காந்தக் கண்ணழகி ‘சில்க் ஸ்மிதா’ வாழ்க்கை- படமாகிறது!

1980-களிலும், 1990-களிலும் தென்னிந்திய திரைப்பட துறையில்… இயக்குநர்களாலும், தயாரிப்பாளர்களாலும், நடிகர்களாலும் தவிர்க்க முடியாத  கவர்ச்சி நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா.

அவருக்கு முன்னால் பல கவர்ச்சி நடிகைகளை திரைப்படவுலகம் பார்த்திருக்கிறது என்றாலும்… தன்னுடைய மயக்கும் விழி களாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட கவர்ச்சி  நடிகை  சில்க் ஸ்மிதா மட்டுமே.

ஆந்திராவில் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட ‘விஜயலட்சுமி’ என்ற ‘சில்க் ஸ்மிதா’ தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்பட வாழ்க்கையிலும் சந்தித்த போராட்டங்கள் ஏராளம்.

இப்போது கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் காயத்ரி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணனும், முரளி சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எச்.முரளியும்  இணைந்து தயாரிக்கின்றனர். 

இந்தப் படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 

பல விளம்பரப் படங்களை இயக்கியவரும், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியவருமான இயக்குநர் மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

“சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம், அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய  ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்…” என்கிறார் இப்படத்தின் இயக்குநரான மணிகண்டன்.

ஏற்கெனவே 2011-ம் ஆண்டு ஹிந்தியில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு ‘டர்ட்டி பிக்சர்’ என்ற தலைப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த நடிகை வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது இந்தப் படத்திற்காகக் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதியப் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது.