வெற்றி நம் கையில் இல்லை – நடிகர் விக்ரம் பிரபு !!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விக்ரம் பிரபு, தனது திரைப்பயணத்தில் 25 வது திரைப்படம் எனும் மைல்கல்லை “சிறை” படம் மூலம் தொட்டிருக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் *SS லலித் குமார்* தயாரிப்பில், நடிகர் *விக்ரம் பிரபு* நடிப்பில், அறிமுக இயக்குநர்  *சுரேஷ் ராஜகுமாரி* இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது “சிறை” திரைப்படம்.

டாணாக்காரன்  இயக்குநர் *தமிழ்*, தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.

இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தனது 25 வது திரைப்பட எட்டியுள்ள நிலையில், தனது திரைப் பயணத்தை கொண்டாடும் வகையில், நடிகர் விக்ரம் பிரபு பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார்.

தனது திரைப்பயணம் குறித்தும், “சிறை” படம் குறித்தும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வினில் நடிகர் விக்ரம் பிரபு பகிர்ந்துகொண்டதாவது..,

நான் திரைத்துறைக்குள் வந்து 13 வருடம் முடிந்திருக்கிறது. நான் எப்போதும் என் படங்களை கணக்கு வைத்துக் கொள்வதில்லை. எனக்கு வேண்டிய மேனேஜர்  ஒருவர் சொல்லித்தான் இது என் 25 வது படம் எனத் தெரியும், அதுவும் கிறிஸ்துமஸ் 25 ஆம் தேதி படம் வெளியாவது இன்னும் கூடுதல்  மகிழ்ச்சி.

சிறை என் 25 வது படம், என் மனதுக்கு நெருக்கமான டாணாக்காரன் படக்குழுவோடு மீண்டும் இணைந்து வேலை பார்த்திருக்கிறேன். டாணாக்காரன் படத்திற்காக  நாங்கள் நிறைய உழைத்தோம். ஆனால் அந்தப்படம் திரையரங்கில் வெளியாகவில்லை என்பது வருத்தம் தான். இயக்குநர் தமிழ்  இந்தக்கதை  ஒன்லைன் சொன்ன போதே எனக்கு பிடித்திருந்தது. அவர் வாழ்க்கையில் நடந்த அனுபவம்.

சுரேஷ் சார் முழுமையாக திரைக்கதையை விவரித்த போதே அவரால் இதை செய்ய முடியும் எனத் தோன்றியது.  எல்லா கதாப்பாத்திரத்தின் பயணமும் எனக்கு நெருக்கமாக இருந்தது. அது ஒரு திரைப்படத்தில் மிக முக்கியம். லலித் சார் மகன்

அக்‌ஷய்  ஒரு நல்ல கதாப்பாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார். சிறை படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. இந்தப்படம் என் 25 வது படமாக வருவது பெருமை.

எனக்கு போலீஸ் மீது மிகப்பெரும் மரியாதை உள்ளது. போலீஸ் என்றவுடனே எல்லோரும் அப்பாவின் அக்னி நட்சத்திரம் படம் பற்றி சொல்வார்கள். ஐபிஎஸ், ஐஏஎஸ் கேரக்டர்  செய்யாமல் இப்படி செய்கிறீர்களே?  எனக் கேட்பார்கள்.  எனக்கு நல்ல கதை தான் முக்கியம். டாணாக்காரனுக்கு பிறகு நிறைய போலீஸ் கேரக்டர் வந்தது, அதில் இந்தக்கதை எனக்கு மிகவும் பிடித்தது. டாணாக்காரனுக்கு 10 கிலொ எடை குறைத்தேன், ஆனால் இதற்கு எடை கூட்டி நடித்திருக்கிறேன். துப்பாக்கி முனை படத்தில் 42 வயது போலீஸாக நடித்தேன். இதில் அதிலிருந்து மாறுபட்டு நடித்துள்ளேன். தமிழ் சார் தான் இந்த கதாப்பாத்திரத்திற்கு  இன்ஸ்பிரேஷன். அவரை முன்னுதாரணமாக வைத்து தான் படத்தில்  நடித்திருக்கிறேன்.

அதிகம் படங்களில் நடிக்காமல் இருக்க காரணம் நான் தான். தொடர்ந்து படங்கள் நடித்த போது, எனக்கே நாம் அழுத்தமான நல்ல படங்கள் செய்யவில்லையோ? எனத் தோன்றியது. நாம் நல்ல கதைகள் செய்ய வேண்டும் என கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டேன். அந்த நேரத்தில் கோவிட் வந்துவிட்டது. இப்போது எனக்கு பிடித்த நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.

சில படங்கள் நாம் முழு உழைப்பைத் தந்தாலும் அது சரியாக போய்ச் சேருவதில்லை. சினிமா எப்போதும் டீம் ஒர்க் தான், நாம் என்ன தான் நம் வேலையை சரியாக செய்தாலும், எல்லாமும் ஒன்றாக அமைய வேண்டும். தெலுங்கில் சென்று அனுஷ்காவுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அது எனக்கு மகிழ்ச்சி தான். இன்னொரு இன்ட்ஸ்ட்ரியில் போய் நடித்து வந்தது ஒரு மிகச்சிறந்த அனுபவம்.

லவ் மேரேஜ் படம் ஓடிடியில் பார்த்து பாராட்டுகிறார்கள். அந்தப்படம்  1  1/2 வருடம்  முன்பாக ரிலீஸ் ஆகவேண்டியது. அது சில காரணங்களால் தள்ளிப் போனது,  அது நம் கையில் இல்லை. திரையரங்கில் பலர் பார்க்காவிட்டாலும், இப்போது ஓடிடியில் பார்த்து பாராட்டுகிறார்கள். நம் உழைப்பு சென்று சேர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி தான்.

சிறை படம்  பொறுத்தவரை முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாப்பாத்திரம். கதிரவன்  கதாப்பாத்திரம் முழுதாக வேறு மாதிரி கேரக்டர், இயல்பாக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு இருக்கும்,  ஒரு போலீஸ் கேரக்டர்.  அதற்காக ஸ்பெஷலாக தயாராகமல் கதையை புரிந்துகொண்டு கதாப்பாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்திருக்கிறேன்.  கண்டிப்பாக அனைவரையும் இப்படம் திருப்திப்படுத்தும்.

அடுத்த படம் ஒரு நல்ல டீமுடன் பேசி வருகிறேன். விரைவில் அடுத்த படம் பற்றி அறிவிப்பு  வரும். இதுவரை நீங்கள் தந்து வரும் ஆதரவுக்கு நன்றி என்றார்.