125 விவசாய குடும்பங்களுக்கு சுமார் 70 லட்சம் நிதி உதவி செய்தார் நடிகர் தனுஷ்!

0
344

சமீபத்தில் ராஜீவ் காந்தி ‘கொலை விளையும் நிலம்’ படத்தின் திரையிடலுக்கு இயக்குநர் சுப்பிரமணிய சிவா வந்தார். அந்த ஆவணப்படத்தைப் பார்த்ததோடு அதைப் பற்றி தனுஷிடமும் விவரித்திருக்கிறார். தமிழகத்தில் விவசாயிகளின் துயரம், தொடர் தற்கொலைகள் உள்ளிட்ட வற்றை கேள்விப்பட்ட தனுஷ், நாமும் ஏதாவது செய்யலாம் என்று உறுதியளித்தார். அதன்படி தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு 25 ஆயிரம் அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.ஆனால், செய்வதைப் பெரிதாக செய்யலாம் என்று 50 ஆயிரமாக வழங்க முடிவு செய்திருக்கிறார்.

தனுஷின் முடிவை அறிந்த சுப்பிரமணிய சிவா, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினரின் தகவல்களை திரட்டி, அவர்கள் அனைவரையும் தனுஷுன் சொந்த ஊருக்கு வரவைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 50 ஆயிரமாக வழங்கி, அவர்கள் அனைவரது போக்குவரத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்நிகழ்ச்சியில் தனுஷின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளார்கள்.

‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்படம் முழுமையாக விவசாயிகளின் தற்கொலை மற்றும் அவர்களுடைய குடும்பப் பின்புலத்தைக் கொண்டு ராஜீவ் காந்தி இயக்கி இருந்தார். அவரிடம் இது குறித்து பேசிய போது, “ சுப்ரமணிய சிவா அண்ணனிடம் ஃபோனில் மட்டும்தான் பேசியிருந்தேன். அவரும் தஞ்சையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் கொலை விளையும் நிலம் ஆவணப்பட அறிமுக விழாவுக்கு அழைத்தேன். தான் பணிபுரிந்த விஐபி2 படத்தின் பிரஸ் மீட்டை கூட விட்டுவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு கடைசி வரை இருந்தார். இதைக் கேள்விப்பட்ட நடிகர் தனுஷ் படத்தை பற்றி விசாரித்திருக்கிறார். படத்தை அவரிடம் கொண்டு சென்றதோடு விவசாயிகளின் துயரத்தையும் எடுத்து சொல்லியிருக்கிறார் சுப்ரமணிய சிவா. விவசாயிகளின் வேதனையை கண்டு நாம் ஏதாவது பண்ணனும் சிவா சார், என்ற தனுஷின் வார்த்தைகளை கேட்டதும் அதற்கான முயற்சிகளில் இறங்கி இதோ இன்று தனுஷ், பலியான விவசாய குடும்பங்களில் 125 குடும்பங்களை நேரில் அழைத்து வந்து அவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் தந்து விட்டார்.

தான் போட்டியிட்ட தேர்தல் வேலைகளை கூட பார்க்காமல் ஒரு வார காலமாக இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் பணியைத் தான் செய்தார் அண்ணன் சிவா. என்னால் ஓரளவுக்கு தான் அந்த குடும்பங்கள் பற்றிய தகவல்களை திரட்டித் தர முடிந்தது. தனுஷ் ரசிகர் மன்றத்தினர் பேருதவியாக இருந்துள்ளனர். சிவா அண்ணனின் தீவிர உழைப்பு தான் இன்றைய நிகழ்வுக்கு காரணம். சுமார் 70 லட்ச ரூபாயை ஒரு நடிகர் ஒரே நேரத்தில் சத்தமே இல்லாமல் உதவ வைப்பது பெரிய விஷயம். பெரிய மனதோடு இதை செய்ய முன் வந்த தனுஷ் க்கு பல குடும்பங்கள் நன்றி சொல்கின்றனர். இதை வழிகாட்டிய சிவா அண்ணனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!” என்றார்