‘அன்டில் டான்’ என்பது சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட ஒரு சுவாரசியமான திகில் விளையாட்டாகும். இந்த விளையாட்டு ஒரு பட்டாம்பூச்சி விளைவு முறையைப் பின்பற்றுகிறது. இதில் வீரர்கள் அவர்கள் எடுக்கும் தேர்வுகளைப் பொறுத்து உயிர்வாழ்வார்கள் அல்லது இறப்பார்கள். வீரர்கள் தங்கள் செயல்களை மூன்றாவது நபரின் கோணத்தில் செய்ய வேண்டும். அப்படியான செயல்கள், மர்மத்தைத் தீர்க்க அவர்களுக்கு உதவும். இப்படம், அந்த விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களைத் தயாரித்த டேவிட் F. சாண்ட்பெர்க் இந்த திகில் படத்தை இயக்கியுள்ளார்.
விடியும் வரை உயிரோடு இருந்தால் தப்பிக்கலாம் என்ற ஒற்றை வரியில் கட்டமைக்கப்பட்டது தான் இந்த படம். வீடியோ கேம் ஆக வந்து பிரசிதி பெற்ற UNTIL DAWN-யை திரைப்படமாக்கும் முயற்சியில் படக்குழு வெற்றி பெற்று இருக்கிறது.
Slasher மற்றும் Horror என்ற இரு ஜேனரை இணைத்து ஒரு திரைக்கதையை படத்தை கட்டமைத்து இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இது இரண்டுமே படத்தின் ஜேனர் அல்ல. அதுவே இந்த படத்தின் சிறப்புகளில் ஒன்று.
பல நாட்களுக்கு முன்பு தொலைந்து போன தனது சகோதரி கடைசியாக சென்ற இடத்திற்கு தனது நண்பர்களோடு ஒரு பெண் செல்கிறாள்.
அப்போது அவளும் அவளது நண்பர்களும் திரும்பி வரவே முடியாத ஒரு கால சுழலுக்குள் மாட்டி கொள்கிறார்கள்.
ஒரு வீடு, வீட்டை சுற்றி மர்மங்களும், கொலை செய்ய துடிக்கும் வினோத மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களால் கொல்லப்படாமல் விடியும் வரை உயிரோடு இருந்தால், அவர்கள் வெளியேறலாம் என்ற கதையில் படம் சூடுபிடிக்கிறது.
ஒருவேளை அவர்கள் கொல்லப்பட்டால் மீண்டும் அதே வீட்டில் விழித்தெழுவார்கள். மீண்டும் அந்த இரவு தொடங்கும். லூப், ஹாரர், ஸ்லாசர் என அனைத்தையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள் படக்குழு.
படத்தின் காட்சியமைப்பும், ஒலியமைப்பும், ஒளிப்பதிவும் தான் படத்தின் பலமே… பயமுறுத்த கூடிய காட்சிகளையும், ஒவ்வொரு லூப்பிலும் புதுவகையான தகவலையும் கடத்துவதன் மூலம் படத்தோடு நம்மை ஒன்ற வைத்து விடுகிறார்கள்.
படம் முழுக்க திரையை விட்டு நகராத படியான காட்சியமைப்பு படத்திற்கு பலம்.
ஐந்த பேரை வைத்து ஒரு பிரம்மாதமான திரில்லர் படத்தை படக்குழு கட்டமைத்து இருக்கிறார்கள்.
திரில்லர், ஹாரர், மற்றும் ஸ்லாசர் ரசிகர்கள் தவறவிடகூடாத படம்