டீமன் திரை விமர்சனம் !!

 

ஹாரர் பாணியில் காமெடி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்துள்ள படம்.

டீமன் உண்மையில் பயமுறுத்துகிறதா ?

உதவி இயக்குநராக இருந்து, தனியாக படம் இயக்க முயற்சிக்கும் நாயகன், அதற்கான வாய்ப்பு கிடைத்து உற்சாகத்தில் மிதக்கிறான். சூட்டோடு சூடாக வாடகைக்கு வீடு பிடித்து குடியேறுகிறான். ஒரு பெண் மீது பிரியம் தொற்றிக் கொள்ள, அவளைப் பின் தொடர்ந்து மனதில் இடம் பிடிக்கிறான். அடுத்து வருகிறது பிரச்சனை அவன் வசிக்கும் வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி கனவில் வந்து அவனை பலவிதமாய் பயமுறுத்துகிறது. அவன் உயிருக்கே ஆபத்தாகிறது. அந்த அனுமானுஷ்ய சக்திக்கு பின் இருக்கும் மர்மம் என்ன என்பதே படம்

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரே இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த படத்திற்கான கதையைக் கருவாக்கி இயக்கியிருக்கிறார் ரமேஷ் பழனிவேல். (இயக்குநர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இவர்.) கதையை யோசித்த விதத்திலும் அதை சொன்ன விதத்திலும் கவர்கிறார்.

நாயகனாக சச்சின் முழுப்படமும் இவர் முதுகில் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்கு பொருத்தமாக, இளமையாக, லட்சணமாக இருக்கிறார் கதையின் நாயகனாக வருகிற சச்சின். படத் தயாரிப்பாளரிடம் தன்னம்பிக்கையோடு கதை சொல்லி படம் இயக்க வாய்ப்பு பெறும்போது காட்டும் மகிழ்ச்சியாகட்டும், ‘சினிமாகாரனுக்கு பெண் தர முடியாது’ என மறுப்பவரின் பெண்ணையே தன் அணுகுமுறையால் காதலியாக்கிக் கொள்ளும் சாமர்த்தியமாகட்டும், தன் வசிப்பிடத்தை ரசனையாய் அலங்கரிப்பதாகட்டும், பேய்களோடு போராடி மீள்வதாகட்டும், நடிப்பில் சச்சின் சிக்ஸர் அடித்துள்ளார். அபர்நதிக்கு சின்ன பாத்திரம் ஆனாலும் குறைவில்லை.


அமானுஷ்ய சக்திகளின் பின்னணியை விவரிக்கும் காட்சிகளில் நடித்துள்ளவர்களும், கதைநாயகனின் நட்பு வட்ட நபராக வருகிற கும்கி அஸ்வின் உள்ளிட்டோரின் நடிப்பும் கதையின் தேவையை கச்சிதமாய் நிறைவேற்றியிருக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘அஸ்வின்ஸ்’படத்தில் இசைக் கலவை செய்து கவனம் ஈர்த்த
ரோனி ரபேல் இந்த படத்தில் பின்னணி இசைக்காக தந்திருக்கும் உழைப்பு கதைக்களத்துக்கு சுறுசுறுப்பூட்டியிருக்கிறது.
ஆர் .எஸ். அனந்தகுமாரின் ஒளிப்பதிவு நேர்த்தி.

பொதுவாக பேய்ப்படம் என்றால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பங்களாவையே கதைக்களமாக்கும் வழக்கத்தை மாற்றி, பரபரப்பான நகரத்தின் அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் சம்பவங்கள் நடப்பது நன்றாக இருக்கிறது.

ஆனால் எக்கச்சக்க பேய்ப்படங்கள் வந்துவிட்டதால் இப்படத்தின் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருந்தால் டீமன் படத்தை இன்னும் பராட்டியிருக்கலாம்.