கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ வழங்கப்பட்டது.
2012-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘நான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரி யராக அறிமுகம் ஆனவர் இலங்கையை சேர்ந்த பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின். ‘நான்’ படத்தில் ஒரு பாடலாசிரியரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு விஜய் ஆண்டனி அறிவித்த சர்வதேச ரீதியான பாடலை இயற்றும் போட்டியில் கலந்துகொண்ட 20,000 போட்டியாளர்களில் முதலிடம் பெற்றவர் தான் இந்த அஸ்மின்.. அதுமட்டுமல்ல ஜிப்ரான் இசையில் வெளியான அமரகாவியம் படத்தில் இவர் எழுதிய ‘தாகம் தீர’ என்கிற பாடல் தயாரிப்பாளர் ஆர்யாவையோ இசையமைப்பாளர் ஜிப்ரானையோ நேரில் சந்திக்காமல் எழுதிய பாடலாகும். அந்த பாடலுக்காக சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான எடிசன் விருதையும் இவர் பெற்றுள்ளார்..
கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு கவியரங்கில் இவர் பாடிய மரபுக்கவிதையை பாராட்டிய கவிஞர் வைரமுத்து இவரது மரபு அறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் பத்திரிகை துறையில் பணியாற்றிய இவர் அதன்பிறகு இலங்கையிலுள்ள வசந்தம் தொலைக்காட்சியில் இணைந்து சுமார் 10 ஆண்டுகாலம் பணியாற்றி வருகின்றார். அங்கே இவர் இயக்கிய தூவானம் என்கிற கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி மூன்று முறை இலங்கை அரசின் தேசிய விருதை பெற்றுள்ளது.
மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதா இறந்தபோது ‘வானே இடிந்ததம்மா’ என்கிற இரங்கல் பாடலையும் இவர் எழுதியுள்ளார்.
சமீபத்தில் கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் இணைந்து தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மினுக்கு “சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருதினை” வழங்கியுள்ளது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல் எழுதி வரும் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்திலுள்ள அத்தனை வட்டார வழக்கிலும் தன்னால் பாடல் எழுத முடியும் என்கிறார் நம்பிக்கையுடன்.
“இலங்கையில் இருக்கின்ற படைப்பாளிகளுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழகத்தில் இருக்கின்றவர்கள்தான் அதனால் தான் இலங்கையில் இருந்து கொண்டு இந்திய தமிழர்களின் ரசனையை உள்வாங்கி என்னால் பாடல் எழுத முடிகிறது” என்கிறார் அஸ்மின்.