நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்- விமர்சனம் !!

இந்த படத்தின் மீது இரண்டு விஷயங்களுக்காக நம்பிக்கை இருந்தது. ஒன்று, தனுஷின் மூன்றாவது இயக்கம் என்பதனால், மற்றொன்று பருவ வயது மனிதர்களை நாயகர்களாக திரையில் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டது என்பதனால்.

ஆனால் படம் முடிந்த பிறகு, இந்த நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று தெரிய வந்தது.

உணர்வில்லாத கதைக்கு, உயிர் கொடுக்க உயிரோடு இருக்கும் எந்த மனிதனாலும் முடியாது. அது தான் இந்த படத்தின் நிலையும். தனுஷின் பேப்பரிலயே இல்லாத ஒன்று, எப்படி திரையில் வரும்.

Gen Z காதல் கதை என்ற பெயரில் தனுஷ் கதை உருவாக்க நினைத்தது, அற்புதமான யோசனை. தமிழில் எந்த இயக்குனரும் இந்த genre- யை தொடாதது தமிழ் சினிமாவிற்கு பெரும் காலமாக இழப்பாக இருந்து வந்தது.

ஆனால் இதை பார்த்த பிறகு தான் அவர்கள் ஏன் தொடவில்லை என்று புரிந்தது. காதல், நட்பு, காதல் பிரிவு, தவறான புரிதல் என காதல் கதையில் நிறைந்து இருக்க வேண்டிய எதுவும் இந்த படத்தில் இல்லை. மோசமான எழுத்தால், இந்த படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஏலியன் கதை போல எங்கோ இருக்கிறது.

இதில் வரும் ஒரு கதாபாத்திரத்தை கூட நம்மால் இணைத்து பார்க்க முடியவில்லை. நடிகர்களை பொறுத்தவரை நாயகன், பர்வேஷ், தனுஷ் கிரிஞ்ச் பண்ணும் படங்களின் சாயலில் இருக்கிறார், அனிகா, மற்றும் அவளது நண்பர்கள் இருவர் என எவருமே படத்தில் கதையோட்டத்தையோ, கதாபாத்திர ஓட்டத்தையோ நமக்கு கடத்தவில்லை. வெறும் நேரத்தை தான் கடத்துகிறார்கள்.

படத்தில் ஒரே ஆறுதல் மேத்யூ மட்டுமே. அவருடைய நடிப்பு மட்டுமே மோசமான காட்சிகளை கூட பொறுமையாக பார்க்க வைக்கிறார்.

படத்தின் முதுகெலும்பான திரைக்கதை சிதைந்து போய் இருக்கிறது. அதற்கு காரணம், திரைக்கதையின் மூலமான கதாபாத்திர வடிவமைப்பு, கதையமைப்பு சிதைந்து போயிருக்கிறது.

மோசமான எழுத்திற்கும், மோசமான படத்திற்கும் இது ஒரு உதாரணம். தனுஷ்-இடம் இருந்து கிளாப் போர்டை வாங்குவது தமிழ் சினிமாவிற்கு நல்லது.