜி.ஆரை வைத்து ஸ்ரீதர் இயக்கத் தொடங்கிய அன்று சிந்திய ரத்தம் படம் ஏன் நின்று போனது? எம்.ஜி.ஆர் இரண்டாவது நாள் படப்பிடிப்பை புறக்கணித்த காரணம் என்ன?

அது தெளிவாகத் தெரியாவிட்டாலும் எம்.ஜி.ஆர் தரப்பு வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவல் இதுதான்.

அன்று சிந்திய ரத்தம், காதலிக்க நேரமில்லை என்ற இரண்டு திரைப்படங்களுக்கான விளம்பரங்களும் ஒரேநாளில் நாளிதழ்களின் முழுப்பக்கங்களில் வெளிவந்தன அல்லவா? அன்று எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஒருவர் அந்த விளம்பரங்களை கொண்டுபோய் எம்.ஜி.ஆரிடம் காட்டி இருக்கிறார்.

பிறகு அவர் சொல்லியிருக்கிறார்.

‘அண்ணே! தமிழ்ப்பட உலகத்தில் மிகப்பெரிய ஜெயண்ட் நீங்க. தமிழ்ல முதல்ல வந்த கலர் படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும். அது நீங்க நடிச்ச படம். விஜயா புரடக்சன்ஸ் நிறுவனத்தோட முதல் கலர் படம் எங்க வீட்டுப்பிள்ளை. அது நீங்க நடிச்ச படம். ஏ.வி.எம். நிறுவனத்தோட முதல் கலர் படம் அன்பே வா. அது நீங்க நடிச்ச படம். ஜெமினி நிறுவனத்தோட முதல் கலர் படம் ஒளிவிளக்கு. அதுவும் நீங்க நடிச்ச படம். தமிழ் சினிமா உலகத்திலே முதல் கலர் படம் எடுத்த எல்லா கம்பெனியும் சென்டிமெண்டா உங்களை வச்சுத்தான் படம் எடுத்திருக்காங்க. ஆனா இந்த ஸ்ரீதருக்கு எவ்வளவு கொழுப்பு பாருங்களேன். அவர் எடுக்கிற காமெடி படம் காதலிக்க நேரமில்லை கலர் படமாம். உங்களை வச்சு எடுக்கிற அன்று சிந்திய ரத்தம் படம் கறுப்பு வெள்ளையாம். என்னண்ணனே இது நியாயம்?’

இப்படிக் கேட்டிருக்கிறார் அந்த வேண்டப்பட்டவர். இது ஏனோ எம்.ஜி.ஆருக்கு சுருக்கென குத்திவிட, அதைத் தொடர்ந்து அவர் செய்துதுதான் அந்த இரண்டாம் நாள் சூட்டிங் புறக்கணிப்பாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆரின் அந்த புறக்கணிப்பு அன்று சிந்திய ரத்தம் படத்துக்கு மூடுவிழா நடத்திவிட்டது.

அதன்பின் நடிகர் திலகத்துடன் இயக்குநர் ஸ்ரீதர் தொடர்ந்து இணைந்து நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு போன்ற படங்களை எடுத்தார். ஒருநாள் ஸ்ரீதரிடம் நடிகர் திலகம் கேட்டிருக்கிறார்.

‘ஸ்ரீதர்! எம்.ஜி.ஆரை வச்சு நீங்க அன்று சிந்திய ரத்தம்’னு ஒரு படம் எடுக்கப் போனீங்க இல்லையா?’

‘ஆமா. அந்தப் படம் தொடக்கத்திலேயே நின்னுபோச்சு’

‘அந்த கதை இப்ப சும்மாத்தானே இருக்கு? அந்த கதையை திரைப்படமா ஆக்குங்களேன். நான் நடிக்கிறேன்’

‘சார். எம்.ஜி.ஆர் என் மேலே ஏற்கெனவே கோபமாக இருக்கார். அவருக்கு ரெடி பண்ண கதையிலே நீங்க நடிச்சா இன்னும் கோபமாயிடுவார்’

‘அதெல்லாம் ஒண்ணும் கோபப்பட மாட்டார். அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கிட்ட நான் பேசிக்கிறேன்’ என்றிருக்கிறார் சிவாஜி.

அதைத் தொடர்ந்து அன்று சிந்திய ரத்தம் படத்தின் திரைக்கதை உருமாற்றம் பெற்று நடிகர் திலகத்தின் நடிப்பில், ஸ்ரீதர் இயக்கத்தில் வேறொரு படமாக வெளிவந்தது. அந்த படம்தான் சிவந்த மண்.

சரி. அன்று சிந்திய ரத்தம் என்ற தலைப்பு நல்ல தலைப்பு ஆயிற்றே? அந்த தலைப்பு அப்படியே கைவிடப்பட்டதா?

அந்த தலைப்பு கைவிடப்படவில்லை. அந்த தலைப்பில் ஒரு திரைப்படம் 1977ஆம் ஆண்டு வெளிவந்தது. அது எம்.ஜி.ஆர் நடித்த படம் அல்ல. நடிகர் ஜெய்சங்கர் நடித்த படம்.

தமிழ்த் திரைப்பட உலகத்தில் கொத்து கொத்தாக இப்படி எத்தனை கதைகள் புதைந்திருக்கின்றன பாருங்கள்.

மோகன ரூபன்