புதுமை இயக்குநர் ஸ்ரீதர் நினைவு நாள்!

முன்னொருக் காலத்தில், தயாரிப்பு நிறுவனங்கள்தான் பெருமைப்படுத்தப்பட்டன. பக்ஷிராஜா படம், ஏவிஎம் படம் என்றெல்லாம் சொன்னார்கள். ஜெமினி கம்பெனி படம், மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்று சொன்னார்கள். பிந்தைய காலகட்டம், நடிகர்களின் பக்கம் திரும்பியது. ‘எம்.கே.டி. படம்’ என்றார்கள். ‘பி.யு.சின்னப்பா’ படம் என்றார்கள். ‘கிட்டப்பா’ படம் என்றார்கள். ‘சிவாஜி படம்’ என்றார்கள். ‘எம்ஜிஆர் படம்’ என்றார்கள். அப்படி இருந்த நாயக பிம்பங்களில் இருந்த சினிமாவை, இயக்குநர் பக்கம் திசை திருப்பியது கலங்கரை விளக்கம் ஒன்று. கேப்டனை விட்டுவிட்டு, கப்பலில் பயணித்தவர்களைச் சிலாகித்ததை விடுத்து, கேப்டனின் லாகவத்தை எல்லோரும் சொல்லத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட கேப்டனாகத் திகழ்ந்தவர்… டைரக்டர் ஸ்ரீதர்.

ஆம்.. நம் தமிழ்த் திரையுலகில் மிகச்சிறந்த இயக்குநர்களைப் பட்டியலிட்டால், அதில் நிச்சயமாக ஸ்ரீதரின் பெயர் இடம்பெறும். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கமர்ஷியல்’ படங்களாக இருப்பதோடு, திரையுலகின் போக்கை மாற்றத்திற்கு உள்ளாக்கிய சிறப்பும் அவரது படைப்புகளுக்கு உண்டு. திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் இயக்கியபோதும் சரி; இரண்டாம் நிலை நாயக நாயகிகள் அல்லது புதுமுகங்களை வைத்து அவர் மேற்கொண்ட சோதனை முயற்சிகளும் சரி; ஒருபோதும் அவரது தனித்துவம் இன்றி வெளியாகவில்லை.அதுவே கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அவரைத் திரையுலகில் இயங்கச் செய்தது. காலத்தால் அழியாத பல திரைப்படங்களை ஆக்கச் செய்தது.

தமிழ்த் திரைப்பட உலகில் மிகவும் பேசப்பட்ட வசனகர்த்தா இளங்கோவன். இவரும் செங்கல்பட்டு. ஸ்ரீதரும் செங்கல்பட்டு அருகே சித்தாமூர். பள்ளியில் போட்ட டிராமாக்கள் பேர் வாங்கிக் கொடுத்தன. அரை நிஜார் பாக்கெட்டில் கனவுகளையும் கற்பனைகளையும் கதைகளையும் சேகரித்தார் ஸ்ரீதர். இளங்கோவனைச் சந்தித்து விருப்பம் தெரிவித்தார். அதன் பின்னர் சந்தித்ததெல்லாம் அவமான டேக்குகள். மீசை வளர்ந்துவிட்டாலும் இன்னும் குழந்தைதான் எனும் மனோபாவத்தில் இருக்கும் பெற்றோர் போல, ‘இவ்ளோ சின்னப்பையனா இருக்கியேப்பா’ என்றுதான் சொல்லிச் சொல்லி, சொல்லிவைத்தாற் போல் ஒதுக்கினார்கள். தன் நிலையில் சற்றும் மனம் தளராதவன் விக்கிரமாதித்தன் மட்டும்தானா என்ன? ஸ்ரீதரும்தான். அசராமல் முயன்று கொண்டே இருந்தார்.

அந்த வகையில் ஏவிஎம் நிறுவனத்திற்குச் சென்று தனது ‘லட்சியவாதி’ திரைக்கதையை ஸ்ரீதர் சமர்ப்பித்தபோது, அவரது வயது பதினெட்டு. அப்போது, அவரது கதை நிராகரிக்கப்பட்டது. அதே கதையை டி.கே.சண்முகத்திடம் கொண்டு சென்றார் ஸ்ரீதர். ஆம்.. கமல்ஹாசனின் இன்னொரு குரு என்று இன்றைக்கு எல்லோராலும் போற்றப்படும் டி.கே.சண்முகம் அண்ணாச்சியிடம் சென்று கதையைக் கொடுத்தார். படித்து மிரண்டார். தலையில் இருந்து கால் வரை ஏற இறங்கப் பார்த்தார். ‘போச்சுடா… இவரும் ‘சின்னப்பையன்’ டயலாக் சொல்லப்போகிறார் என்று ஸ்ரீதர் நின்றுகொண்டிருந்தார். ‘இதோட ஒரிஜினல் எங்கே இருக்கு?’ என்று கேட்டார். ‘சித்தாமூரில் உள்ள வீட்டில்’ என்றார். ‘அதை எடுத்துட்டு வாங்களேன் தம்பி’ என்றார். ‘இந்தப் பையன் தான் எழுதினானா? அல்லது மண்டபத்தில் வேறு யாராவது கொடுத்து, அதை எடுத்து வந்திருக்கிறானா?’ என்று சண்முகம் அண்ணாச்சிக்கு சந்தேகம். மறுநாள்… நோட்டுப்புத்தகம் கொண்டு வந்து நீட்டினார். அப்போதும் மனதுள் பத்திபத்தியாக சந்தேகங்கள். சோதிக்க நினைத்தார் அண்ணாச்சி. ‘இதுல இந்த சீன் மட்டும் கொஞ்சம் மாத்தி வேற விதமா எழுதிக்கொடுக்க முடியுமா? இப்பவே எழுதிக் கொடுங்க தம்பி. மாடிக்குப் போய் உக்காந்து எழுதுங்க’ என்றார். அடுத்த ஒருமணி நேரத்தில் எழுதிக்கொண்டு வந்தார். படித்துவிட்டு பேப்பரை மூடினார். ஸ்ரீதரின் வாழ்க்கையின் இன்னொரு பக்க கதவைத் திறந்தார். ‘ரத்தபாசம்’ நாடகத்தை அரங்கேற்றினார். நாடகம் முடிந்ததும், ‘இவ்வளவு பெரிய கதையை எழுதியது ஒரு சின்னப்பையன். அவனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்’ என்று ஸ்ரீதரை மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தினார். அப்போது எழும்பிய கரவொலியை, ‘போதும் போதும்’ என்று சொல்லி நிறுத்துவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது.

பிறகு வசனம் எழுதுவதற்கு படங்கள் வந்துகொண்டே இருந்தன. ’எதிர்பாராதது’, ‘யார் பையன்’, உத்தமபுத்திரன்’, ’அமரதீபம்’ என்று ஏகப்பட்ட படங்கள். ‘ப்ராணநாதா’, ‘தேவி’ என்று பேசப்பட்டு வந்த வசன பாணியை மாற்றினார். நாமெல்லோரும் பேசிக்கொள்ளும்படியான ஸ்டைலில் எழுதினார். அதை முதன்முதலாகத் திரையில் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள் ரசிகர்கள்.

மேலும் ‘ரத்த பாசம்’ அதே பெயரில் திரைப்படமாகவும் வெளியாகி வெற்றி பெற்றது. அந்தப் படத்தை ‘பாய் பாய்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தது ஏவிஎம். இதுவே, ஸ்ரீதர் எப்படிப்பட்ட திறமையுடனும் பிடிவாதத்துடனும் திகழ்ந்தார் என்பதற்குச் சான்றாகவும் அமைகிறது.ஜூபிடர் நிறுவனத்துடன் இணைந்து அப்படத்தைத் தயாரிக்க ‘அவ்வை’ டி.கே.சண்முகம் முன்வந்தபோதும் கூட, திரைக்கதை வசனத்தை ஸ்ரீதரே எழுதுவார் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் அழுத்தமாகச் சொல்லும் வகையில், திறன்மிக்க வகையில் செயலாற்றினார் ஸ்ரீதர்.

ஆர்.எஸ்.மணி, டி.ஆர்.ரகுநாத், டி.பிரகாஷ் ராவ், அடூர்த்தி சுப்பாராவ் போன்ற இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவம், ஸ்ரீதரை இயக்குநராகவும் உருமாற்றியது. 1959இல் ‘கல்யாண பரிசு’ தந்தார். அந்த திரைப்படம், அதுவரை திரையுலகில் நிலவி வந்த பல போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

கொஞ்சம் டீடெய்லாக சொல்வதானால் அப்போது எம்ஜிஆரும் சிவாஜியும் மிகப்பெரிய ஹீரோக்களாக கொடிகட்டாமலேயேப் பறந்தார்கள். ஆனால் அவர்களிடம் கால்ஷீட் கேட்கவில்லை ஸ்ரீதர். அன்றைய தேதியில், ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் என்று எவரையும் இசையமைக்க அழைக்கவில்லை.படத்தின் நாயகனாக ஜெமினி கணேசனை வைத்துக்கொண்டார். அதுவரை பாடகர் என்று எல்லோருக்கும் தெரிந்த ஏ.எம்.ராஜாவை இசையமைப்பாளராக்கினார். காதல் காவியம் என்று ‘தேவதாஸ்’ பேசப்பட்டு வந்ததை, அப்படியே தன் படமாக மாற்றினார். காதல் பரிசாக, அதன் உன்னதம் சொன்ன ‘கல்யாண பரிசு’ கொடுத்தார். அது காதல் பரிசு, கல்யாண பரிசு மட்டுமா? தமிழ்த் திரையுலகிற்கு ஸ்ரீதர் தந்த முதல் பரிசு அது.

காதலின் அடையாளமாக ‘தாஜ்மஹால்’ இருப்பது போல், இங்கே, ‘வசந்தி’ கேரக்டரைப் பார்த்தது தமிழ்ச் சமூகம். எந்தப் பெயர் கொண்ட பெண்ணைக் காதலித்தாலோ ஆணைக் காதலித்து தோற்றிருந்து வேறொருவரை கல்யாணம் செய்துகொண்டாலோ… அவர்கள் ‘வசந்தி’ என்று பிறந்த பெண் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி, காதலைப் போற்றினார்கள். ஐம்பதுகளின் இறுதியில் தொடங்கி அறுபதுகளின் நிறைவிலும் கூட, ஏராளமான ‘வசந்திகள்’ பிறந்தார்கள்.  வசனங் களில் மட்டுமே மாயாஜாலங்களை நிகழ்த்தி இப்படத்தை மக்களுக்கு நெருக்கமானதாக மாற்றியிருக்கலாம்.அந்த வித்தையை அறிந்தவர் தான் ஸ்ரீதர். ஆனால், அதற்குப் பதிலாக ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் உடன் இணைந்து ‘காட்சிப்பூர்வமானதாகவும்’ ஆக்கினார். படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவது, சராசரி மனிதர்களின் வாழ்பனுபவங்களைச் சொல்லும் நிகழ்வுகளைக் காட்சிகளாக ஆக்குவது, அதற்கு முன் இராத கேமிரா கோணங்களையும் நகர்வுகளையும் காட்சிப்படுத்தியது என்று பல சிறப்புகள் அப்படத்திற்கு உண்டு. அனைத்துக்கும் மேலே ஜெமினி கணேசன், சரோஜா தேவி, விஜயகுமாரியை மீறி கே.ஏ.தங்கவேலு – எம்.சரோஜாவின் நகைச்சுவை படத்திற்கு முதுகெலும்பாக அமைந்தது. அதுவரை வந்த காதல் படங்களில் இருந்து ‘கல்யாண பரிசு’வை வேறுபடுத்தியது.அந்தப் படத்தின் வெற்றி தமிழ் திரையுலகின் போக்கையே திசை திருப்புவதாக அமைந்தது. ஒரு ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக மாறியது.

பிறகு ‘மீண்ட சொர்க்கம்’, ‘விடிவெள்ளி’, ‘புனர்ஜென்மம்’ படங்களை இயக்கினார் ஸ்ரீதர். 1961இல் ‘தேன் நிலவு’ தந்தார். பெரிய வெற்றியாக அமையாவிட்டாலும் கூட, இன்றளவில் நகைச்சுவைப் படங்களுக்கான முன்மாதிரியாகத் திகழ்கிறது இப்படம்.

‘சின்னச் சின்ன கண்ணிலே’, ‘பாட்டு பாடவா’, ‘ஓஹோ எந்தன் பேபி’ என்று தேனினும் இனிய பாடல்களைத் தந்தார் ஏ.எம்.ராஜா. ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா என்று காதலும் நகைச்சுவையும் ததும்பச் செய்யும் நடிகர்களின் துணையோடு ’ரொமாண்டிக் காமெடி’யாக இப்படத்தினை உருவாக்கியிருந்தார் ஸ்ரீதர்.

மிகக்குறைந்த நாட்களில், குறைவான செட்களில் படம்பிடிக்கப்பட்ட ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. காதல் எனும் ஒரேயொரு உணர்வினைக் கொண்டு ஒரு முழுப்படத்தையும் நிரப்பிவிட முடியும் என்று அதில் நிரூபித்திருந்தார் ஸ்ரீதர். ஒரே களத்தில் படமாக்குவதெல்லாம் எவரும் நினைத்துப் பார்க்காத விஷயம். ஆஸ்பத்திரியில் மட்டுமே நடக்கிற கதையை எடுத்தார். அது… தமிழ் சினிமாவுக்கு ஸ்ரீதர் பாய்ச்சிய புதியதொரு ரத்தம். கல்யாண் குமார், முத்துராமன், தேவிகா என்று அக்காலகட்டத்தில் முன்னணியில் இல்லாத நடிகர், நடிகையரைக் கொண்டு அதனைச் சாதித்தார்.அந்தப் படத்திலும் கதை என்பது கடுகளவுதான். அதனைத் திரைக்கதை எழுதும் திறமையால் பூதாகரமாகக் காட்டியிருந்தார் ஸ்ரீதர்.

கடுமையான சோகத்திற்கு ஆளாகும் ஒரு நபரின் வாழ்வை ‘சுமைதாங்கி’யில் சொன்னார். அந்த வகைமை படங்களை ரசிப்பவர்களுக்கு அது இன்றுவரை ஒரு ‘மைல்கல்’ ஆகவே உள்ளது.

‘அடுத்த ஜென்மத்துலயும் உன்னை பழிவாங்காம விடமாட்டேன்’ என்று வில்லத்தனத்தின் உச்சத்தனத்தைக் காட்டும் பாத்திரங்கள் இன்று சர்வ சாதாரணம். அதற்கான தொடக்கத்தைத் திரையுலகில் அமைத்தவர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர்.அதற்கு வித்திட்ட படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. அந்தப் படத்தில் நூறு வயதைத் தாண்டியவராக, தடுமாறும் உடலமைப்புடன் தோன்றி நம்மை மிரட்சிக்கு ஆளாக்குவார் எம்.என்.நம்பியார்.

1964இல் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை 2கே கிட்ஸ்களும் கூட ரசிக்கத்தான் வேண்டும். அந்த அளவுக்கு ‘எவர்க்ரீன் இளமை’யை நிறைத்திருக்கும் அப்படம். காஞ்சனாவையும் ரவிச்சந்திரனையும் அறிமுகப்படுத்தினார். ஆழியாறு பகுதியை, முதன்முதலாக அப்படிக் காட்டியிருந்தார். அந்தக் காலத்தில் பேருந்தைக் கூட ‘கார்’ என்று சொன்ன மக்கள் அதிகம். ‘காதலிக்க நேரமில்லை’ படம் தொடங்கியதும் ‘என்ன பார்வை உந்தன் பார்வை’ பாட்டு. அதில் காஞ்சனா ஆடுவதை கார்கண்ணாடியில் காட்டுவார். காரில் முத்துராமன் உட்கார்ந்திருப்பார். பாட்டு முடிந்ததும் காரில் இருவரும் கிளம்புவார்கள். அப்போது ஓபனில் இருக்கும் கார், கொஞ்சம் கொஞ்சமாக டாப் பகுதி மூடிக்கொண்டே வரும். வாய் பிளந்து பார்த்தார்கள் ரசிகர்கள்.நகைச்சுவையே பிரதானம் என்பதற்கேற்ப நாகேஷ், டி.எஸ்.பாலையா, ரவிச்சந்திரன், முத்துராமன், சச்சு என்று பலரையும் கொண்டு நம்மைச் சிரிக்க வைத்திருந்தார் ஸ்ரீதர்.

மேலும் காஞ்சனாவும் ராஜஸ்ரீயும் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பித் தங்கள் பங்களாவுக்குள் நுழையும் காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார் ஸ்ரீதர். இப்போதும் கூட ஆச்சர்யத்தை மூட்டுகிற ‘மேக்கிங்’ அது.பின்னாட்களில் வெண்ணிற ஆடை, கொடிமலர், நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு, சிவந்த மண், அவளுக்கென்று ஒரு மனம், அலைகள், உரிமைக்குரல் என்று ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பல திரைப்படங்களைத் தந்தவர் ஸ்ரீதர். அவை தரும் காட்சியனுபவமும் வெவ்வேறுபட்டதாக இருக்கும்.

‘சிவந்த மண்’ படம் இன்னொரு பிரமாண்டம். ‘பட்டத்து ராணி’யும் ‘ஒரு ராஜா ராணியிடம்’ பாட்டும் ஸ்ரீதரின் பரீட்சார்த்த முயற்சிகள். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம். இதிலும் சிவாஜிக்கு மேக்கப் இருக்காது. சிவாஜியை மட்டுமே இயக்குவார் என்று சொல்லப்பட்ட நாட்களில், எம்ஜிஆரை கொண்டு ஸ்ரீதர் உருவாக்கவிருந்த படங்கள் அடுத்தடுத்து நின்றுபோயின. அதனால் ஏற்பட்ட அதிருப்தியைப் போக்கியது ‘உரிமைக்குரல்’. வழக்கமான கமர்ஷியல் படம் என்றபோதும், அதில் இருந்த ஜனரஞ்சகத்தன்மை இயக்குனரின் சிறப்பை எடுத்துக்காட்டியது.

ஜெமினி, சிவாஜி, எம்ஜிஆர், முத்துராமன் என்று பயணித்த ஸ்ரீதர், எழுபதுகளின் பிற்பாதியில் அக்காலகட்டத்து இளம் நட்சத்திரங்களோடு கைகோர்க்கவும் தயங்கவில்லை. அதனாலேயே ‘மீனவ நண்பன்’ எடுத்த கையோடு அவரால் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தைத் தர முடிந்தது. ‘தண்ணி கருத்திருச்சி’ பாடலைத் தயக்கம் ஏதுமின்றிக் காட்சிப்படுத்த முடிந்தது. அந்த படத்தில் ஜெயசித்ராவின் பாத்திரத்தையும் நியாயப்படுத்துகிற வகையில் அவரால் கதை சொல்ல முடிந்தது.

‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’, ‘சௌந்தர்யமே வருக வருக’, ‘மோகன புன்னகை’ என்று இயங்கிய ஸ்ரீதர், பிறகு கார்த்திக், ஜெயா, நிழல்கள் ரவியைக் கொண்டு ‘நினைவெல்லாம் நித்யா’ தந்தார். ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்று இளைய தலைமுறையினர் பாடிக்கொண்டே தியேட்டருக்கு வரக் காரணம் ஆனார்.

வெற்றிகளையும் தோல்விகளையும் மாறி மாறிக் கண்டாலும், தான் நினைத்த படைப்புகளைத் தருவதில் ஸ்ரீதர் ஒருபோதும் சுணக்கம் காட்டியதில்லை. எண்பதுகளிலும் அது தொடர்ந்தது. பல தோல்விகள் அடுத்தடுத்து வந்தபோதும், இடையிடையே ‘தென்றலே என்னைத் தொடு’ மாதிரியான வெற்றிகளைத் தந்து ரசிகர்களைத் திருப்திப்படுத்தினார் ஸ்ரீதர். அவரது இயக்கத்தில், இறுதியாக ‘தந்துவிட்டேன் என்னை’ திரைப்படம் வெளியானது.

தமிழில் வெவ்வேறுபட்ட வகைமையில் படங்களைத் தந்த இயக்குனர்களில் முதன்மையானவர் ஸ்ரீதர். பின்னாட்களில் மணிவண்ணன் போன்ற மிகச்சில இயக்குனர்களே அந்த வரிசையில் சேர்ந்தனர்.அப்படியொரு சிறப்பைப் பெற, பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தோடு பல மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களையும் கண்டிருக்க வேண்டும். அதனைப் பெற்றவர் ஸ்ரீதர். ஸ்ரீதரின் படம் இப்படித்தான் இருக்கும் என்று கோடுகிழித்து, சட்டத்துக்குள்ளேயோ வட்டத்துக்குள்ளேயோ அடைத்துச் சொல்லிவிடமுடியாது. அந்தக் கோடுகளையும் சட்டத்தையும் வட்டத்தையும் தாண்டிச் சென்றார் ஸ்ரீதர். அதனால்தான் அவர் புதுமை இயக்குநர் என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இப்பேர்பட்ட ஸ்ரீதரின் படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பதும், அவற்றில் அவர் மறைத்து வைத்துள்ள நுட்பங்களை மீட்டெடுத்துச் சிலாகிப்பதுமே அவருக்கான சிறந்த ‘போற்றுதலாக’ அமையும்!