தீரன் அதிகாரம் ஒன்று – வழக்கமான போலீஸ் கதை அல்ல!

கார்த்தி நடிப்பில் வருகிற நவம்பர் 17-ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார்.

இதில் நடித்த அனுபவம் குறித்து கார்த்தியிடம் பேசிக் கொண்டிருந்த போது, “பெரும்பாலும் நாம எல்லோரும் 8 மணி நேர அலுவலகப் பணியை முடித்துவிட்டு சொந்த வாழ்க்கைக்குள் வந்துவிடுவோம். ஆனால், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சில நாள் பயிற்சிக்காகச் சென்ற சில இடங்களில் தினமும் 22 மணி நேரம் பணியாற்றும் காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்தேன். நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கான தேவை இங்கு அதிகம். சமூகத்தில் எதிரிகளை எதிர்கொள்கிற சவால்களைக் கடந்து ஒவ்வொரு காவல்துறை அதிகாரிக்கும் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை எனக்கு உணர்த்தியது இந்தப் படம். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்காக முழுக்க ஆக்‌ஷன் களத்தில் அதிரடி காட்டியிருப்பதோடு, போலீஸ் அதிகாரியாக வாழவும் செய்திருக்கிறேன்” என்றார் .

இடைமறித்து, “அது சரி கார்த்தி – ‘சதுரங்க வேட்டை’ வினோத் கூட்டணி இதில் அமைந்த பின்னணி என்ன?’ என்று கேட்ட போது, “உண்மையை மையமாக வைத்த ஆக்ஷன் படம் என்று இக்கதையை அவர் சொல்ல வந்தார். உண்மை சம்பவத்தை திரைக்கதையாக்கும்போது சவால்கள் அதிகம். ஏற்கெனவே மணிரத்னம் சாரிடம் நான் உதவி இயக்குநராக இருந்த போது அதுபோன்ற கதையை கலந்து பேசிய அனுபவம் உண்டு. ஆனால், இந்தக் கதை போலீஸ் அதிகாரியின் கேரியரை கடந்து எப்போதும் போல முறுக்கு மீசை இல்லாமல், பல இடங்களில் யூனிஃபார்ம் இல்லாமல், சில இடங்களில் தேடல் இல்லாமல்கூட ஒரு காவல்துறை அதிகாரி வாழ்க்கையாக இருந்தது. இந்த புதுமை என்னை ஈர்த்தது. சதுரங்க வேட்டை படத்தில் இயக்குநர் வினோத் சமூகம் சார்ந்த பல விஷயங்களை வாழ்க்கையோடு கலந்து பேசியிருப்பார். ஒவ்வொரு வசனம், நடவடிக்கையும் அதையே பிரதிபலிக்கும்” என்று சொன்னார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான ஸ்பைடர் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு ரகுல் பிரீத் சிங் ரீஎன்ட்ரி ஆகியுள்ளார். இதைத் தொடர்ந்து கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துள்ளவரிடம் தீரன் அதிகாரம் ஒன்று படம் குறித்து கேட்ட போது, “சில படங்களில் நடிக்கும்போதுதான் முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே நேர்மறையான எண்ணமும், நடிப்புக்கான ஆவலையும் தூண்டும். அந்த மாதிரியான அனுபவம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது. இந்தப் படத்தில் நடிக்கும்போது சில நேரங்களில் படப்பிடிப்பு முடிய இரவு 9 மணிக்கு மேல் ஆகும்.

ஆனாலும் படத்தின் காட்சிகள் முடியும் வரை இருந்து அதை சரியாக நடித்துக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்து நடித்தேன். உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய கதை என்பதால் இயக்குநர் கூறியவாறு நடித்துள்ளேன். இறுதியாகப் படத்தை பார்க்கும்போது இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அப்படியே பிரதிபலிப்பது போன்று அமைந்துள்ளது. இதற்காக நான் மட்டுமல்லாது அனைவருமே மனப்பூர்வமாக உழைத்துள்ளோம்”

இயக்குநர் வினோத்- திடம் படம் பற்றி கேட்ட போது, ““இது போலீஸ் கதை. என்றாலும் வழக்கமான போலீஸ் கதை அல்ல. யதார்த்தமாக ஒரு போலீஸ் அதிகாரி சந்திக்கும் பிரச்சினைகளை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம். இந்த போலீஸ் 10 பேரை அடித்து பறக்கவிட மாட்டார். கார்த்தி சக மனிதரைப் போல் வாழும் ஒரு போலீஸ். தீரன் என்கிற திருமாறன் என்பது அவருடைய பெயர். அவருக்கு காதல், கல்யாணம், வேலை தொடர்பான வாழ்க்கை இருக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் அதிகாரம் ஒன்று.

கார்த்தி ஒரு விசாரணைக்காக வட மாநிலங்களுக்கு செல்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பிரச்சினையை சந்திக்கிறார். இந்த படத்தில் 4 வட மாநிலத்தைச் சேர்ந்த வில்லன்கள் நடித்திருக்கிறார்கள். மும்பையில் ஜாமீன்கா, மராட்டியத்தில் கிஷோர்கதம், போஜ்புரியைச் சேர்ந்த ஜோகித் பதக், குஜராத்தைச் சேர்ந்த அபிமான் சிங் ஆகியோர் கார்த்தியுடன் மோதும் வில்லன்கள். 1995 முதல் 2005 வரை 10 வருடங்களில் நடக்கும் கதை. செய்திதாள்களில் படிக்கும் குற்ற செய்திகளில் ஒன்றை படமாக்கி இருக்கிறோம்” என்றார்.