காவியக் கவிஞர் வாலி பிறந்த நாள்!

கச் சிறப்பான சொற்கோர்வை, சந்தம் என தமிழ் இலக்கணத்தின் அத்தனை கூறுகளையும் மிகச் சிறப்பா கையாண்ட கவிஞர் வாலி தாயைப் பற்றி எழுதியுள்ள அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே, தாய் இல்லாமல் நான் இல்லை, நானாக நான் இல்லை தாயே, ஆசைப்பட்ட எல்லாத்தையும் போன்ற பாடல்கள் எல்லாம் இன்னிக்கும் நம்மை தாலாட்டிக் கொண்டு தானே இருக்கின்றன.

அதே மாதிரி கற்பகம் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மன்னவனே அழலாமா’, ‘அத்தை மடி மெத்தையடி’, அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இடம் பெற்று ‘உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்’ தளபதி படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்கள், மௌன ராகம் திரைப்படத்தில் இடம் பிடிச்ச ‘மன்றம் வந்து தென்றலுக்கு’, காதல் தேசம் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என்னை காணவில்லையே நேற்றோடு’, காதலர் தினத்தில் இடம் பெற்ற ‘என்ன விலை அழகே’, சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘முன்பே வா என் அன்பே வா’ , எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற ‘மின்வெட்டு நாளில் இங்கே’ போன்ற பாடல்கள் எல்லாம் காலம் கடந்தும் இன்றும் காவியங்களாக நம் காதுகளில் ஒலிச்சிக்கிட்டுதானே இருக்குது!

இந்த சாதனையாள வாலி முன்னொரு சமயம் ”அடச் சே.. இந்த சினிமாவும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு முடிவெடுத்துட்டேன். திரும்பவும் ஸ்ரீரங்கத்துக்கே போயிடறது… இல்லேன்னா தற்கொலை செய்து கொள்வதுங்கற கடைசி முடிவுல இருந்தேன். அப்படி என்னையே எனக்குப் பிடிக்காமப் போய், உலத்தையும் என்னையும் வெறுத்துக் கிடந்த சூழலில், எங்கிருந்தோ காத்துல கலந்து என் காதுக்குள்ளே புகுந்து, என் மனசைத் தொட்டுச்சு அந்தப் பாட்டு. கவியரசர் கண்ணதாசனோட பாட்டு அது. தோத்துப் போயிட்டோம்னு நினைச்ச என் முடிவை மாத்தி மீண்டும் வாழ்க்கைக்குள்ளே என் சட்டையைக் கொத்தாப் பிடிச்சு தள்ளிவிட்டுச்சு அந்தப் பாட்டு. ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை’ன்னு ‘மயக்கமா கலக்கமா’ங்கற பாட்டுதான் என்னைத் தெளியவைச்சுச்சு. புது உத்வேகத்தோட சினிமாவுக்குள்ளே இறங்கினேன். பேர் சொல்லும் அளவுக்கு உழைச்சே. அதுக்காக கண்ணதாசனுக்குக் காலம் முழுக்க நன்றிக்கடன்பட்டிருக்கேன்’’ அப்படீன்னு உணர்ச்சி பொங்கச் சொன்னவர் இந்த கவிஞர் வாலி.

தமிழ் வெள்ளித்திரைக்காக சுமார் 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடிச்ச கவிஞர் வாலி தன்னம்பிக்கை, தத்துவம், காதல், வீரம், சோகம், பாசம், குறும்பு, கேலி, கிண்டல், பக்தி, விழிப்புணர்வு என வாழ்க்கையில் அவர் தொட்டுச் செல்லாத உணர்வுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அற்புதமான பல பாடல்களை எழுதி இருக்கிறார். அவ்வாறு பாடல்கள் எழுதுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடகங்களையும் திரைப்பட வசனங்களையும் எழுதி இருக்கும் கவிஞர் வாலியின் பெயர் பின்னணி என்ன தெரியுமோ? (கட்டிங் கண்ணையா)

எம்ஜிஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளுக்கு பாடல் எழுதிய இந்த மாபெரும் கவிஞரின் ஒரிஜினல் நேம் ரங்கராஜன். கவிதை புனைவதில் பெரும் வல்லவரான வாலி ஓவியம் வரைவதிலும் ரொம்ப இண்டரஸ்ட் கொண்டவர். சின்ன வயசிலேயே ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட வாலிக்கு அன்றைய காலகட்டங்களில் தமிழ் இதழ்களில் மிகச் சிறப்பான ஓவியங்களை மறைந்த மாபெரும் ஓவியரான மாலியின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்துச்சு. உயிரும் உணர்ச்சியும் நிறைந்த சித்திரங்களை கண்முன் நிறுத்தும் ஓவியர் மாலியின் மீது உள்ள ஆர்வத்தில் அவரைப் போலவே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவர் தன் ஃப்ரண்ட் பாபுவின் ஆலோசனைப்படி தன் நேமை வாலி அப்படீன்னு மாத்திக்கிட்டாராக்கும்

தீவிரமான வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவர்தான்- னாலும் தமிழ் கடவுளான முருகப்பெருமானின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். தன் சகோதரி நோய்வாய்ப்பட்டு மிக மோசமான சூழலில் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், முருகப்பெருமானை மனதார வேண்டிக்கிட்டார். அடுத்த நாளே, படுக்கையிலிருந்து எழுந்து நடக்கத்தொடங்கிட்டார் சகோதரி.அதை அடுத்து ஒரு பாடலை எழுதினார் ரங்கராஜன். எல்லாரும் ’எனக்குத் திறமை இருக்கிறது. எனக்கு வாய்ப்பு கொடுங்கள்’ அப்படீன்னு கம்பெனி கம்பெனியாக ஏறுவாய்ங்க பலரும். அப்படித்தான் சான்ஸ் கேட்பாய்ங்க்ச் ஆனா இந்த ரங்கராஜன், ஒரு போஸ்ட்கார்டில் மேற்படி முருகன் பாடலை எழுதி பின்னணிப் பாடகர் டி.எம்.எஸ்ஸுக்குத்தான்அனுப்பிவைச்சார். லட்டரில், தன்னைப் பற்றிய குறிப்பும் எழுதியிருந்தார். கடிதத்தைப் பார்த்த டி.எம்.எஸ், பாடலைப் படித்துவிட்டு பிரமிச்சுப் போயிட்டார். அதைப் பாட்டாகவே இசைத்துப் பாடிப்பார்த்தார். இன்னும் ஷர்க் ஆகி ‘உனக்குத் திறமை இருக்கிறது. சென்னைக்கு வா. உனக்கு சன்மானமும் தர வேண்டும்’ அப்படீன்னு அழைத்தார். அந்தப் பாடலை இன்னிக்கும் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ‘முருகா முருகா…’ -ந்னு மனமுருகி சிலிர்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். ரங்கராஜன் என்கிற வாலி எழுதி இன்றைக்கும் நாம் கேட்கிற அந்தப் பாடல்… ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்!’னாக்கும்

அப்படி சென்னை வந்த போது School Of Arts ல் சேர்ந்து ஓவியமும் பயின்றார். பின் மீண்டும் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்துக்கே சென்று அங்கு விளம்பர நிறுவனம் ஒன்றை தொடங்கினார். ஆனால் அதில் சரியான வருமானம் வராததால் ஒருமுறை தனது நண்பருடன் நாடகம் பார்க்க சென்றிருந்தபோது அந்த நாடகத்தில் உள்ள வசனத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டு நாடகங்களை எழுதுவதில் ஆர்வம் காட்ட தொடங்கிட்டார். அப்படி அவர் வசனம் எழுதி அரங்கேற்றம் செய்த நாடகங்களில் முதன்மையான மற்றும் மிகுந்த அளவில் பேசப்பட்ட நாடகம் தான் தளபதி.இருப்பினும் அதில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவுக்கு பாட்டு எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னைக்கு வந்தார். பல்வேறு இசையமைப்பாளர்களை சந்தித்து வாய்ப்புகள் கேட்டும் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என முடிவெடுத்தார்.

அப்பொழுது பிரபல இசையமைப்பாளரான எம்.பி ஸ்ரீனிவாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது ஒரு பாடலின் வரிகளை அவரிடம் வாசித்துக் காட்ட அந்த இசையமைப்பாளர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லையாம். பின் நாட்களில் அவரிடம் வாசித்துக் காட்டிய அதே வரிகளை தான் படகோட்டி என்ற படத்தில் பயன்படுத்தி மாபெரும் வரவேற்பை பெற்றார் கவிஞர் வாலி. அவை தான் “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்” என்ற பிரசித்தி பெற்ற வரிகள்.

பாடல்கள் எழுதுவதற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத காலகட்டங்களில் ஒரு முறை கவியரசர் கண்ணதாசனிடமிருந்து உதவியாளராக பணியாற்ற வாய்ப்பு வந்ததாம். ஆனால் கவிஞர் வாலி தானும் ஒரு பாடலாசிரியராகவே விரும்புவதால் இன்னொரு பாடல் ஆசிரியரிடம் பணி செய்வது ஏற்புடைய செயல் அல்ல என்று கருதி அதனை மறுத்து விட்டாராம்.

அப்போ சென்னை தியாகராய நகரில் உள்ள கிளப் ஹவுஸில் தங்கி இருந்தார். அங்கே நாகேஷும் வெங்கியும் தங்கியிருந்தார்கள். வெங்கி என்பது மறைந்த நடிகர் ஸ்ரீகாந்தின் நிஜப்பெயர். மூவரும் க்ளோஸ் பிரண்ட்ஸ். உணவையும் சரி… பசியையும் சரி… சேர்ந்தே அனுபவிச்சாய்ங்க. ஒன்றா கஷ்டப்பட்டாய்ன. சாப்பிடக் காசில்லாமலும் இருந்தாய்ங்க. ஆனால் சந்தோஷமாக இருந்தாய்ங்க. ஸ்ரீகாந்தின் கைக்கடிகாரம் பலமுறை அடகுக்கடைக்குப் போய்விட்டு பிறகு திருப்பப்பட்டிருக்கிறது.

அக்காலக் கட்டதில் சினிமாவில் சில பாடல்கள் எழுதினார். பெரிதாக ஹிட்டாகலை. எம்ஜிஆர் நடிச்ச ‘நல்லவன் வாழ்வான்’ படத்திலும் பாட்டெழுதினார். அதுவும் பேர் சொல்லலை. அப்போதுதான், டி.எம்.எஸ். வாலியை அழைச்சுக்கிட்டு போய், எம்.எஸ்.விஸ்வநாதனிடம் நிறுத்தினார். ‘’விசு, இவன் நல்லாப் பாட்டு எழுதுறான். வார்த்தைகளெல்லாம் அவ்ளோ சரளமா வந்து விழுது. இவனைப் பயன்படுத்திக்கோ. எனக்காக ஒரு வாய்ப்பு கொடு’’ அப்படீய்ன்னார்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் பிடிச்சிருந்துது.

அப்போது இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்துக்கான வேலையில் இருந்தார் மெல்லிசை மன்னர். டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் அழைச்சிக்கிட்டு போன எம்.எஸ்.வி. ‘’இவர் பேரு ரங்கராஜன். வாலிங்கற பேர்ல பாட்டெல்லாம் எழுதுறாரு. பெரியாளா வர்றதுக்கான அவ்ளோ திறமையும் இருக்கு. படத்துல பாட்டெழுத சான்ஸ் கொடுப்பா’’ -னு கேட்டார். அதுவரை கண்ணதாசனின் பாடல்களைக்கொண்டு ஏராளமாகப் படமெடுத்த கே.எஸ்.ஜி, யோசிச்சார். சொல்லப்போனால், கே.எஸ்.ஜி.யும் கண்ணதாசனும் அப்படியொரு திக்கஸ்ஸ் ப்ரண்ட்ஸ். யோசிச்சுட்டு, ‘’நீ சொல்றியேன்னு சான்ஸ் தரேன் விசு. ஆனா ஒரேயொரு பாட்டுதான் தருவேன்’’ அப்படீன்னார்.

அப்படித்தான் ‘கற்பகம்’ படத்தில் ‘அத்தைமடி மெத்தையடி’ என்ற பாடலை வாலி எழுதினார். டியூனுக்கு இம்மியும் பிசகாமல் வரிகள் அழகு காட்டி உட்கார்ந்துகொண்டு ஜாலம் செய்தன.அப்புறம் ஒரேயொரு பாட்டு, கூடவே இன்னொரு பாட்டு என்று அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதினார் வாலி. ‘மன்னவனே அழலாமா’, ‘அத்தை மடி மெத்தையடி’ முதலான எல்லாப் பாடல்களும் செம ஹிட்டாகின. ஒரேயொரு பாடல் எழுதச் சென்ற வாலி ஒட்டுமொத்த வாய்ப்பையும் பெற்றார். திரையுலகில், கற்பகம் மூலம் கற்பக விருட்சமென வளர்ந்தார்.

பின்னாளில் வாலி, எல்லோருக்கும் பிடிச்சவரானார். குறிப்பா, எம்ஜிஆருக்கும் பிடிச்சவரானார். சிவாஜிக்கும் பிடிச்சவரானார். ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் படம். அந்தப் படத்தில் ஒரேயொரு பாடலை எழுதுவதற்கு வாலியை அழைச்சாய்ங்க. கதையையும் பாட்டுக்கான சூழலையும் கேட்டார் வாலி. மளமளவென பாட்டெழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பாடல் ரெடியானதும் கேட்கிற வழக்கமுள்ளவர் எம்ஜிஆர். அவரும் வந்தார்.கேட்டு முகம் மலர்ந்தபடி “இது யார் எழுதினது?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ‘’வாலி எழுதினது’’ என்று தயங்கித் தயங்கிச் சொன்னாய்ங்க. உடனே ஒருநிமிடம் கூட யோசிக்கவில்லை எம்ஜிஆர்… ”பாட்டு வரியெல்லாம் நல்லாருக்கு. எல்லாப் பாடலையும் அவரையே எழுதச் சொல்லிருங்க’’ அப்படீன்னு சொல்லிட்டு போயிட்டார்.

அதை அடுத்தே ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ’ன்னார் . ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ ன்னார். ’தரை மேல் பிறக்கவைத்தான்.. எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தா’ அப்படீன்னார். ‘நானொரு குழந்தை’ -னார். இப்படி எல்லாப் பாடல்களையும் அதுவும் எம்ஜிஆர் படத்துக்கு எழுதினார். அவ்வளவு ஏன்… அந்தப் படத்துக்கு ‘படகோட்டி’ என்று டைட்டில் வைத்ததே வாலிதான்! அங்கே… தொடங்கியது வாலி ராஜ்ஜியம்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசர் கண்ணதாசன் என்று பலரும் பலவிதமான தத்துவப் பாடல்களையும் கொள்கைப் பாடல்களையும் எம்ஜிஆருக்கு எழுதி ஹிட்டுகளைக் கொடுத்திருந்தாலும் வாலி எம்ஜிஆருக்கு எழுதிய பாடல்கள், பின்னாளில், எம்ஜிஆரின் அரசியல் பிரச்சாரத்துக்குப் பயன்பட்டன; பலம் சேர்த்தன. ’நான் ஆணையிட்டால்’ -னு தெறிக்க விட்டார். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ அப்படீன்னு சூளுரைச்சார். எம்ஜிஆரின் அரசியல் வளர்ச்சிக்கு வாலியின் பாடல்கள் கட்டியம் சொல்லிச்சு என்றால் மிகையில்லை. ‘ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவனென்றாலும் விடமாட்டேன்’ என்ற வரிகளில் கட்டுண்டு போனாய்ங்க சினிமா ரசிகர்கள்.

பாலசந்தர் பக்கமும் வந்தார். முக்தா பிலிம்ஸ் பக்கமும் வந்தார். அன்றைக்கு இருந்த பெரிய நிறுவனங்களும் பெரிய இயக்குநர்களும் நடிகர்களும் வாலியை வாரியணைத்துக் கொண்டாய்ங்க.

‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’ என்று தன்னம்பிக்கை விதைச்சார். ‘அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா’வும் எழுதினார். ‘’வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா பாட்டை யார் எழுதினது? வாலியா? அவருக்கு என் பாராட்டுகளைச் சொல்லிருங்க’’ என்று இயக்குநர் பாலசந்தரிடம் பேரறிஞர் அண்ணா மனமுவந்து சொன்னாராக்கும்.

கவியரசு கண்ணதாசனின் பாட்டொளி, பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தபோதுதான் வாலியின் பாடல்களும் இடம்பிடிச்சுது. தனியாகத் தடம் பதிச்சுது. ஆனாலென்ன… ‘இது கண்ணதாசன் பாட்டுதானே?’ என்று நாம் நினைத்து சிலாகித்துக் கொண்டிருக்கிற நூற்றுக்கணக்கான பாடல்களை, வாலி எழுதியிருந்தார்.
உண்மையில் கண்ணதாசனுக்கு போட்டிதான் வாலி. ஆனால், இருவரும் முட்டிக்கொண்டதில்லை. திடீரென்று இரவு 11 மணிக்கு கவியரசர் போன் பண்ணுவார் வாலிக்கு. ’’யோவ், அந்தப் பாட்டைக் கேட்டேன்யா. என்னவோ செய்யுதுய்யா. நல்லா எழுதிருக்கே. அந்தப் பாட்டுக்காக, உனக்கு விஸ்கி அனுப்பிச்சிருக்கேன்யா. இன்னும் நிறைய எழுது’ அப்படீம்பார். இப்படித்தான் இரண்டு கவிஞர்களும் ஒருவரையொருவர் காதலிச்சாய்ங்க. இவற்றையெல்லாம் ஒளிவோ மறைவோ இல்லாமல் வாலியே மேடைகளில் சொல்லியிருக்கிறார்.

1973 ஆம் வருசம், ஏசி திரிலோகசந்தர் டைரக்ஷனில் வெளியான திரைப்படம் ‘பாரத விலாஸ்’. சிவாஜி கணேசன் நாயகனாக நடிச்ச அந்த படத்தில், கே ஆர் விஜயா கதாநாயகியா நடித்திருந்தார். கூடவே மேஜர் சுந்தர்ராஜன், தேவிகா, விகே ராமசாமி, ராஜ சுலோக்சனா, எம் ஆர் ஆர் வாசு, மனோரம்மா, சிவக்குமார், ஜெயசுதா, ஜெயசித்ரா, சசிகுமார், எஸ்வி ராமதாஸ், ஜே பி சந்திரபாபு, நடிகை ஸ்ரீதேவி, செந்தாமரை உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தாய்ங்க.. இப்படம் சாதி, மொழி, இனம், ஆகியவற்றிக்கு அப்பாற்பட்டது இந்தியன் என்கிற ஒற்றுமை உணர்வு என்பதை விளக்கும் விதத்தில் எடுக்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு வீட்டை மையமாக வைத்து இந்திய ஒற்றுமையை காட்டி இருந்தார் இயக்குனர். இந்த வீட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின், பஞ்சாபி, என பல மதங்களை, பல மாநிலத்தவர் இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதை பறைசாற்றிய பாடல், ‘இந்திய நாடு என் வீடு’ அப்படீங்கற பாடல்.

காலம் கடந்து இப்போ வரை ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும், சுதந்திர தின விழாவிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேச ஒற்றுமைக்காக இந்த பாடல் ஒளிபரப்பப்படுது. எம் எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான இந்த பாடலுக்கு வாலி வரிகள் எழுத இந்த பாடலை, எம்.வி.எஸ், உட்பட… டி.எம். சௌந்தரராஜன், கே வீரமணி, சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி, மலேசியா வாசுதேவன், ஆகிய 6 பேர் பாடி இருந்தாய்ங்க. அதேபோல் இந்த பாடலுக்கு, ஏராளமான இந்திய இசை கருவிகளை எம்.எஸ்.வி பயன்படுத்தி இருந்தார்.ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த பாடலை எழுதியதற்காக, தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை வாலி வாங்க முடியாது என மறுத்துள்ளார். இதற்கு காரணம் தேசிய விருதை கொடுக்க முடிவு செய்த மத்திய அரசு, கவிஞர் வாலிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி… இந்த பாடலுக்காக உங்களுக்கு தேசிய விருது கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே உங்களுடைய விவரங்களை எங்களுக்கு அனுப்புமாறு கடிதம் எழுதி இருந்துச்சு.

இந்த கடிதம் வாலியின் கோபத்தை சீண்டிப்புடுச்சு. என்னுடைய விபரங்கள் கூட தெரியாம எப்படி தேசிய விருது கொடுக்க அவிய்களால் முடியுது. இது எனக்கு அவமரியாதை இல்லையா? னு சொல்லி மத்திய அரசிடம் இருந்து வந்த கடிதத்தை கிழித்துப் தூக்கி போட்டது மட்டுமின்றி என்னுடைய விபரங்களை நானே அனுப்பி, அந்த விருதை வாங்கினால் அது காசு கொடுத்து விருது வாங்குவதற்கு சமம். மக்கள் என் பாடலை ரசித்து கேட்பது தான் எனக்கு தேசிய விருதை விட பெரியது என கூறி தேசிய விருதை மறுத்து புட்டார்

’எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு பாட்டு. முதல் வரி வந்துடுச்சு. அடுத்த வரி பிடிபடலை. அப்போ கலைஞர் கருணாநிதி வந்தார். ‘பாட்டு தயாரா?’ கேட்டதும். ‘’முதல் வரி கிடைச்சிருச்சு தலைவரே. அடுத்த வரி கிடைக்காம அப்படியே உக்காந்திருக்கேன்’’ ன்னார் வாலி. உடனே கலைஞர், ‘முதல் வரியைச் சொல்லு’னதும். ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’ அப்படீன்னார் கலைஞர். ‘இந்த வரி அவருக்குத்தான் (எம்ஜிஆருக்கு) பொருத்தமா இருக்கும்’’ னும் சொன்னார் கலைஞர். மதியத்துக்குப் பிறகு வந்த எம்ஜிஆர், பாடலின் வரிகளைக் கேட்டுட்டு, ‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’ என்று எழுதியதைப் பாராட்டி, வாலியை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். உடனே வாலி, ‘’இந்த முத்தத்தை கலைஞருக்குக் கொடுங்க சின்னவரே. அந்த வரியைச் சொன்னதே அவர்தான்’’ னு சொல்ல, கலைஞரைக் கட்டித்தழுவிக்கொண்டாராம் எம்ஜிஆர். இதை கலைஞர் முன்னிலையில் மேடையிலேயே சொல்லியிருக்கிறார் கவிஞர் வாலி

மூச்சுத் திணறல், நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2013 ம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி தனது 81 ஆவது வயதில் மண்ணுலகை விட்டு மறைந்த கவிஞர் வாலி இன்றும் தனது பாடல் வரிகளால் அனைவரின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆந்தை குழுமம் இன்று கவிஞர் வாலிக்கு94 ஆவது பிறந்த நாள் என்பதை நினைவுகூர்ந்து பெருமைப்படுகிறது

error: Content is protected !!