சிம்பு & ஹன்ஸிகா இணைந்து நடித்திருக்கும் ‘மஹா’ படத்தினை வெளியிட தடை கோரி வழக்கு!

0
414

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மஹா’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஹன்ஸிகா நடிக்கும் 50-வது திரைப்படமாகும். ஹன்ஸிகாவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இது இவருக்கு 25-வது படமாகும்.

‘Magnetizing, Alluring, Hidden & Aggressive’ ஆகியவை இந்த ‘MAHA’ படத்தின் தலைப்பின் முதல் எழுத்துக்களை குறிப்பவை. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களில் ஹன்சிகா மோத்வானியின் ஸ்டில்ஸுக்கு பொருத்தமாகவும் இவை அமைந்திருந்தன. அந்தப் போஸ்டரில் நடிகை ஹன்சிகா மோத்வானி காவி உடையில் கஞ்சா புகைப்பதுபோல போஸ் கொடுத்திருந்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்கூட ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.

தற்போது படம் முழுவதும் முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. ஆனால் கொரோனா லாக் டவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், ஓடிடி தளத்தில் இந்தப் படத்தைத் திரையிடும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி அந்தப் படத்தின் இயக்குநரே நீதிமன்றத்தை அணுகியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

படத்தின் இயக்குநர் யு.ஆர்.ஜமீல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தனக்கு இந்தப் படத்தை இயக்குவதற்காக தனக்கு 24 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாகவும் ஆனால் இதுவரையிலும் தனக்கு 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டுள்ளதால், இன்னமும் 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பாக்கியாக தர வேண்டியிருக்கிறது.

மேலும், இந்தப் படத்தின் ஒரிஜினல் கதாசிரியரான தனக்கே தெரியாமல் கதைகளில் மாற்றம் செய்து உதவி இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்கி இணைத்திருக்கிறார்கள். இதனால் தனக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதுவரையிலும் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும்..” என்று இயக்குநர் ஜமீல் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு படத்தின் தயாரிப்பாளர், படத்தின் உதவி இயக்குநர், படத் தொகுப்பாளர் மூவருக்கும் உத்தரவு பிறப்பித்து வழக்கையும் தள்ளி வைத்துள்ளார்.