புத்தம் புது காலை…தாங்க முடியலடா சாமி…- நட்டி நடராஜ் காட்டம்!

‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் கடந்த 16-ம் தேதி வெளியான ‘புத்தம் புதுக் காலை’ என்னும் அந்தாலஜி திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இந்தப் படங்களை இயக்கியிருக்கிறார்கள்.

இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘அவரும் நானும்/ அவளும் நானும்’ என்ற கதையை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் ரீத்து வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் ‘மிராக்கிள்’ என்ற கதையை இயக்கியுள்ளார். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் ‘ரீயூனியன்’ கதையில் ஆன்ட்ரியா, லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் நடித்துள்ளனர்.

சுஹாசினி மணிரத்னம் இயக்கி நடித்திருக்கும் ‘காஃபி எனி ஒன்’ கதையில் அவருடன் இணைந்து ஸ்ருதிஹாசன், அனுஹாசன் இவர்களுடன் சுஹாசினியின் அம்மாவும்  நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் 16-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

ஐந்து கதைகளிலும் நடிப்பு பரவாயில்லை.. ஆனால், சுவாரசியமில்லாத திரைக்கதையாக உள்ளது. பெரிய இயக்குநர்கள், பிரபலங்கள் என்றால்தான் அமேஸானில் இப்படி வாய்ப்பு தருவார்களா என்றெல்லாம் இணையத்தில் கமெண்ட்டுகள் பறந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ், “புத்தம் புதுக் காலை. ஆகக் கொடுமை. வாழ்த்துகள். தாங்க முடியலடா சாமி. கர்ப்பமுற்றால் ஸ்பேனிஷ் பாட்டு பாடுவோம். எங்களுக்கு ஸ்பேனிஷ் தெரியுமே…

ஆகச் சிறந்தவர்கள் தோற்றால் வளர்பவர்களுக்கு இடம் கிடைக்காது. நீங்கள் தோல்வியுற்ற நெறிமுறைகளைப் பாருங்கள். தயவு செய்து ஒரு தலைமுறையைக் கொல்லாதீர்கள். இடம் கொடுங்கள்.. இடம் கிடைக்கும்…” என்று ‘நட்டி’ நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

‘நட்டி’ நட்ராஜின் இந்த தைரியமான ட்வீட் தற்போது தமிழ்ச் சினிமா துறையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.