வடிவேலு கதாநாயகனாக நடித்து 2006 ஆண்டு வெளியான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. சிம்புதேவன் இயக்கிய அந்த படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்திருந்தார். வரலாற்று திரைப்படமான அதில் சமகால அரசியல், சமூக பிரச்சனைகளும் கிண்டலாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இத்தனிக்கும் மன்னர் காலத்து ஆட்சியை இந்த படத்தில் விமர்சிப்பதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டாலும் அது பெரும்பாலும் நிகழ்காலத்தின் சூழ்நிலைக்கும் பொருத்தமாக அமைந்தது.பிலாக் காமெடி என்ற முறையை கையாண்டு இந்த படத்தை இயக்குநர் சிம்புதேவன் உருவாக்கியிருந்தார். படம் முழுக்க காமெடி வசனங்கள் இடம்பெற்றாலும் , அதனுள் ஒரு ஆழமாக அரசியல் பார்வையும் விதைக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் வடிவேலு கூறும் வசனங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. ’’எதிர் காலத்தில் வரும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவாப் போகிறது’, நீர் அடிக்கடி மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்து விடுகிறீர்கள் ‘’ என்ற வசனங்கள் மக்களால் அதிகமாக ரசிக்கப்பட்டன.
இப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டது. தற்போது அதற்கு விடையாக ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இயக்குநர் ஷங்கரோடு இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பில்லா 2 படத்தில் நடித்திருந்த பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைப்பாளராகவும், விவேக் ஹர்ஷன் எடிட்டராகவும், ஆர்.சரவணன் ஒளிப்பதிவாளராகவும், கலை இயக்குநராக முத்துராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.முதல் பாகத்தைப் போல் இந்த பாகமும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.