தனது தவறுகளிலிருந்து நல்ல படங்களில் நடித்து வரும் விமல் நடிப்பில், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் சார்.
கல்வி எவ்வளவு முக்கியம் அது சமூகத்தை எவ்வளவு மாற்றும், அதற்கு ஆசிரியர்கள் எந்தளவு தியாகத்துடன் உழைக்கிறார்கள் என்பது தான் படத்தின் கரு.
மாங்கொல்லை கிராமத்தில் உள்ள சிறிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் சரவணன். தனது தந்தை போராடி கட்டிய இந்த பள்ளியை தான் நடுநிலை பள்ளியாக மாற்றியது போல் தனது மகன் ( விமல்) இந்த பள்ளியை மேல்நிலை பள்ளியாக மாற்ற வேண்டும் என்பது தான் அவரது ஆசையாக இருக்கிறது. அவரது மகன் சிவஞானம் ( விமல்) . வெளியூரில் படித்துவிட்டு விருப்பமே இல்லாம சொந்த ஊருக்கு ஆசிரியராக வருகிறார். விமலின் தாத்தாவை சாமி அடித்து அவர் புத்தி பேதலித்துவிட்டதாக ஊருக்குள் ஒரு கதை வலம் வருகிறது. சின்ன வயதில் இருந்தே கிறுக்கு வாத்தியார் பேரன் என்று அவரை கூட படிக்கும் சிறுவர்கள் கேலி செய்கிறார்கள். அதேபோல் ஒரு கட்டத்திற்கு மேல் விமலின் அப்பாவும் மனம் பிறழ்ந்தவராக மாறுகிறார். இது விமலை உளவியல் ரீதியாக பாதிக்கிறது.மறுபக்கம் இந்த பள்ளியை எப்படியாவது இடிக்க வேண்டும் என்பது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆடுகளம் ஜெயபாலனின் நோக்கமாக இருக்கிறது. அதற்கு அவர் பயண்படுத்து ஆயுதம் தான் கடவுள். சாமி போகிற பள்ளிக்கூடம் இருப்பதால் தெய்வ குத்தம் ஏற்படும் என்று சொல்லி அதற்கேற்றபடி சதிதிட்டங்களை தீட்டுகிறார்.
தலைமுறை தலைமுறையாக தனது குடும்பத்தின் மேல் இருக்கும் அடையாளம். மறுபக்கம் தனது தந்தையின் லட்சியம் என இரண்டிற்கும் நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார் விக்ரம். விமல் தனது அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்றினாரா என்பது மீதி கதை.
மிகப்பெரிய கதை படத்தில் இருக்கிறது, ஆனால் படத்தில் அடுத்தடுத்த காட்சிகள் ஒவ்வொன்றும் தொடர்பில்லாமல் இருக்கிறது, நிறைய பேச முற்பட்டிருக்கிறார்கள் ஆனால் எல்லாக்கதையும் சொல்லும் போது எதிலுமே அழுத்தம் இல்லாமல் போய்வ்விடுகிறது.
விமல் தன்னால் முடிந்தளவு நல்ல நடிப்பை தந்திருக்கிறார், நாயகியும் அவர் வேலையை செய்துள்ளார், சரவணனுக்கு மிக முக்கியமான பாத்திரம் அதை உணர்ந்து சிறப்பான நடிப்பை தந்துள்ளார்.
படத்தில் விமலின் நண்பராக சிராஜ் நடித்துள்ளார். அவர் தான் வில்லன் எனபது குழந்தைக்கு கூட தெரியும் ஆனால் விமலுக்கு தெரியாதது சோகம் தான்.
பின்னணி இசை படத்தைக் காப்பாற்ற முயன்றிருக்கிறது. இனியன் ஜே ஹரிஷின் ஒளிப்பதிவு படத்தின் ஒரு பிளஸ்.
கல்வியின் முக்கியத்துவத்தையும் அந்த கல்வியை கடவுளின் பேரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்யும் சதியைப் பற்றி படமெடுத்துள்ள இயக்குநர் போஸ் வெங்கட்டை கண்டிப்பாக பாராட்டலாம். இன்னும் அழுத்தமான கதையும் சிறப்பான திரைக்கதையும் அமைந்திருந்தால் மிக நல்ல படைப்பாக அமைந்திருக்கும்.