கோலிவுட்டோ, பாலிவுட்டோ எல்லா சினிமா உலகிலும் எம்புட்டோ வாரிசு நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மாத்திரமே தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனசில் நீங்கா இடம் பிடிச்சிருக்காய்ங்க. அவர்களில் முக்கியமான நடிகர் நவரச நாயகன் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகனாக தமிழ் சினிமாவில் அறியப்பட்டாலும் பிற்காலத்தில் தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மத்தியில் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தவர். துறுதுறு சிட்டி பாய், கிராமத்து இளைஞன், அப்பாவி, சீரியஸ் கேரக்டர், காமெடி ஹீரோ என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடை, உடை, பாவனை, தோரணை என அனைத்தையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தக்கூடிய அசாத்திய திறமை கொண்ட நடிகரிவர் இதுவே இவரது வெற்றிக்கு சான்று. கொஞ்சூண்டு விரிவா சொல்றதானா முத்திரை என்பது சினிமாவில் மிக எளிதாகச் செஞ்சிடும் காரியம். இரண்டு மூன்று படங்களிலேயே ‘இந்த நடிகர் இப்படி நடிப்பதற்கானவர்’ அப்படீன்னு முத்திரை குத்திப்புடுவாய்ங்க ரசிகர்கள். ஆனால், அவரை ‘அமுல்பேபி’ என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் போதே, ‘சாக்லெட் பாய்’ -ன்னு ரசிக்கத் தொடங்கினாய்ங்க. இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘ஆக்ஷன் ஹீரோ’ வாகவும் ஏற்றுக் கொண்டாய்ங்க இப்படி சிலாகித்துக் கொண்டிருக்கும் போதே, ‘ஆக்டிங் பிரமாதம்’ -ன்னும் புகழ்ந்தாய்ங்க இப்படி எல்லாவிதமாகவும் பண்ணக்கூடிய நடிகர் என்று பேரெடுப்பது அத்தனை சுலபம் அல்ல. அப்படி எளிமையில்லாத விஷயத்தை மிக எளிமையாகப் பெற்று தனியிடம் பிடிச்சவர்… ஆக்டர் நவரச நாயகன் கார்த்திக்.
நடிகர் கார்த்திக் எல்லோரும் சொல்வது போல் நடிக்க வந்ததது ஒரு விபத்து என்பார். ஆம் இவரும் நடிக்க வந்தது ஒரு ரியல் ஆக்சிடெண்ட்தான். இயக்குனர் இமயம் பாரதிராஜா காரில் வந்து கொண்டிருந்தப்போ எதிரே சைக்கிளில் வந்த சிறுவன் காரில் மோதி லேசாக சிராய்த்துக் கொண்டான். உடனடியாக அவனை தன் காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டு, பாரதிராஜா மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் உள்ள வீட்டு போர்டிகோ பகுதியில், விளையாடிக் கொண்டிருந்த பையனைப் பார்த்தார். அடுத்தநாள் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய ’அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு நாயகன் மட்டுமே கிடைக்கலை-ன்னு ஏங்கிகொண்டு இருந்த அவருக்கு கார்திக்கை பார்த்ததும் ஹேப்பி ஆயிட்டார்.
அதிலும் பார்த்த பையன் நடிகர் முத்துராமனின் மகன் என்று அறிந்ததும் உடனே பேசி, ஓகே செய்து, அடுத்தநாள் காலையில் முரளியை குமரி மாவட்டத்துக்கு ரயிலில் ஏத்திக்கிட்டு போய்ட்டார். ஆம் கார்த்தியின் நிஜப் பெயர் முரளி. பாரதிராஜாதான் அவரை கார்த்திக் அப்படீன்னு மாற்றினார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் தனது முதல் படம் என்றே தெரியாத வகையில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் கார்த்திக்.அதுதான் கார்த்திக்கின் முதல் படம் என்று சொன்னால், இன்றைய தலைமுறையினர் நம்பவே மாட்டார்கள். விச்சு எனும் கதாபாத்திரமாகவே வார்த்திருப்பார் பாரதிராஜா. வாழ்ந்திருப்பார் கார்த்திக். இளையராஜாவின் சொந்தப் படம் வேறு. எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த ராதாவுக்கும் அதுதான் முதல்படம்.
அதன்பிறகு அடுத்தடுத்து எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் பொருந்திப்போனார் கார்த்திக். 80களில் தொடங்கிய கார்த்திகின் பயணத்தில், பல வெற்றி படங்கள் மற்றும் வெள்ளி விழா படங்கள் ஏராளம். இதற்கு முக்கிய காரணம் கார்த்திக்கின் நடை, பாவனை, ரியாக்ஷன். இவை அனைத்தும் தான் கார்த்திக்கை தனித்துவம் மிக்க நடிகராகவும் மகத்துவம் மிக்க கலைஞனாகவும் காட்டிச்சு.. குறிப்பா கார்த்திக்கின் நடை, பேசுகிற பாவனை, முகத்தில் படபடவென விழுந்து கொண்டே இருக்கும் டியாக்ஷன்… இவை எல்லாமே கார்த்திக்கை தனித்துவம் மிக்க நடிகராகவும் மகத்துவம் மிக்க கலைஞனாகவும் எக்ஸ்போஸ் பண்ணிச்சு ..
கார்த்தி உடன் இணைந்து நடித்த எல்லா நடிகைகளுக்குமே இவருடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல், மௌன ராகம், வருஷம் 16, பொன்னுமணி, பூவரசன், மேட்டுக்குடி, கோகுலத்தில் சீதை, பிஸ்தா, சுயம்வரம் என கார்த்திக்கின் நடிப்பிற்கு சான்றாக உள்ள படங்கள்.
மௌன ராகம் படத்தில் சிறு காட்சிகளில் வந்து போனாலும், அந்த படத்தில் துறுதுறுவென இருந்த கார்த்திக்கிற்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் கார்த்திக் என்னும் நடிகர் பதித்த முத்திரையை வேறு யாராலும் முறியடிக்கவே முடியாது. அன்றைய காலத்தில் ஏராளமான பெண் ரசிகைகள் இவருக்கு இருந்தனர். அப்போது இவரது ஹேர்ஸ்டைல் வைத்துக் கொண்டு சுற்றிய இளைஞர்கள் கூட்டம் ஏராளம்.
ஆரம்ப காலத்தில் காதல் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த கார்த்திக் அதன்பிறகு தனது திரை வாழ்வில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்தார். அதன்பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் கவுண்டமணி உடன் இவர் இணைந்த படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ’உள்ளத்தை அள்ளித்தா’ படம் இப்போது பார்த்தாலும் சலிக்காது.
அதன்பிறகு கேவி ஆனந்த் இயக்கிய அநேகன் படத்தில் கார்த்தி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்தார். நடிகராக மட்டுமின்றி அமரன் படத்தில் வெத்தல போட்ட சோக்குல என்ற பாடல் பாடி இருந்தார். அந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து சில பாடல்களையும் பாடி மனசில் நின்றார்.
இப்படி ’அலைகள் ஓய்வதில்லை’யில் தொடங்கிய கார்த்திக்கின் அலை, இன்றளவும் தமிழ் ரசிகர் மனசில் ஓய்வே இல்லாமல் வந்து போய் கொண்டிருக்கிறது.
சொந்த வாழ்க்கையில் பல சரிவுகளை, ஏமாற்றங்களை, துரோகங்களைச் சந்தித்தவர் கார்த்திக். அவர் மீதும் நிறைய புகார்கள் உண்டு. அவரது அரசியல் வாழ்க்கை ஒருபோதும் கவனத்துக்குரியதாக இருந்ததில்லை.
இவை அனைத்தையும் கடந்து படங்களில் நடிப்பது முழுக்க குறைந்துவிட்டாலும், 65 வயசானாலும் ஆளும், ஸ்டைலும் அப்படியே மெயிண்டெயின் செய்து வாழும் கார்த்திக்கு சினிமா பிரஸ் கிளப் சார்பில் ஹேப்பி பர்த் டே சொல்வதில் மகிழ்ச்சி