இயக்கம்: சுரேஷ் ராஜகுமாரி
ஒளிப்பதிவு: மதேஷ் மணிக்கம்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
தொகுப்பு (எடிட்டிங்): பிலோமின் ராஜ்
கதை: தமிழ்
ஒளிப்பதிவு: மதேஷ் மணிக்கம்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
தொகுப்பு (எடிட்டிங்): பிலோமின் ராஜ்
கதை: தமிழ்
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ள படம் சிறை. படத்தில் விக்ரம் பிரபுவுடன், எல்.கே. அக்ஷய் குமார், அனீஷ்மா அனில்குமார், ஆனந்த தம்பிராஜய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். டாணாக்காரன் தமிழ் கதையை எழுதியுள்ளார்.
படம் எப்படி இருக்கிறது ?
இந்த வருடத்தில் கட்டங்கடைசியாக வந்திருக்கும் ஒரு நல்ல படம்.
குற்றம் சாட்டப்பட்டு, கோர்டுக்கு கேஸே வராமல், இந்தியா முழுக்க ஏகப்பட்ட கைதிகள், தான் செய்த குற்றத்திற்கான தண்டனைக்காலம் தாண்டியும் சிறையில் இருக்கிறார்கள். அதிலும் அவர்கள் முஸ்லீமாக இருந்தால் அது தரும் சிக்கல்கள் இன்னும் அதிகம். அப்படி ஒரு அப்பாவியை வாய்தாவுக்கு, விக்ரம் பிரபு அழைத்துப் போகும்போது, நடைபெறும் சம்பவங்கள் தான் இந்தப்படம்.
தெளிவாக எழுதி, அதை அதே உணர்வுகளுடன் திரையிலும் கொண்டு வந்திருக்கிறார்கள்.
உண்மைக்கதை எடுப்பதில் நிறைய பிளஸும் சில மைனஸுகளும் இருக்கிறது.
உண்மைக்கதையில் வலிந்து உணர்வுகளை திணிக்க வேண்டியதில்லை, அதிலேயே முழுக்க முழுக்க இரத்தமும் சதையுமாக வாழ்க்கை இருக்கும். அதை சரியாக சொல்லிவிட்டாலே போதும்.
இது ஒரு Police Procedural Drama. எப்போதுமே இந்த மாதிரி ஒரு பணியின் பின்னணியில் வரும் கதைகள், உலகம் முழுக்க ஏராளம், அதன் பலம் அதிலிருக்கும் டீடெயிலிங்.

இயக்குநர் தமிழ் போலீஸ் துறையில் வேலை பார்த்ததால் அவரிடம் பல கதைகள் கொட்டிக் கிடக்கிறது. அதே போல போலீஸ் நடைமுறை பற்றிய விவரங்கள் அவருக்கு அத்துபடி.
இதே கதையை அந்த துறை சாராத வேறு யாராவது எழுதியிருந்தால் இத்தனை துல்லியமாக விவரங்களோடு வந்திருக்குமா என்பது சந்தேகம் தான். அத்றக்காவே தமிழுக்கு வாழ்த்து சொல்லாம்.
முதல் படம், இன்னொருவரின் கதை, தான் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை, ஆனால் அதை எந்த தடுமாற்றமும் இல்லாமல் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி.
ஒரு வேளை இது வெற்றிமாறன், தமிழ் எடுத்திருந்தால் இதே போல் வந்திருக்க சான்ஸ் இல்லை.
சுரேஷ் எங்கே சினிமாத்தனம் வேண்டுமோ அங்கே ஹீரோயிசம் முதற்கொண்டு, அதை தயங்காமல் வைத்து விடுகிறார். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் எங்கே எந்தளவு டெம்போ தூக்க வேண்டுமோ அதை சரியாக செய்திருக்கிறார்.

அந்த இளம் ஜோடி விக்ரம் பிரபு காலில் விழுவதை வெற்றியோ, தமிழோ வைத்திருக்க மாட்டார்கள் யோசித்திருப்பார்கள், அதே போல் போலீஸ் ஸ்டேஷனில் முஸ்லீம் பெயர் குறித்து வரும் காட்சியை, இத்தனை ஜனரஞ்சகமாக எடுத்திருக்க மாட்டார்கள். அதில் சுரேஷ் முதல் பட தடையைத் தாண்டி தெளிவாக சினிமாவாக்கியிருக்கிறார்.
இப்படத்தில் நடித்த அத்தனை பேருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். விக்ரம் பிரபுவிடம் பெரியளவில் நிதானம் வந்திருக்கிறது. அவர் நடிப்பில் இறுகப்பற்று படத்திற்கு பிறகு இப்படத்திலும் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.
ஹீரோவுக்கு கேரள முஸ்லீம் அம்மா, ஹீரோயின் அக்கா, ஊர்க்காரர்கள், விக்ரம் பிரபு ஜோடி அனந்தா, என இந்தப்படத்தில் காஸ்டிங்கிலேயே பாதி படத்தை ஜெயித்து விட்டார்கள். அவர்கள் முகம் திரையில் இருப்பதே பாதி நடிப்பை சரிசெய்து விடுகிறது.
அக்ஷய், அஷ்மிதா இவர்கள் தான் இப்படத்தின் மையம் இவர்கள் புதுமுகம் போலவே இல்லை. இருவரின் கெமிஸ்ட்ரியும் அட்டகாசமாக ஒர்கவுட் ஆகியிருக்கிறது. அஷ்மிதா அழுகையும் சிரிப்பும் தான் படத்தை தாங்குகிறது.
மியூசிக் எடிட் கேமரா மூன்றுமே இப்படத்திற்கு பெரிய பலம்.
டைட்டில் ஆரம்பிக்கும்போதே அந்த பின்னணி இசையில் உலகத்திற்குள் கூட்டிப்போய் அசத்தியிருக்கிறார் ஜஸ்டின்.
முதல் காட்சியாக வரும் பஸ் காட்சி ஆரம்பித்து, போலீஸ் ஸ்டேஷன் இரவுக்காட்சி, நீதிமன்ற காட்சி. க்ளைமாக்ஸ் துரத்தல் காட்சி என, அந்தந்த இடங்களில் நாமும் இருப்பது போலவே கேமரா செய்துள்ளார் மாதேஷ்.
அரசாங்கம் ஒரு இயந்திரம், அதன் நடைமுறைகள் அது பிழைத்துக்கொள்ள மட்டும் தான் வழி பார்க்கும், எப்போதும் எளியவனுக்கு நியாயம் தராது. ஆனால் அதில் இருப்பவர்களுக்கு மனது இருக்கிறது. என்பதை சொல்கிறது இந்தப்படம்.
சிறை இந்த வருடத்தில் தமிழ் சினிமாவுக்கு முக்கியமான படைப்பு 
தவறவிடாதீர்கள்.
