விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன்
இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், மெகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்
விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் மாறியவர், விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர். இந்த இருவரின் கூட்டணியில் ஒரு புதிய தளத்தில் நல்லதொரு படம் வரும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருந்தது.
விஜய் ஆண்டனி தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, நடித்து வந்தார். ஆனால் இறுதியாக அவர் நடித்த சில படங்கள் கதைகளிலும் சரி, திரைக்கதையிலும் சரி ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. சோகமாக அந்த லிஸ்ட்டில் இந்தப் படமும் சேர்ந்து இருக்கிறது.
மழை பிடிக்காத மனிதன் படத்தில் முதல் ஒரு நிமிடத்திற்கு அனிமேஷன் காட்சிகள் வருகிறது. அந்த அனிமேஷன் காட்சிகள் இந்த படம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தின் தொடர்ச்சி என்பதாக சொல்கிறது. ஆனால் இது தன்னுடைய கதை இல்லை, என விஜய் மில்டன் புகார் கொடுத்திருக்கிறார். பிரச்சனை தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்குமாக சென்று கொண்டு இருக்கிறது.
இந்த படத்தின் கதையை முதலில் பார்த்துவிடலாம்
ஒரு மழை நாளில், மழை பிடிக்காத ஒருவன் ராணுவத்தில் இருந்து, விடைபெற்று, அந்தமான் தீவில் இருக்கும் ஒரு நகரத்திற்கு வருகிறான். அவனை அவன் உயரதிகாரி அறிவுரை கூறி விட்டுவிட்டு போகிறார். அந்த நகரத்தில் அவனுக்கு ஏற்படும் சம்பவங்கள் அவன் எந்த வழியில் செல்வது என்பதை தீர்மானிக்கிறது. அங்கு அவனுக்கு அமையும் உறவுகள், அவர்களுக்கு வரும் பிரச்சனைகள், அதற்கு அதிரடியில் இறங்கும் அவன், என்பதாக கதை செல்கிறது. உண்மையில் அவன் யார் ?, அவனின் பின்னணி என்ன ?என்பதாகத்தான் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும் இந்த படத்தின் கதை, பார்ப்பதற்கு அத்தனை சுவாரசியத்தை தரவில்லை. இதுவரை பல முறை பல நாயகர்களுக்கு இது மாதிரியான கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு ஊருக்கு புதிதாக வரும் ஹீரோ, அங்கு நடக்கும் பிரச்சினையை எதிர்த்து களமிறங்குவார். இந்த படத்திலும் அதேதான், என்ன கிளைமாக்ஸ் சீன் மட்டும் கொஞ்சம் வேறு மாதிரி மாற்றி இருக்கிறார்கள்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு உம்மனாம்மூஞ்சி வேடம், அவருக்கு தகுந்த மாதிரியான பாத்திரம் நிறைவாக செய்துள்ளார். இரண்டாவது நாயகனாக வாழும் இளைஞன் நன்றாக நடித்திருக்கிறார். படத்தில் அனைவரையும் ஓரம் கட்டி, ரசிகர்களை கவர்வது சரண்யா பொன்வண்ணன் தான். தன் பாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார்.
வில்லனால் பாதிக்கப்பட்ட ஹீரோயினாக மேகா ஆகாஷ் கவர்கிறார். படத்தில் வரும் கன்னட வில்லன் கதாபாத்திரம் சரியாகவே சொல்லப்படவில்லை, அதே மாதிரி தான் போலீஸ் பாத்திரம், அவர்களின் பின்னணி என்ன, அவர்களின் குணாதிசயம் என்ன, அவர்களுக்கு பிரச்சனை என்ன எதுவுமே ரசிகனுக்கு சரியாக சொல்லப்படவில்லை. அதனால் அந்த பாத்திரங்கள் மனதில் பதியாமல் போகிறது.
படத்தின் மிகப்பெரிய குறை எடிட்டிங். சொல்லலாம் எந்த ஒரு காட்சியும் நிறுத்தி சொல்லாமல் செல்கிறது.
எந்த காட்சியும் ஏன் நிதானமாக கதை சொல்லவில்லை ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது இசை ஓகே ரகம்.
படத்தின் கதை திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என்பதே ரசிகனுக்கு தெரியாத போது, படத்தின் மீதான ஈர்ப்பு குறைந்து விடுகிறது.
படம் முடியும்போது நமக்குள்ளும் ஒரு நிம்மதி வந்து செல்கிறது, ஆனால் இதற்கு இரண்டாம் வேகம் உயர் வைத்திருக்கிறார்கள். இந்த முதல் பாகத்திலேயே முழுமையான எந்த ஒரு புரிதலும் இல்லாமல் இருக்கும் போது, இரண்டாம் பாகம் தான் எதற்கு ?
மழை பிடிக்காத மனிதன் நமக்கும் பிடிக்கவில்லை