இயக்குநர் : விநாயக் சந்திரசேகர்
நடிப்பு : மணிகண்டன், மேகா ரகுநாத், ரமேஷ் திலக்
இசை : சான் ரோல்டன்
தயாரிப்பாளர் : மகேஷ் ராஜ் பெசிலியன்
எப்போதாவது பூக்கும் குறிஞ்சிப்பூக்களில் ஒன்றாக மலர்ந்திருக்கிறது குட்நைட்.
ஒரு சிறு குறட்டை எத்தனை பிரச்சனையாகும். அதுதான் படமே !!
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மோகன் (மணிகண்டன்) ஐடியில் வேலை செய்து வருகிறான் அவன் தூங்கும் போது, தான் விடும் குறட்டை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அந்தக் குறட்டையால் தன் குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற பல இடங்களில் அவமானப்படும் அவனை ஒரு கட்டத்தில் அதனை காரணம் காட்டி காதலியும் கைவிட்டு சென்று விடுகிறாள்.இப்படி விரக்தியின் உச்சத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் மோகனின் வாழ்க்கையில் தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் அனு அறிமுகம் ஆகிறாள். அனுவிடம் கடைசி வரை தன்னுடைய குறட்டை பிரச்சினையை மறைத்து கல்யாணம் செய்து கொள்கிறான். இரவு வாழ்க்கையில் குறட்டை பூகம்பமாக வெடிக்கிறது. அதன் பின்னர் என்ன ஆனது? மோகன் தன் குறட்டைப்பிரச்சினையை சரி செய்ய என்ன செய்தான் ? என்பது தான் இப்படத்தின் கதை.
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர்கள் தேர்வு , கதாநாயகியாக மீதா. கள்ளம் கபடம் இல்லாமல் அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு பார்ப்பதற்க்கு அழகாக உள்ளது . மாமாவாக ரமேஷ் திலக். காமெடியில் ஒரு பக்கம் அவர் கலக்கினாலும், குடும்பத்தை அரவணைத்துக்கொண்டு செல்வதிலும், மனைவி ரேச்சலிடம் அடங்கிப்போகும் இடத்திலும் இப்படி ஒரு மாமா நமக்கில்லையே என்ற உணர்வை கொடுத்து விடுகிறார். ரமெஷ் திலக்கின் இந்த நடிப்பு நீண்ட நாட்களுக்கு பேசப்படும் , ரேச்சலின் நடிப்பு யதார்த்தத்தின் உச்சம்.தாத்தா பாட்டியாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேலும், கெளசல்யா நடராஜனுக்கும் இடையே உள்ள புரிதலும், காதலும் நம்மை கவரும் வண்ணம் உள்ளது,
இப்படி கதையை எழுதியது மட்டுமல்லாமல் அதனை இதயத்துக்கு நெருக்கமாக வரும் விதத்தில் திரையில் காட்சிப்படுத்தியதற்காக இயக்குநர் விநாயக் சந்திரசேகரனை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். தான் எழுதிய ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கனகச்சிதமான நடிகர்களை அவர் தேர்வு செய்ததிலேயே அவர் பாதி ஜெயித்து விட்டார். மீதி வேலையை ஒளிப்பதிவும் இசையும் பார்த்துக்கொண்டது ,
இந்த படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் நம் வீட்டில் நடப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது. கலை இயக்குனர் தனது வேலையை அற்புதமாக செய்துள்ளார் , படத்தின் பல காட்சிகள் எமோஷன் ட்ராவல் செய்தாலும், அதற்குள் ஒளிந்திருக்கும் நகைச்சுவை நம்மை துளியும் கூட சோர்வடையாமல் பார்த்துக்கொண்டது. குறிப்பாக கர்ப்பிணி ஆகியே தீர வேண்டுமா என ரேச்சல் எழுப்பும் கேள்விகள் சமுதாயம் கட்டமைத்திருக்கும் பழமை வாதத்திற்கு தேவையான பாடம். அதே போல மணியின் தங்கைக்காக அவனின் காதலினிடம் மீதா வைக்கும் வாதம் அதகள ரகம். மொத்ததில் ‘குட் நைட்’ .. கட்டுமரக்கப்பலில் செல்லும் அழகான கடல்பயணமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்தப்படத்தின் மொத்தப்பலம் மணிகண்டன் குறட்டை பிரச்சனை உள்ள ஒரு சாதரண இளைஞனாக கலக்கியிருக்கிறார். மாமனோடு கூத்தடிப்பதும், அக்காவிடம் குழைவதும், அம்மாவிடம் திட்டு வாங்குவதும், தங்கையிடம் எகிறுவதும். பொண்டாட்டியிடம் உயிராய் இருப்பதுமாக அட்டாகசப்படுத்தியிருக்கிறார்.
ஒரு சின்ன பிரச்சனையை வைத்துக்கொண்டு, அதில் ஒவ்வொரு முடிச்சாக இழுத்து ஒரு அழகான திரைப்படத்தை தருவது எப்படி என பாடமெடுத்திருக்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில் ”குட் நைட்” படம் ஒரு மேஜிக்