தமிழ் தெரிந்த, நடிக்கவும் தெரிந்த, டப்பிங் பேசவும் தெரிந்த ஒரு நடிகை – ஷாதிகா!

சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் உயரே செல்பவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை ஷாதிகா. அண்மையில் வெளியாகியுள்ள சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணி விருந்தால்’ படத்தில் நாயகன் சந்தீப்பின் தங்கையும் விக்ராந்தின் காதலியுமான அனு பாத்திரத்தில்  நடித்திருப்பவர் தான்  இந்த ஷாதிகா. படத்தின் கதாநாயகி ஷாதிகா இல்லையென்றாலும்  கதையில் கவனம் குவியும் கதாபாத்திரத்தில் வந்திருப்பவர் .

இதற்கு முன் ஷாதிகாவின் கதை என்னவென்று கேட்டால் வழக்கமாக பலருக்கும் உள்ளதைப் போல அது  சிறுகதையாக இருக்காது. பெரிய தொடர்கதையே எழுதும் அளவுக்கு வரலாறே வைத்துள்ளார் இந்த ஷாதிகா . சென்னைப் பெண்ணான  இவர், லயோலாவில் பி.டெக் படித்து  முடித்தவர்.

இவர் குழந்தையாக இருந்த போது ஏன் பேச்சு வராத போதே கேமரா பார்த்து நடித்தவர்.அரிராஜனின் ‘மங்கை’ தொலைக்காட்சித்  தொடரில் நடித்த போது இவருக்கு இரண்டு வயது. சீமானின் ‘வீர நடை’ படம் தான் முதல் சினிமா அனுபவம். அப்போது வயது இரண்டரை தான் . அதன் பிறகு ஆளும் வளர வாய்ப்புகளும் பெருக ‘ரோஜா வன’த்தில் குட்டி லைலா ,’ குபேரனி’ல் கெளசல்யா வின் மகள் , ‘சமஸ்தான’த்தில் சரத்தின் மகள் , ‘ராமச்சந்திரா’வில் சத்யராஜின் மகள் , ‘ஆனந்தம்’ முரளியின் மகள் , என்று வளர்ந்து  ‘குருவி’யில் விஜய்யின் தங்கையாகி ‘மாசிலாமணி’யில் சுனைனாவின் தங்கை என்று கலந்து கட்டி 30 படங்கள் நடித்து விட்டார்.

அது மட்டுமல்ல .. தொலைக்காட்சியில் ‘சித்தி’ தொடரில் வில்லி யுவராணியின் மகள் .’ கோலங்கள் ‘தொடரில் தொல்காப்பியனின் சிறுவயது தங்கை என்று நடித்தும் உள்ளவர். சுட்டி டிவியில் சுட்டி தொகுப்பாளராக மூன்று ஆண்டுகள் அனுபவம். அது மட்டுமல்ல குழந்தை நட்சத்திரங்களுக்கெல்லாம்  பின்னணிக் குரலும் கொடுத்திருக்கிறார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் ‘பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுக்குப்  போன ஒரே தமிழ்க்  குறும்படம் ஆகும். நடிகை ரேவதி இயக்கிய குறும் படமாக ‘கயல்விழி’யில் ஷாதிகா தான் கயல்விழி.
இப்படி இவரது அனுபவம் நீள்கிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ இவர் நடித்த நான்காவது படம். இப்பட அனுபவம் பற்றிக் கூறும் போது ‘” சிறு வயதில் குழந்தையாக பல படங்களில் நடித்திருக்கிறேன். சற்று வளர்ந்த பெண்ணாக’ நான் மகான் அல்ல  ‘ படத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பு எனக்கு பெரிய பிரேக் .பெரிய அடையாளம். அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கியவர் சுசீந்திரன் சார். என்னை எங்கே பார்த்தாலும்  அடையாளம் காண்கிறார்கள் என்றால் ‘நான் மகான் அல்ல’ படமே காரணம்.

சுசீந்திரன் சாரைப் பொறுத்தவரை அவர் என்னைப் போல சிலரைக் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் மாதிரி வைத்திருப்பார். அவர் எப்போது கூப்பிட்டாலும் படப்பிடிப்புக்குக் கிளம்பி விடுவோம். கதை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம்.  படப்பிடிப்பில் தான்  தெரியுமே என்று நம்பி புறப்பட்டு விடுவோம்.  அதற்காகத்  தன் பாத்திரத்துக்கு ஏற்றபடி பயன்படுத்திவிட்டு காரியம் முடிந்தது என்று அவர்களை கறிவேப்பிலையைப் போலத் தூக்கி எறிந்து விட மாட்டார்.

கதாபாத்திரமாக மட்டுமல்லாமல் சிறிது நேரமே வந்தாலும் அந்த நடிகர் அல்லது நடிகைக்கு நடிப்பிலும் பெயர் பெற்றுத் தரும்படி  அந்த வாய்ப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்வார். அப்படித்தான்  ‘நான் மகான் அல்ல’ படத்தில் கொலை செய்யப்படும் பெண்ணாக நடிக்க வைத்தார். ‘பாயும் புலி ‘படத்தில் விஷாலின் தங்கை ,’ மாவீரன் கிட்டு’ வில் ஸ்ரீதிவ்யாவின் தோழி என நடிக்க வைத்தார்.  அப்படியே அந்தப் படங்களிலும் வந்தேன். இப்போது ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ வாய்ப்பு கொடுத்திருக்கிறார். குறிப்பாக  இது தமிழ் , தெலுங்கில் உருவான படம்.   ” என்கிறார்.

சினிமாவில் ஓர் அபாயம் உள்ளது தங்கை பாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளை கதாநாயகியாக நடிக்க அழைக்கத் தயங்குவார்கள் என்று . இது குறித்து ஷாதிகா அஞ்சவில்லையா, ?

” நான் நாயகி , குணச்சித்திரம் எனப் பிரித்துப் பார்ப்பதில்லை.  பத்து நிமிடம் வந்தாலும் மனதில் பதிகிற வாய்ப்பில் நடிக்கவே விரும்புவேன். நல்ல பாத்திரம் முக்கியம். அதில் தான் எனக்கு மகிழ்ச்சி . திருப்தி. ஆனாலும் கதாநாயகியாகவும் நடிப்பேன். ஒரு பக்கம் அதற்குரிய முயற்சியில் தான் இருக்கிறேன்.  நான் குழந்தையாக நடித்தது முதல் இன்று வரை எனக்கு என்னைத் தேடி வந்து  அமைந்த வாய்ப்புகள் தான் என்னை வளர்த்துள்ளன, செதுக்கியுள்ளன. அதனால்  என் தேடலின் போதே  எனக்கேற்றபடி கதாநாயகி வாய்ப்பும்  வரும் என்று  நம்புகிறேன். எனக்கான காலம் வரும் என்று கருதுகிறேன்.”

படிப்பையும் நடிப்பையும் எப்படி ஷாதிகாவால் தொடர முடிகிறது?

“நான் படிப்பிலும் படு சுட்டி. பள்ளி நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட நாள்களில்  படப்பிடிபபில் இருந்தாலும் அது படிப்பைப் பாதிக்காதபடி நன்றாகப் படிப்பேன். ப்ளஸ் டூவில் 90% மார்க் எடுத்தேன். பி.டெக் முடித்தேன். எம்.பி.ஏ. கரஸில் சேர  இருக்கிறேன். ” என்கிறார் . இப்போது ஷாதிகா சுசீந்திரனின் ‘ஏஞ்சலினா ‘ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விடைபெறும் முன் ஒன்று சொன்னார் ஷாதிகா.

“தமிழ் தெரிந்த, நடிக்கவும் தெரிந்த, டப்பிங் பேசவும்  தெரிந்த ,நல்ல நடிப்பு வாய்ப்பை மட்டும் விரும்புகிற ஒரு நடிகை இருக்கிறார் . தேடிக் கொண்டிருக்கும் தனக்கான வாய்ப்பு கனியும் என்கிற  தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் என்று எழுதுங்கள் .” என்றார். குறிப்பாகத் ”தமிழ்ப் பேசத் தெரிந்த ” என்பதை அடிக்கோடிட்டுக் குறிப்பிடுங்கள் என்றார் நம்பிக்கை நனைந்த குரலில் .

ஷாதிகா தனக்கான தகுதியுடன் தான் திரைக்களம் புகுந்துள்ளார்.

நன்னம்பிக்கை நாயகி ,தன்னம்பிக்கை தமிழச்சி ஷாதிகா சாதிக்கட்டுமே . வாழ்த்தலாம்.