ஃபில்டர் கோல்ட் திரை விமர்சனம் !

இயக்கம் – விஜய பாஸ்கர்

நடிகர்கள் – விஜய பாஸ்கர், டோரா ஶ்ரீ, சுகுமார் சண்முகம்

கதை – ஒரு குழுவாக சமூகத்தின் அழுக்குகளோடு அரவாணிகள் வாழ, அவர்களின் வாழ்க்கையில், ரௌடியின் சிறு பையன் செய்யும் பிரச்சனையால், அவர்கள் வாழ்வு எப்படி மாறுகிறது என்பதே கதை

தமிழ் சினிமா கேலியும் கிண்டலும் மட்டுமே செய்த மூன்றாம் பாலினத்தவரான அரவாணிகள் வாழ்வையும், அவர்களின் வலிகளையும், ரத்தமும் சதையுமுமாக சொல்ல முயன்றிருக்கிறது இந்த ஃபில்டர் கோல்ட். அதற்காகவே இப்படத்தை பாராட்டலாம்.

நம் சமூகத்தில் பெண்கள், குழந்தைகள், தனி மனித உரிமைகளுக்கே இன்னும் சரியான தீர்வுகளே கிடைக்கவில்லை. இதில் அரவாணிகள் பிரச்சனைகள் எல்லாம் சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிற உலகில், அவர்கள் வாழ்க்கையை கொஞ்சம் நெருங்கி பதிவு செய்துள்ளது இந்த சினிமா.

அரவாணிகள் பற்றி சமூக வலைதளங்களில், அரசியல் மேடைகளில் பொது வெளிகளில் மாரியாதையும் மதிப்பும் பாராட்டுகள் கிடைத்தாலும், நிஜத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். அரவாணிகள் தெருத்தெருவாக பிச்சை எடுப்பதும் பாலியல் இச்சைகளுக்கு பலியாகி பணம் சம்பாதிப்பதுமாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வே இருன்மையும் வறுமையும் வன்முறை சார்ந்ததுமாகத்தான் இருக்கிறது. அது அப்படியே திரையில் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அதனோடு வன்முறையும் கொஞ்சம் அதிகமாகவே காட்டப்பட்டிருக்கிறது.

அரவாணிகளாக நிஜ அரவாணிகள் பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜய பாஸ்கர் விஜியாக கலக்கியிருக்கிறார். அரவாணிகள் வாழ்வை நெருங்கி சொல்லும் படத்தில் ரௌடிசமும், கூலிப்படை கொலைகளும் அவர்கள் செய்வதாக வருவது நெருடல், அந்த காட்சிகள் அவசியமா ?

அரவாணிகள் மொழியில் பாலியல் வார்த்தைகளும் கெட்ட வார்த்தைகளும் சகஜம், அதை திரையில் குறைக்க முயன்றாலும் படம் முழுக்க வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதோடு ரத்தமும் வன்முறையும் படத்தை குழந்தைகள் பெண்கள் பார்க்க முடியாத அடல்ட் சினிமாவாக மாற்றி விடுகிறது. திரைக்கதையிலும் வசனங்களிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அரவாணிகள் வாழ்வை சொல்லும் சினிமாவில் வன்முறை நியாயம் என்பது போல் சொல்வது தகுமா ? இத்தனை ரத்தமும் தேவை தானா?


பல நடிகர்கள் புதுமுகங்கள் என்பதால் நடிப்பில் அமேச்சூர் தனம் தெரிவது சறுக்கல். இசை படம் முழுக்க இரைந்து கொண்டே இருக்கிறது. ஒளிப்பதிவு தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறது. சின்ன பட்ஜெட் படம் என்பது படத்தில் வெளிப்படையாக தெரிகிறது.

ஃபில்டர் கோல்ட் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத பக்கத்தை, காட்டியிருக்கிறது.