தமிழ் சினிமாவில் எவராலும் மறக்க முடியாத நிறுவனமான ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ படத்தில் ஆரி நாயகனாகவும், ஷாஷூவி பாலா நாயகியாகவும் நடித்துள்ள படத்தை கவிராஜ் இயக்கியுள்ளார். இப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்தைச் சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.
இந் நிகழ்சியில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கற வன் பாத்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும், இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்து இருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்து இருக்கிறார். அதேபோல், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பும் தெரிகிறது. இப்ராஹிம் ராவுத்தர் நல்ல பெயர் சொல்லும் படங்கள் எடுத்தார். அவர் பெயரை சொல்லும் அளவிற்கு அவர் மகன் முகமது அபுபக்கர் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழில் இனிமையாக பேசிய கதாநாயகிக்கு வாழ்த்துகள்” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தவர்கள் இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்த் அவர்களும் தான். இன்று அவரில்லாமல் அவருடைய மகன் முகமது அபுபக்கர் தலைமையில் இந்த விழா நடக்கிறது. அவருக்கு வாழ்த்து கள். கவிராஜ் இம்மாதிரி படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை.பொதுவாக கதாநாயகிகள் மேடையில் அதிகம் பேசமாட்டார்கள். ஆனால், இலங்கை பெண்ணாக இருந்தாலும் தமிழில் பேசி அசத்திவிட்டார். ஆரியின் நடிப்பும், படத்தேர்வின் பாணியும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.
இயக்குநர் அமீர் பேசும்போது, “என்னுடைய வாழ்வில் கேட்டுப் பெறக் கூடாத விஷயங்கள் மூன்று வைத்திருக்கிறேன். கைத்தட்டல், வாழ்த்து மற்றும் நன்றி, கைத்தட்டுங்கள் என்று கேட்பதில் கூச்சப்படுவேன். நம் பேசுவது நன்றாக இருந்தால் கைத்தட்டல் தானாக வரும். இயக்குநர் கவிராஜ் கூறியது போல நானும் 17 வருடங்களுக்கு முன்பு கமலஹாசன் மற்றும் பாரதிராஜா அவர்களை நான் அழைத்து அவர்கள் வந்ததில் பெருமையடைந்தேன். நான் இந்த விழாவிற்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் தான். ஒன்று ஆரியின் வற்புறுத்தல், இரண்டாவது ராவுத்தர் பிலிம்ஸ். அதுமட்டுமில்லாமல், நான் வந்தால் என் மூலம் இந்த படத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடும், தரமான படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் தான் வந்தேன்.என்னைப் பொருத்தவரை திரைத்துறையில் புகழ் நிரந்தரமில்லை.
இப்ராஹிம் ராவுத்தர் மிக எளிமையான மனிதர். அவர் இன்று இருந்திருந்தால் இந்த அரங்கத்தில் எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்திருப்பார்கள். மேடை நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட இந்த நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கிறது. விஜயகாந்திற்கு ‘கேப்டன்’ என்று பெயர் வைத்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவரை செதுக்கியவர் ராவுத்தர். அப்படி இருந்த நண்பர்கள் ஏன் பிரிந்தார்கள்? சினிமா அவர்களைப் பிரித்து விடும். அதேபோல் தான் நானும் பாலாவும். திரைத்துறையில் நன்றி என்பது இருக்காது. அப்படியே இருந்தாலும் அது ஊசி அளவு தான் இருக்கும் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே, நன்றியுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்.
மேலும், ஜீவி இல்லாத சினிமா என்பதே இல்லை என்று ஒரு காலம் இருந்தது. அப்படிப்பட்ட அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்டார். அதுதான் சினிமா. சினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள் தெரியுமா? நட்சத்திரம் என்பது மின்னி மறைவது, அது போல தான் சினிமாக்காரர்களும். ஆகவே, புகழும் வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதைப் புரிந்துக் கொண்டு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆகையால், வெற்றியடைந்தபின் மற்றவர்களையும் கைத் தூக்கி விடுங்கள். நீங்கள் போதே உங்களுடன் பயணித்தவர்களை உங்களுடனே கூட்டிச் செல்ல வேண்டும்.
எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியைப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது”என்றார்.
இயக்குநர் யு.கவிராஜ் பேசும்போது, “நான் சின்னத்திரையில் இருந்து வந்தவன். என் சேனல் சன் டிவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராவுத்தர் பிலிம்ஸ்-ன் அபுபக்கர் கதை கேட்டதும் என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்புக் கொடுத்தார். அவரின் தந்தை இப்ராஹிம் ராவுத்தர் 1980, 90 களில் வெற்றிகரமான தயாரிப்பாளராக இருந்தார். அதேபோல அபுபக்கரும் வெற்றிபெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். ஆரியிடம் கதைக் கூற சென்றேன். பாதி கதையைக் கூறிக் கொண்டிருக்கும்போதே என் வீட்டில் இருந்து ஒரு போன் வந்தது. அதைப் புரிந்துக் கொண்டு மீதிக் கதையை பிறகு கேட்கிறேன் செல்லுங்கள் என்று என்னை அனுப்பி வைத்தார். மறுநாளே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அவர் மிகவும் நல்ல மனிதர்.
இயக்குநர் அமீருடன் மேடையில் இருப்பதில் பெருமையடைகிறேன்.மேலும், இப்படத்தின் தலைப்பு எதைக் குறிக்கிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பொதுவாக ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கடவுள் என்று தான் கூறுவார்கள். ஆனால், இந்த படம் அறிவியல் சார்ந்த படம். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகத் தான் இருந்து வருகிறது. அதேபோல், வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா? என்று கேள்விக்கான பதிலாக இந்த படம் இருக்கும். இது போன்று அறிவியல் சார்ந்த விஷயங்களைத் தமிழில் ஹாலிவுட் தரத்திற்கு கொடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு கொடுத்தால் தான் தமிழில் நல்ல திரைப்படங்கள் உருவாகும்”
என்றார்.
நடிகர் ஆரி பேசும்போது, “ராவுத்தர் பிலிம்ஸ் அறிமுகமில்லாத பல இயக்குநர்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். முகவரியில்லாத பலருக்கும் முகவரி கொடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இப்படத்தில் ஒப்பந்தமாகும் நேரத்தில் நான் நடித்த ‘நாகேஷ் திரையரங்கம்’ வெளியாக விருந்தது. அப்படம் வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் சம்பளத்தில் ஏற்ற இறக்கம் இருக்காது என்று கூறினார்கள் ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனத்தார்கள். இந்த தலைமுறையில் ஏலியன் வைத்து எடுக்கும் படத்தில் நான் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். இயக்குநர் கவிராஜ் கிராஃபிக்ஸ் பற்றிய அறிவு இருக்கிறது. அவர் பாதி கதைக் கூறும்போதே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
அறிவியல் புனைகதைகள் மற்றும் ஏலியன் சார்ந்த விஷயத்தைப் படமாக்க ஹாலிவுட்டில் ரூ.1000/- கோடி செலவு செய்வார்கள். ஆனால், நாங்கள் அந்த தரத்திற்கு இணையாக EFX என்று சொல்ல கூடிய கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ஒரு வருடம் உழைத்திருக்கிறோம். அபுபக்கரின் கதாபாத்திரம் அவர் இயல்பு போலவே அமைந்திருக்கிறது. அவர் மூலம் இன்னும் பல இயக்குநர்கள் உருவாவார்கள் என்பதில் ஐயமில்லை. இதனிடையே என்னுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என் குழந்தையை அமைதியாக்கி விட்டார் இயக்குநர் அமீர். அந்த யுக்தியை கையாண்டு சட்ட சபையிலும் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா பேசும்போது, “இந்த படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். பொதுவாக இசையமைப்பாளர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு வர மாட்டார்கள். ஆனால், எனக்கு படப்பிடிப்பு தளத்திற்கு செல்வது மிகவும் பிடிக்கும். அங்கு ஒவ்வொருவரின் கடின உழைப்பையும் பார்த்தேன். எனது தந்தை இளையராஜாவிடம் பணியாற்றியிருக்கிறார்” என்றார்.
நடிகை ஷாஷூவி பாலா, “நான் இலங்கை பெண். படத்தின் தலைப்பிற்கேற்றவாறு என்னுடைய பயணத்தை தமிழ் சினிமாத் துறையில் ஆரம்பித்திருக்கிறேன். அதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. கதாநாயகன் ஆரி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார்”என்றார்
தயாரிப்பாளர் முகமது அபுபக்கர் பேசியதாவது, “தந்தையின் ஆசியுடன் முதல் படம் நடித்து தயாரித்திருக்கிறேன். படக்குழுவிற்கு நன்றி. என் தந்தையின் புகழ் குறையாத வண்ணம் மேலும், இது போன்று தரமான படங்களைத் தயாரிப்பதன் மூலம் பல தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்றார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒரு நாளில் பல காட்சிகளை எடுப்பதற்கு காரணம் ஒளிப்பதிவாளர் தான். அந்தப் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன். படத்தொகுப்பை கௌதம் ரவிச்சந்திரன் செய்திருக்கிறார். கலை இயக்குநர் பி.சேகர் தயாரிப்பாளரின் செலவைக் குறைப்பதில் வல்லவர். இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யாவின் பணி இப்படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.
சண்டை காட்சிகளைத் தெளிவாக, நேர்த்தியாக அதேசமயம் பிரமாண்டமாகவும் செய்திருக்கிறார் டேஞ்ஜர் மணி. அதேபோல் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில், இயக்குநர் கே.பாக்யராஜ் இசை தகட்டை வெளியிட்டார்.