நானியின் வயலண்ட் ஃபிலிம் ’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ எப்படி இருக்கிறது ?

 

இயக்குனர் – சைலேஷ் கோலனு
நடிகர்கள் – நானி , ஶ்ரீநிதி ஷெட்டி, சூர்யா ஶ்ரீநிவாஸ், சமுத்திரக்கனி
இசை – மிக்கி ஜே மேயர்
தயாரிப்பு – வால் போஸ்டர் சினிமா – பிரசாந்தி தி ்பிரிபநனி – நானி

நானி தயாரிப்பில், உருவான ஹிட் திரைப்படம் படுபயங்கர ஹிட்டாக, அது தொடர் திரைப்படமாக உருவாக ஆரம்பித்தது. இப்போது மூன்றாவது படத்தில், அவரே நாயகனாக நடித்துள்ளார்.

தற்போதைய சீசனில் வயலன்ஸ் அதிகம் இருப்பது மாதிரி படங்கள் அதிகம் வர ஆரம்பித்துள்ளது, இந்த கதைத் தொடரின் மையமே வலன்ஸ் என்பதால் அது சரியாக பொருந்தியுள்ளது.

நானி அடுத்த வீட்டு பையன் ரோலில் இருந்து மாறி தன் கேரியரிலேயே மிக வயலன்டான படத்தில் நடித்துள்ளார். அது ரசிகர்களுக்கு பிடித்தும் இருக்கிறது.

முந்தைய இரண்டு பாகங்களில் தொடர் கொலைகளை செய்வது யார் என்பதை கண்டுபிடிப்பது தான் படமாக இருக்கும் ஆனால் இந்த பாகம், கொலைகள் நடத்தியவர்களை உடனே கண்டுபிடித்து விடுகிறார்கள், ஆனால் அது ஏன், எப்படி செய்ப்பட்டது என்பதை கண்டுபிடிப்பது தான் படம்.

கொலை வழக்கு ஒன்றை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிக்கு, ஒரே பாணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் கிடைக்கிறது. அந்த வழக்குகள் பற்றி விசாரிக்கும் போது, அதன் பின்னணியில் கொடூரமான கருப்பு உலகம் ஒன்று இருப்பது தெரிய வருகிறது. அந்த உலகம் எங்கிருக்கிறது?, அதை இயக்குவது யார்?, அவர்களது கொடூரமான கொலைகளுக்கான நோக்கம் என்ன?, என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் வன்முறை பயணம் தான் இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ படத்தின் கதை .

நானி தன் இயல்பான முறையில் இருந்து மாறி கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கும் நானி, தனது ஒவ்வொரு அசைவுகள் மூலம் ரசிகர்களின் முழு கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். அதிலும் இறுதி சண்டைக்காட்சிகளில் மிருகமாக மாறி அசத்தியுள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீரிநிதி ஷெட்டிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், அவரையும் திரைக்கதையோடு பயணிக்க வைக்க மேற்கொண்ட முயற்சிகள் படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு அதிகரிக்கச் செய்வதோடு, அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்துவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் படத்திற்கு மிகப்பெரிய பலம். சண்டைக்காட்சிகளும், வன்முறை காட்சிகளும் படத்தில் அதிகமாக இருந்தாலும், அதை உறுத்தாத வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் சைலேஷ் கோலானு, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை, கமர்ஷியல் மாஸ் ஆக்‌ஷன் படமாக கொடுத்திருக்கிறார். படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே கதைக்குள் பார்வையாளர்களை பயணிக்க வைத்து விடுவதோடு, அடுத்தது என்ன ? என்ற கேள்வியை படம் முழுவதும் பயணிக்க வைத்து பார்வையாளர்களை இருக்கையில் கட்டுப்போட்டு விடுகிறார். கொலை அதை கண்டுபிடிப்பது என்பது, எப்போதும் சுவாரஸ்ய முடிச்சு, அதை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு திருப்பமும், கச்சிதமாக படத்தில் பொருந்தியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் தொடங்கும் கதை, காஷ்மீர், பீஹார், ராஜஸ்தான் மற்றும் அருணாச்சலப்பிரதேசம் என பல மாநிலங்களுக்கு பயணப்பட்டாலும், எந்த இடத்திலும் துளி அளவும் தொய்வில்லாமல் ராக்கெட் வேகத்தில் பயணிக்கிறது.

இறுதி சண்டைக்காட்சிகளில் மொத்த ரசிகர்களுக்கும் விருந்து வைத்துள்ளார்கள். வலன்ஸ் மட்டும் குறைத்திருக்கலாம் ஆனால் ஆக்சன் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.