தமிழ் திரையுலகில் குறிப்பிடதக்க படைப்புகளால் புகழ்பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ளது விடுதலை 2 திரைப்படம்.
விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து துவங்கி அப்படியே ஆரம்பித்து வாத்தியாரின் வாழ்க்கை கதையை சொல்கிறது விடுதலை 2.
வாத்தியார் கைதுக்கு பிறகு காவலதிகாரி, கலக்டர், அமைச்சர் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து அந்த கைதை எப்படி அறிவிக்கலாம் என விவாதிக்கிறார்கள்.
கைது விவரம் வெளியில் பரவ அதை தடுக்க நினைத்து, வாத்தியார் விஜய் சேதுபதியை, காட்டுக்குள் சிறு குழுவை வைத்து வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள்,
“பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையைக் கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன? அவரை உருவாக்கியது யார்? ஆயுதப் போராட்டத்தை அவர் கையில் எடுத்ததற்கான காரணம் என்ன?” என்பதையெல்லாம் தன்னுடன் வரும் குழுவுக்கு கதையாக விவரிக்கிறார் வாத்தியார்.
இன்னொரு பக்கம் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு இவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என தீர்மானிக்கிறது அதிகார வர்க்கம். முடிவில் என்னாவகிறது என்பது தான் படம்.
முந்தைய படங்கள் போல் இல்லாமல் இந்தப்படம் முழுக்கவே அரசியல் பாடமெடுத்திருக்கிறார் வெற்றிமாறன்.
முதல்பாகத்தில் சூரியின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருந்தது ஆனால் இந்த பாகத்தில் சூரியே கேமியோ ரோல் தான் செய்துள்ளார் முழுக்க முழுக்க விஜய் சேதுபதி தான். வாத்தியாராக வாழ்ந்திருக்கிறார்.
விஜய் சேதுபதி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை கென் கருணாஸ், கிஷோர் கதாப்பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்ட விதமும், அதன் அரசியலும் ஆழம். அவர்கள் இருவருமே அருமையாக நடித்துள்ளனர். மஞ்சு வாரியார் கொஞ்சம் ஒட்டவில்லை ஆனால் நடிப்பில் அவர் குறை வைக்கவில்லை
தமிழகம் மட்டுமல்லாது நாடு எத்தைகைய அடிமைமுறையை தாண்டி வந்துள்ளது எனும் ஆழமான அரசியலை விவரிக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார் வெற்றிமாறன். இது கண்டிப்பாக இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு.
மாறி மாறி நான் லீனியராக வரும் திரைக்கதையில் சில நேரம் இறந்தவர்கள் மீண்டும் வருவதால் ரசிகர்கள் குழம்பலாம், மாறி மாறி விஜய்சேதுபதி அரசியல் பேசிக்கொண்டே இருப்பதும் அயர்ச்சியைத் தருகிறது.
படத்தின் முதல் பாதியில் அதீத வன்முறை, இரண்டாம் பாதியில் தான் உண்மையில் கதை சூடு பிடிக்கிறது. வேல்ராஜின் கேமரா காட்டுக்குள் புகுந்து விளையாடுகிறது. இளைராஜாவின் பின்னணி இசை அற்புதம். என்ன தான் இருந்தாலும் முதல் பாகம் போல இல்லை என்ற ஏக்கம் ஏற்படுகிறது. ஆனாலும் தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம்.