சினிமா வியாபாரம் என்றாலே பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், கோடிக்கணக்கில் விளம்பரம், ஊர் ஊராகச் சென்று புரோமோஷன் செய்வதுதான் வழக்கம். ஆனால், ஒரு யூடியூப் பிரபலம் நினைத்தால் உலக சினிமாவையே தன் பக்கம் திருப்ப முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார் மார்க்கிப்ளையர் (Markiplier).. அவரது அறிமுக இயக்கமான ‘Iron Lung’ திரைப்படம், தற்போது ஹாலிவுட் ஸ்டூடியோக்களையே வாய் பிளக்க வைத்திருக்கிறது.
60 டூ 2500: ஒரு அசுர வளர்ச்சி!
ஆரம்பத்தில் வெறும் 60 தியேட்டர்களில் மட்டும் திரையிடத் திட்டமிடப்பட்ட இந்தப் படம், இன்று உலகம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், இந்தப் படத்திற்குப் பின்னால் எந்த ஒரு பெரிய விநியோகஸ்தரும் (Distributor) இல்லை.
2025 டிசம்பரில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அமெரிக்காவின் பல நகரங்களில் ‘ஹவுஸ்புல்’ போர்டு மாட்டப்பட்டது. இதைப் பார்த்த மற்ற நாட்டு ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? ஆஸ்திரேலியா, லண்டன், நியூசிலாந்து என அந்தந்த நாட்டு தியேட்டர்களுக்கு இமெயில்களையும் போன்களையும் தட்டிவிட்டு, “எங்க ஊர்லயும் ரிலீஸ் பண்ணுங்கடா!” என அதிரடி காட்டினார்கள். விளைவு, இன்று இண்டிவைர் (IndieWire) போன்ற முன்னணி இதழ்களே வியந்து எழுதும் அளவுக்குத் திரையரங்குகளின் எண்ணிக்கை எகிறியுள்ளது.
கதை என்ன? – ரத்தக் கடலில் ஒரு திகில் பயணம்
2022-ல் வெளியாகிப் புகழ்பெற்ற ஒரு ‘இண்டி’ கேமைத் தழுவி இந்தப் படம் உருவாகியுள்ளது.
-
கதைச் சுருக்கம்: ‘The Quiet Rapture’ என்ற ஒரு பேரழிவால் அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்களும், வாழத் தகுதியான கோள்களும் மாயமாய் மறைந்துவிடுகின்றன.
-
பின்னணி: உயிர் பிழைத்தவர்கள் தஞ்சம் புகுந்த இடத்தில் வளங்கள் தீர, ஒரு கைதி (மார்க்கிப்ளையர்) ரத்தக் கடலால் சூழப்பட்ட ஒரு நிலவுக்கு அனுப்பப்படுகிறார்.
-
திகில்: ஒரு சிறிய இரும்பு நீர்மூழ்கிக் கப்பலுக்குள் (Iron Lung) அமர்ந்து கொண்டு, அந்த விசித்திரமான கடலுக்கு அடியில் அவர் சந்திக்கும் திகில் சம்பவங்களே இந்தப் படம்.
இயக்கம், தயாரிப்பு, படத்தொகுப்பு மற்றும் நடிப்பு என சகல துறைகளிலும் மார்க்கிப்ளையரே களம் இறங்கியுள்ளார். இவருடன் ஜாக்செப்டிசை (Jacksepticeye) புகழ் சீன் மெக்லாலின், ட்ராய் பேக்கர் ஆகியோரும் கைகோர்த்துள்ளனர்.
இது சினிமாவின் புதிய முகம்!
சினிமா சந்தை நிபுணர் பில் ஹெர்டிங் இது குறித்துக் கூறும்போது, “இது வெறும் தற்செயலான நிகழ்வு அல்ல, மேஜிக்! தென் அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், நார்வே, ஸ்வீடன், ஜெர்மனி என எல்லா இடங்களிலிருந்தும் தியேட்டர்களுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதுதான் சினிமாவின் எதிர்காலம்” எனத் தெரிவித்துள்ளார்.
பெரிய ஸ்டூடியோக்களின் தயவின்றி, ரசிகர்கள் தங்களுக்கு வேண்டிய படத்தைத் தாங்களே தியேட்டருக்கு வரவழைக்கும் இந்த ‘ஃபேன் பவர்’ கலாச்சாரம், சினிமா விநியோக முறையில் ஒரு மைல்கல்.
“தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி டிஸ்ட்ரிபியூட்டர் பின்னாடி அலையுற காலமெல்லாம் போச்சு போல… ரசிகர்களைச் சம்பாதிச்சு வச்சா, தியேட்டரே நம்ம தேடி வரும் போலயே!”
