தயாரிப்பு: திரவ் இயக்கம்: திரவ்
நடிப்பு : கிஷோர், சுபத்ரா, ஜார்ஜ் மரியான், தான்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா
ஒளிப்பதிவு: தேவராஜ் புகழேந்தி
இசை : சங்கர் ரங்கராஜன்
வெளியான தேதி : ஜனவரி 30, 2026
நேரம் : 2 மணிநேரம் 06 நிமிடம்
இன்றைய தமிழ் சினிமாவில் வன்முறை, போதை, பழிவாங்கல் போன்ற கதைகள் அதிகம் வரும் சூழலில், குடும்பம், பாசம், இசை, தன்னம்பிக்கை ஆகிய மெல்லிய உணர்வுகளை மையமாக வைத்து வந்துள்ள படம் மெல்லிசை. தனியார் பள்ளியில் பி.டி. ஆசிரியராக பணியாற்றும் ராஜன் என்பவருக்கு (கிஷோர்) இசை மீது இருக்கும் ஆழ்ந்த ஆர்வமே கதையின் தொடக்கம். ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் பாடல் ரியாலிட்டி ஷோவில் அவர் பங்கேற்று அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறுகிறார். ஆனால் இதை விரும்பாத பள்ளி நிர்வாகம், குறிப்பாக பிரின்ஸ்பால், அவரை வேலையை விட்டு நீக்குகிறார். வேலை இழப்பு, சமூக அழுத்தம், குடும்ப பொறுப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் ராஜன் எப்படி தன் கனவையும் குடும்பத்தையும் சமநிலைப்படுத்துகிறார் என்பதே கதையின் மையம்.
பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் வலுவான முத்திரை பதித்த கிஷோர், இதில் முழுமையான கதாநாயகனாக வாழ்ந்திருக்கிறார். ராஜன் என்ற கதாபாத்திரம் வெறும் சினிமா கேரக்டராக அல்லாமல், நம்மில் பலர் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நடுத்தர குடும்பத் தலைவரின் பிரதிபலிப்பாகத் தெரிகிறது. குடும்பத்தின்மீது காட்டும் பாசம், நண்பர்களுடன் இயல்பாக பேசும் தருணங்கள், பள்ளியில் அவமானப்படும்போது வெளிப்படும் கோபம், வேலை இழந்த பின் மனம் உடையும் நொடிகள்—எல்லாவற்றிலும் தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். சில பாடல் போட்டி காட்சிகள் நாடகத்தனமாகத் தோன்றினாலும், ராஜன் என்ற மனிதனின் பயணம் பார்வையாளரை உணர்வுப்பூர்வமாக உணரச் செய்ய வைக்கிறது.
ராஜனின் மனைவியாக வரும் சுபத்ரா ராபர்ட் கதாபாத்திரத்திற்கு நல்ல வலு சேர்க்கிறார். ஆசிரியையாகவும், குடும்பத்தின் தூணாகவும் அவர் காட்டும் பொறுமை, கணவருக்காக நிற்கும் தைரியம் மனதில் நிற்கிறது. கதையை மகன், மகள் பார்வையில் ஃபிளாஷ்பேக் ஆக சொல்லும் அமைப்பு ஒரு சுவாரஸ்ய முயற்சி. மகனாக வரும் ஜஸ்வந்த் மணிகண்டன், மகளாக வரும் தனன்யா ஆகியோர் இயல்பான நடிப்பால் குடும்ப உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்துகிறார்கள். பிரின்ஸ்பால் கதாபாத்திரம் பார்வையாளரை கோபப்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. வில்லன் வேடத்தில் ஹரிஷ் உத்தமன் , அவரது காட்சிகள் முழுமையாக கதையுடன் ஒட்டாமல் சற்று தனித்து தெரிகின்றன.
இயக்குனர் திரவ், ஒரு எளிய கதையை எதார்த்தமான சூழலில் சொல்ல முயன்றிருக்கிறார். பள்ளி சூழல், ஆசிரியர்கள் இடையேயான அரசியல், குடும்ப வாழ்க்கை எல்லாம் எல்லோரும் அனுபவிப்பது. ஒளிப்பதிவில் பழைய வீடு, குடும்ப நினைவுகள் வரும் காட்சிகள் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதியில் வீட்டைச் சுற்றிய உணர்ச்சிகரமான தருணங்கள் பார்வையாளர்களை நினைவுகளுக்குள் இழுத்துச் செல்கின்றன. ஆனால் ஃபிளாஷ்பேக் எடிட்டிங் சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நேரடியாக சொல்லப்பட்டிருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.

படத்தின் மையமே பாடல் போட்டி என்றாலும், அந்த பகுதி எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யமாக இல்லை. பாடல்களில் அழுத்தமும், போட்டியின் டென்ஷனும் குறைவாக இருக்கிறது. பாடல் உரிமை பிரச்னை காரணமாக சில பாடல்கள் மாற்றியமைக்கப்பட்டிருப்பது திரைக்கதையின் ஓட்டத்தை பாதிக்கிறது. மேலும் சில காட்சிகளில் நாடகத்தனமும், செயற்கை உணர்வும் அதிகமாக தெரிகிறது. பாசிட்டிவான கதைக்கு ஏற்றபடி கிளைமாக்ஸ் இன்னும் இயல்பாகவும் நம்பகமாகவும் இருந்திருந்தால் படம் இன்னும் மனதை நெகிழ வைத்திருக்கும்.
குறைகள் இருந்தாலும், மெல்லிசை ஒரு அமைதியான, நல்லுணர்வுகளைத் தூண்டும் குடும்பத் திரைப்படம். பெரிய ஹீரோயிசம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இல்லாமல், சாதாரண மனிதர்களின் வாழ்க்கை போராட்டத்தை சொல்லும் முயற்சி பாராட்டுக்குரியது. நடித்த அனைவரின் முகங்களும், அவர்களின் இயல்பான நடிப்பும் படத்தை இன்னும் அழகாக்குகின்றன. நீண்ட நாள்களுக்கு பிறகு இப்படிப்பட்ட மெல்லிய, பாசம் நிறைந்த குடும்பக் கதையை பார்த்த திருப்தியை மெல்லிசை தருகிறது. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கத் தகுந்த, தன்னம்பிக்கையையும் பாசத்தையும் நினைவூட்டும் படம் என்பதில் சந்தேகமில்லை.
