தம்பி ராமையா கதை, வசனம் எழுதி இசையமைக்க அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் ‘ராஜாகிளி’.
இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வாரம் வெளியாகியிருக்கும் இந்தப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா?
சமூகத்தில் உழைப்பால் உயர்ந்தவர்கள், சிறு சபலத்தால் எத்தனை கீழே போய் விடுகிறார்கள், உலகம் அவர்கள் வீழ்ச்சியை எப்படி ரசிக்கிறது என்பதை சொல்லி, வாழ்வின் ஒழுக்கத்தின் அவசியத்தை பேசியிருக்கும் படம் தான் ராஜாகிளி.
தமிழகத்தில் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல தொழிலதிபரின் கொலை வழக்கை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அந்த உண்மை சம்பவத்தை அப்படியே எடுக்காமல் படத்திற்கான மசாலா சேர்த்து சுவாரஸ்யமான திரைக்கதை ஆக்கியதில், தம்பி ராமையா ஜெயித்து விட்டார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துக் கொள்ளும் ஆஸ்ரமம் நடத்தும் சமுத்திரகனி, ரோட்டில் பிச்சைக்காரனாக மனநலம் குன்றி, அலையும் தம்பி ராமையாவை அழைத்து வருகிறார். தம்பி ராமையா ஒரு காலத்தில் பிரபலமான தொழிலபதிராக ஜெகஜோதியாக வாழந்த முருகப்ப சென்றாயர் என்பது தெரிய வருகிறது. சின்ன சபலத்தால் அவர் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது, கவர்ச்சி , காமெடி, என உணர்வு பொங்க சொல்கீறது படம்.
தொழிலதிபர் முருகப்பா சென்றாயர் கதாபாத்திரத்தில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அந்தத் தொழிலதிபரின் தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளார்தம்பி ராமையா. அவருக்கு இதில் பல வேடம். வெள்ளை வேட்டி சட்டை பாசமான பேச்சு என தொழிலகுபர் கதாபாத்திரத்தில் அத்தனை பொருத்தமாகவே நடித்தவர், பின் பாதியில் பிச்சைக்காரனாகவும் கலக்குகிறார்.
அடுத்த பெண்ணின் மீது சபலப்படும் காட்சிகள், வயது வந்தவர்கள் ரசிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தம்பி ராமையா நகைச்சுவையில் கலக்குகிறார். அதே நேரம் மனநலம் பாதிக்கப்பட்டு தெருத் தெருவாக சுற்றித் திரியும் போது அவர் மீது பரிதாபம் வரும் அளவிற்கு கலங்கவும் வைக்கிறார்.
இரட்டை அர்த்தங்கள் நிறைந்த இந்தப்படத்தை அப்பாவை வைத்து ரசிக்கும்படி இயக்கியதில் கவனம் ஈர்க்கிறார் உமாபதி ராமையா. முதல் படம் போலவே தெரியவில்லை தேர்ந்த இயக்குநர் போல படத்தைத் தந்துள்ளார்.
அன்பு இல்லத்தை நடத்தும் அன்பான மனிதனாக சமுத்திரக்கனி. வழக்கம் போல கிளைமாக்சில் அன்பாக அட்வைஸ் செய்கிறார்.
படத்தில் தம்பி ராமையாவின் இரண்டு மனைவிகளை விட மூன்றாவதாக அவர் வைத்துக் கொள்ளும் கல்லூரி மாணவி விசாக கதாபாத்திரத்திற்குத்தான் முக்கியத்துவம் உள்ளது. அவர் புதுமுகம் என்றாலும், ஈசியாக முகழ் சுழிக்க வைத்து விடும் பாத்திரம் என்றாலும், அதிலும் அது தவறாக தெரியாமல் நல்ல நடிப்பைத் தந்துள்ளார்.
தம்பி ராமையாவுக்கு ஆலோசனை சொல்லும் சாயியாராக பழ கருப்பையா, பள்ளி கரஸ்பான்டன்ட் ஆக ஆடுகளம் நரேன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள் தம்பி ராமையா சொல்வதை கேள்வி கேட்காமல் நிறைவேற்றும் பாதுகாவலர்களாக ஆன்ட்ரூஸ், மாலிக் நடித்திருக்கிறார்கள். ஆசை காட்டி மோசம் செய்யும் ஆல்பர்ட் சுதாபாத்திரத்தில் பின்னணிப்பாடகர் கிரிஷ் என அனைவரும் நல்ல நடிப்பைத் தந்துள்ளனர் .
நடிப்பைத் தாண்டி இசையிலும் கவனம் ஈர்த்துள்ளார் தம்பி ராமையா, கிளுகிளுப்பு காட்சிகளில் அவரது இசை அட்டகாசம்.
ஈஸியாக முகம் சுழிக்க வைக்கும் கதை, ஆனால் புத்திசாலியான திரைக்கதையில் மறைத்து ரசிக்கும் படி தந்திருக்கிறார்கள்.
ராஜாகிளியை தாராளமாக ரசிக்கலாம்.