நாங்கள் திரைப்பட விமர்சனம் !!
இயக்கம் – அவினாஷ் பிரகாஷ்
இசை – வேத் சங்கர்
தயாரிப்பாளர்- ஜுவிஎஸ் ராஜு
அறிமுக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இயக்கதில் புதுமுகங்கள் நடிப்பில் வந்துள்ள திரைப்படம் நாங்கள்.
பாலுமகேந்திரா, மகேந்திரன் வகையாறா படங்கள் என ஒரு ஜானர் உண்டு. வாழ்க்கையையும் மனிரகளையும் பற்றிப் பேசும் படங்கள் அந்த வகையறாவில் வந்துள்ள படம் தான் நாங்கள்.
மனைவியுடன் பிரிந்து வாழும் ஒருவன் தன் மூன்று மகன்களுடன் வாழ்கிறார். பணக்கார அப்பாவுக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட தோல்வியால், தங்களது சிறுவயது பருவத்தை தொலைத்துவிட்டு, வீட்டு பொறுப்புகளில் மூழ்கும் மூன்று சகோதரர்களும், எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அவற்றை சமாளித்து, பள்ளி பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் எப்படி கற்றுக்கொள்கிறார்கள், அவர்கள் எப்படி நகர்கிறது என்பதை, தந்தைக்கும் மகன்களுக்கும் உள்ள உறவுச்சிக்கலை பேசும் படம் தான் இது.
அப்துல் ரஃபே, தந்தையாக நடித்திருக்கிறார் சிறுவர்களிடம் கண்டிப்பாக இருக்கிறார் ஆனால் அவரது தோல்வியை நினைத்து துவண்டு போகும் காட்சிகளிலும், மீண்டும் தான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் பேசும் காட்சிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகராக கவனம் ஈர்க்கிறார். இறுதிக் காட்சியில் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.
மூன்று சகோதரர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் மித்துன், ரித்திக் மோகன், நித்தின்.டி ஆகியோர் படத்தில் அதிகம் டயலாக் இல்லையென்றாலும் சின்ன சின்ன உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்தி அசத்துகிறார்கள்.
வாழ்க்கையை அச்சு அசலாக பேச முற்பட்டதற்காக பாராட்டலாம் ஆனால் அதுவே இந்தக்கால கட்டத்தில் கொஞ்சம் கிரிஞ்சாகி போரடிக்க ஆரம்பித்து விடுகிறது. பரபரப்பாக சுறுசுறுப்பாக எதுவுமே படத்தில் நடக்கவில்லை என்பதுவும் மைனஸ் தான். ஆனால் இந்த வகைப் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்பதும் நியாயமே!
இசையமைப்பாளர் வேத் சங்கர் சுகவனத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களம் மற்றும் காட்சிகளுக்கு உயிரூட்டியுள்ளது.
கதைக்களம் ஊட்டியில் இருப்பது கண்களுக்கு விருந்தாகவுள்ளது.
எழுதி இயக்கியிருக்கும் அவினாஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளார். நீண்ட நாள் கழித்து மனித வாழ்வியலையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை காட்சிப்படுத்திய விதத்தில் பாராட்டு வாங்கியுள்ளார் அவினாஷ்.
நாங்கள் நல்ல சினிமா.
