இயக்குனர் – அருண் குமார்
நடிகர்கள் – விக்ரம் , எஸ் ஜே சூர்யா, சுராஜ், துஷாரா
இசை – ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பு – ரியா ஷிபு- ஹெச் ஆர் பிக்சர்ஸ்
தொடர் தோல்வியில் சிக்கித் தவிக்கும் சீயான் விக்ரமுக்கு நிம்மதி தரும் வகையில், ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்தாக வந்துள்ளது வீர தீர சூரன்.
சித்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அருண் குமார் விக்ரமை இயக்குகிறார் என்றவுடனே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடிவிட்டது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகச்சரியாக புரிந்துகொண்டு, அவர்களுக்கு விருந்து வைத்துள்ளது படக்குழு!
வழக்கமாக முதல் பாகம் வெளியான பின்னரே இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால், வீர தீர சூரனை பொறுத்தவரை புது முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். இதனாலேயே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
மதுரையைச் சேர்ந்த பெரிய குடும்பத்துக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை காரணமாக வைத்து, அக்குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர் பிருத்திவிராஜ் மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சரமூடுவை என்கவுண்டரில் கொலை செய்ய போலீஸ் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யா திட்டம் போடுகிறார். போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிப்பதற்காக, மளிகை கடை நடத்தி வரும் விக்ரமின் உதவியை பிருத்திவிராஜ் நாடுகிறார். அனைத்தையும் விட்டுவிட்டு குடும்பம், பிள்ளைகள் என வாழ்ந்துக் கொண்டிருக்கும் விக்ரம் முதலில் மறுத்தாலும், குடும்பத்தை காரணம் காட்டி மிரட்டுவதால் அவர்களை காப்பாற்ற சம்மதித்து களத்தில் இறங்குகிறார். அந்த ஒரு இரவில் என்ன நடக்கிறது.
எதுவுமே இல்லாத ஒரு காட்சியை அத்தனை உயிர்ப்பாக பரப்பரப்பாக சொல்லும் திறமை அருண்குமாரிடம் இருக்கிறது. அதை படம் முழுக்க செய்துள்ளார்.
அனைவருமே கெட்டவர்கள் தான், அவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தில், தங்கள் உயிரையும், தங்கள் உயிரையும் காப்பாற்ற போராடுவது தான் இப்படத்தின் மையம்.
குவாண்டின் டிராண்டினோ, மார்டின் ஸ்கார்சசி பாணியில் நம்மூர் சினிமாவை பார்க்கும் உணர்வைத் தந்ததற்கு படக்குழுவை பாராட்டலாம்.
பெரியவர் குடும்பத்து பிரச்சனையோடு தொடங்கும் படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்கள் கதையோடு ஒட்டிக்கொண்டு விடுகிறார்கள், அடுத்தடுத்த ஆக்சன் காட்சிகள் இறுதி வரை சீட் நுணியில் உட்கார வைக்கிறது.

மனைவி, பிள்ளைகள் என்று குடும்பஸ்தனாக அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் விக்ரம், குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லும் நிலையை வெளிக்காட்டியுள்ள விதம், ஆக்சனில் மிரட்டல், பயம், கோபம், தவிப்பு என அனைத்து உணர்வுகளையும் அசால்டாக வெளிப்படுத்தி விடுகிறார்கள்.
அதிலும் இறுதி சண்டைக்காட்சி அவரது ரசிகர்களுக்கு செம்ம விருந்து.
விக்ரமின் மனைவியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், அப்பாவி மனைவயியை கண் முன் கொண்டு வந்துள்ளார். பயம் தவிப்பு என அவர் நடிப்பில் மெருகேறியுள்ளார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு நடிப்பில் வேறு ராஜாப்பாட்டை போட்டு பயணித்திருக்கிறார். ஒரு காட்சியில் என்கவுண்டரை விளக்கும் இடம் அசத்தல்.
சுராஜ் வெஞ்சரமூடு மதுரை சண்டியராக மாறியிருக்கிறார். அவர் அந்த ஒற்றை லாங் ஷாட்டிலும், விக்ரமுடனான உரையாடிலும் மிரட்டியுள்ளார்.
மகனை காப்பாற்றுவதற்காக போராடும் பிருத்திவிராஜ், போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் சுராஜ் வெஞ்சரமூடு, இவர்களது குடும்ப பெண்கள் என அனைவரும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகரும் கதையை திசைதிருப்பாமல் பயணிப்பதோடு, பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்திவிடுகிறார்.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், இரவுக் காட்சிகளில் கையாண்டிருக்கும் லைட்டிங் பிரமிக்க வைக்கிறது. ஒரு இரவில் பல சம்பவங்கள் நடந்தாலும், அவற்றை மிக நேர்த்தியாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பார்வையாளர்கள் கவனிக்கும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே
சண்டைப்பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவின் சண்டைக்காட்சிகள் அனைத்தும் மிரட்டலாக இருப்பதோடு அத்தனை உண்மையாக இருக்கிறது.
கதை, கதாப்பாத்திரங்கள் அதை வடிவமைத்த விதம், திரைக்கு கொண்டு வந்த விதம் அனைத்திலும் மிரட்டி மிகப்பெரிய இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார் அருண்.
மொத்தத்தில், ‘வீர தீர சூரன் – பாகம் 2’ மிகப்பெரிய ஆக்ஷன் விருந்து
