இயக்கம் – தனுஷ்
தயாரிப்பு – Dawn Pictures , wunderbar films
நடிப்பு – தனுஷ் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ஷாலினி
தனுஷ் இயக்கத்தில் நிறைய முன்னேற்றங்களுடன் வந்திருக்கும் படம்.
பவர்பாண்டி படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு ஃபீல் குட் படம் செய்துள்ளார்.
கிராமத்தில் சிறிய இட்லி கடை வைத்து குடும்பத்தை காப்பாற்றும் சிவநேசன் (ராஜ்கிரண்). கேட்டரிங் படித்து முடிக்கும் அவரது மகன் முருகன் (தனுஷ்), வெளிநாட்டில் பெரும் பணக்காரரான விஷ்ணு வர்தனின் (சத்யராஜ்) ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாரன்ட்டில் வேலைக்கு சேர்கிறார். இங்கு அவரது திறமைக்கு பாராட்டுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கின்றன. தன் முதலாளி மகளையே கல்யாணம் செய்து கொள்ளும் அளவு உயர்கிறார்.
கல்யாண நடக்கவிருக்கும் நேரத்தில் கிராமத்தில் தந்தை இறந்துவிட ஊருக்கு வரும் தனுஷ் தன் தந்தையின் கடைசி ஆசையாக இட்லி கடையை எடுத்து நடத்துகிறார். அதனால் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறார் என்பது தான் இப்படம்.
தனுஷ் தன் முந்தைய படங்களிலிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறார். திரைக்கதை எந்த இடைஞ்சலும் இல்லாமல் பரபரவென ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது.
தனுஷ், நித்யாமேனன், சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி, பார்த்திபன் என ஒவ்வொரு கேரக்டரும் மிக விரிவாக மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது சிறப்பு.
ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு நியாயத்தை வைத்து அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதைப் போல ஒரு திரைக்கதை எழுதியதற்கு தனுஷை பாராட்டலாம்.
படத்தின் மிகப்பெரிய பலம் நடிப்பு தான் அத்தனை பேரும் வெகு சிறப்பான நடிப்பை தந்துள்ளார்கள். ராஜ்கிரண் அழகாக பொருந்திப்போகிறார். தனுஷ் நடிப்பை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவருக்கு அடுத்து நித்யா மேனன் கிராமத்து பெண்ணாக அசத்தியுள்ளார்.
அருண் விஜய் எரிச்சல் வர வைக்கும் அளவு வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். பார்த்திபனுக்கு சின்ன வேடம் என்றாலும் அவர் தரும் சர்ப்ரைஸ் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பெரிய நட்சத்திர பட்டாளம் எல்லோரும் சிறப்பு.
வசனங்கள் படத்தின் இன்னொரு பலம். அப்பா அம்மாவை விட்டுட்டு போற பிள்ளைங்க எல்லாம் ஊதாரித்தான் என தனுஷ் பேசும் வசனம் எமோஷனல் டச். இப்படி பல இடங்களில் வசனம் அருமை.
ஜீவி பிரகாஷ் இசையில் தூள் கிளப்பியிருக்கிறார். ஒவ்வொரு காட்சிக்கும் அவரின் இசை ஒரு படி முன்னே என்று எடுத்துச் செல்கிறது.
படத்தில் பாங்காக் காட்சிகளை காட்டிலும், கிராமத்து காட்சிகள் வெகு அழகாக எடுக்கப்பட்டுள்ளது. எடிட்டிங்கில் மட்டும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம்.
நாம் என்ன தான் தூரம் போனாலும் எத்தனை உயரத்திற்கு போனாலும், நமக்கு உயிர் தந்த உறவுகளையும் மண்ணையும் மறக்க கூடாது என்பதை அழுத்தமாக பேசுகிறது இட்லி கடை.
மொத்தத்தில் ஒரு அழகான ஃபீல் குட் மூவி.