தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்!

தமிழ் சினிமா துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட சங்கம் ‘தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’. பழமையான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய தூண்களாக இருந்த அனைத்து முன்னணி தயாரிப்பாளர்களும் ஒன்றிணைந்து இந்தச் சங்கத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், தற்போது படமெடுத்து வரும் தயாரிப்பாளர்களின் நலனை காக்க வேண்டியுமே இந்த புதிய சங்கம் ஆரம்பிக்கப்பட்டதாக இதனை தோற்றுவித்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சங்கம் துவங்க வித்திட்டவர்கள் இயக்குநர் இமயம் பாரதிராஜா, டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, எஸ்.எஸ்.லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோராவார்கள்.

இந்த புதிய சங்கம் முறைப்படி தமிழக அரசின் பதிவாளர் துறையில் பதிவு செய்யப்பட்ட நிலையில் சங்கத்தின் முதல் மற்றும் புதிய நிர்வாகிகளை முறைப்படி தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.

கொரோனா தாக்குதலின் பொருட்டு இந்த நிகழ்வு Zoom அப்ளிகேஷன் மூலமாகவே நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் முன்பாகவே இந்தச் சங்கத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்த சங்கத்தின் விதிமுறைகளின்படி தேர்தலில் நிற்கவும், வாக்களிக்கவும் தகுதியுள்ள 50 உறுப்பினர்களில் 38 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திலேயே புதிய நிர்வாகிகள் அனைவரும் போட்டியில்லாமல் ஒருமித்தக் கருத்தோடு தேர்வானார்கள்.

திரு.கே.விஜயகுமார் தேர்தல் அலுவலராக இருந்து இந்தத் தேர்தலை நடத்திக் கொடுத்திருக்கிறார்.

இந்தத் தேர்தலில்

தலைவர் – பாரதிராஜா

பொதுச் செயலாளர் – டி.சிவா

துணைத் தலைவர்கள் – ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு

பொருளாளர் – டி.ஜி.தியாகராஜன்

இணைச் செயலாளர்கள் – எஸ்.எஸ்.லலித்குமார், சுரேஷ் காமாட்சி

என்று புதிய நிர்வாகிகள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் வந்திருந்த உறுப்பினர்களில் “செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பும் நபர்கள் போட்டியிடலாம்…” என்ற அறிவிப்புக்கு பின்பு 12 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட முன் வந்தார்கள். வேறு யாரும் போட்டியிட முன் வராததால் இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 12 செயற்குழு உறுப்பினர்கள் :

 1. எஸ்.நந்தகோபால் (மெட்ராஸ் எண்ட்டெர்பிரைசஸ்)
 2. பி.மதன் (எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்)
 3. சி.விஜயகுமார் (திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட்)
 4. ராஜசேகர கற்பூர சுந்தர பாண்டியன் (2டி எண்ட்டெர்டெயின்மெண்ட்)
 5. ஜி.டில்லி பாபு (ஆக்சஸ் பிலிம் பேக்டரி)
 6. கார்த்திகேயன் சந்தானம் (ஸ்டோன் பென்ச் புரொடெக்சன்ஸ்)
 7. ஆர்.கண்ணன் (மசாலா பிக்ஸ்)
 8. சுதன் சுந்தரம் (Passion Studios)
 9. விஜய் ராகவேந்திரா (ஆல் இன் பிக்சர்ஸ்)
 10. ஐ.பி.கார்த்திகேயன் (பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்)
 11. நிதின் சத்யா (Shveth Group)
 12. பி.ஜி.முத்தையா (பி.ஜி. மீடியா ஒர்க்ஸ்)

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிர்வாகிகளின் பதவிக் காலம் 2020 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2022 ஆகஸ்ட் 31-ம் தேதிவரையிலும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.