ஆட்சியை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் ! – கமல் பேட்டி

தனியார் தமிழ் தொலைகாட்சி ஒன்றிற்கு நேற்று கமல் அளித்த பேட்டியில், நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக மட்டுமே என்னால் இருக்க முடியாது என்று கூறிய கமல்ஹாசன் அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்றார்.

அரசியல் வர்த்தகமாகிவிட்டது. எளிமையான அணுகுமுறையுடன் கூடிய தலைவர்கள் தற்போது தேவைப்படுகிறார்கள். அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் தனது முதல் தகுதி என்றும் குறிப்பிட்டார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது எரிமலையின் ஒரு நுனிதான். நான் வரி கட்டுகிறேன். ஊழலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அதை தைரியமாக சொல்வேன்.

ஊழல் என்பது வாக்காளர்களிடமிருந்தே தொடங்குவதாகக் கூறிய கமல்ஹாசன், வாக்குகளை விலைபேசும்போது கேள்விகளை எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன். காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும். மக்களின் தேவைக்கேற்ப பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டங்களும் இயற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டிக்கேட்க வேண்டும்.

எனக்கு தலைவர்கள் யாரும் கிடையாது. காந்தி, பெரியார் மாதிரியான ஹீரோக்கள் தான் உள்ளனர். ஏனென்றால் காந்தி, பெரியார் இருவரும் தேர்தல் அரசியல் இல்லை. சாதியை எடுத்து விடுவதுதான்  எனது கொள்கை, சாதியே இல்லாத சமுதாயம் அமைய வேண்டும். நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன். புதிதாக தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்குத் தேவையான தலைவரை மக்களே தேர்வு செய்யவேண்டும் என்றார்.

திராவிட கட்சிகளின் பங்களிப்பு முடிந்து விட்டதாக சொல்ல முடியாது. திராவிடம் என்பது பூகோள ரீதியானது. அதனை யாரும் மறுக்க முடியாது. கொள்கை நேரத்துக்கு நேரம் மாறுபடும். மக்களுக்கு தேவையான அரசியலே தேவை. அந்த அரசியல் காலத்துக்கு காலம் மாறுபடும். காலத்தின் தேவையாக இருந்ததால் தான் திமுக அதிமுக இயக்கங்கள் உருவெருத்தன.

ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவரிடத்திலும் உள்ளது. எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டி கேட்க வேண்டும். எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டி கேட்க வேண்டும். தமிழகத்தில் தேர்தல் வேண்டும். தமிழகத்திற்கு வரும் தேசிய கட்சிகள் திராவிடத்தை ஏற்று கொள்ள வேண்டும். நான் அரசியலில் என்றும் அரசியல் பேசினால் மட்டுமே அரசியலில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை. நான் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.