திரிஷா நடித்திருக்கும் தி ரோட் திரைப்படம் எப்படி இருக்கிறது ?

 

திரிஷா நாயகியாக நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் டான்சிங் ரோஸ் ஷபீர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அருண் வசீகரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சாம் சி. எஸ்  இசையமைத்துள்ளார். ஹீரோயினை முன்னிலைப்படுத்திய கதையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாகக் கலக்கி வரும் த்ரிஷா நடித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களின் அமைதி தான் அடுத்தடுத்த தவறுகளுக்கு காரணம், அவர்கள் அமைதியாக போகக் கூடாது என்பது தான் படத்தின் மையம்

அழகான குடும்பம், குழந்தை என வாழ்ந்து வரும் த்ரிஷா, சாலை விபத்தில் தன் கணவர், குழந்தையை பரிகொடுக்கிறார் ஆனால் தன் கணவர், குழந்தையை த்ரிஷா இழந்த NH 44 சாலையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர் சாலை விபத்துகள் நடப்பது த்ரிஷாவுக்கு தெரிய வருகிறது.


இன்னொரு மறுபுறம் கல்லூரி ப்ரொஃபசராக வரும் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் தன் கல்லூரி மாணவி ஒருவர் தன் மீது சுமத்தும் அபாண்டமான பழியால் நற்பெயர், மதிப்பு, உறவுகள் என எல்லாவற்றையும் இழக்கிறார்.
இழப்புகளுடன் நிர்கதியாக நிற்கும் இவர்கள் இருவரையும்  NH 44 எனும் சாலை எப்படி ஒன்றிணைக்கிறது என்பது தான் கதை

ஒரு குறிப்பிட்ட சாலையில் நடக்கும் தொடர் விபத்துகளுக்கு காரணம் என்ன ? அதற்கான விடையை திரிஷா தேடுவது தான் படம்

இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை எனும் மோடில் கணவர் குழந்தைகளின் மரணத்தின் பின்னணியை ஆராயும் த்ரிஷாவுக்கு கனமான பாத்திரம். ஆக்ரோஷம் தெறிக்க விபத்துகளுக்கான காரணம் தேடி  போராடும் த்ரிஷா, நம்மை படத்துடன் ஒன்ற வைக்க முயல்கிறார். அதே நேரம் அழகான திரிஷா பல இடங்களில் தெரிவது மைனஸ்.

மறுபுறம் அனைத்தையும் இழந்து பணம் இல்லாமல் நிர்கதியாக நிற்கும் டான்சிங் ரோஸ் ஷபீருக்கு இது மற்றுமொரு சிறப்பான கதாபாத்திரம். ஆக்ரோஷம், கோபம், ஏமாற்றம் என அனைத்து உணர்ச்சிகளையும் தன் நடிப்பில் வெளிப்படுத்தி படத்துக்கு மற்றுமொரு தூணாக விளங்குகிறார்.

நாயகியை விட வில்லனின் கதை கனமாக சொல்லப்பட்டிருக்கிறது வில்லன் மீது தான் நமக்கு பரிதாபம் அதிகமாக வருகிறது.

பல லாஜிக் மீறல்களுடன் இருக்கும் இரண்டாம் பாதியும் அதன் நீளமும் படதிற்கு வேகத்தடை.  இரண்டாம் பாதியில் பல ட்விஸ்ட்கள் நிறைந்திருந்தாலும் அவை சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்கு பதிலாக படம் எப்போது முடியும் எனும் கேள்வியையுமே எழவைக்கிறது.

அலுப்பு தட்டும் இடங்களிலும் நம்மை படத்துடன் ஒன்ற வைத்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் சாம் சி.எஸ். ஒளிப்பதிவு நன்றாகவே இருக்கிறது. திரில் பயணத்தை சுவாரஸ்யமாக்கி, லாஜிக் ஓட்டையை அடைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.