நடிகையர் திலகம் படத்தில் பானுமதி ரோலில் அனுஷ்கா ஷெட்டி?

0
356

நடிகையர் திலகம் படத்தில் பழம்பெரும் நடிகை பானுமதி கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் நடிகை சாவித்திரிக்கும் எனக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது.

நாக் அஸ்வின் இயக்கி வரும் இந்த படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் சமந்தா, துல்கர் சல்மான், ராஜேந்திர பிரசாத், ஷாலினி பாண்டே, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், பழம்பெரும் நடிகை பானுமதி கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாவித்ரியின் திரை வாழ்வில் சக போட்டியாளராக திகழ்ந்த பானுமதி, அவரது சொந்த வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தார் என்பதால், அனுஷ்காவை இந்த கதாபாத்திரத்திற்கு அணுகியதாக கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு இதுவரை வெளியிடவில்லை.வைஜெயந்தி மூவீஸ் தயாரித்து வரும் இந்த படம் மார்ச்.29ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ்-தெலுங்கில் உருவாகி வரும் இந்த படம் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இப்படம் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், “சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதே சமயம் அவ்வளவு பெரிய நடிகையைப் போன்று நடிப்பதில் பயமும் இருந்தது. சாவித்திரியின் மகளிடம் பேசினேன். அவர் தனது தாயின் நடை உடை பாவனைகளை எனக்குக் கற்றுத் தந்தார். இப்படத்தில் நடிக்கத் துவங்கியபோது மேக்கப் போட மட்டும் மூன்றரை மணிநேரம் ஆகும். அதன் பிறகு அத்தனை மணிநேரமாக மேக்கப் போடுவது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இந்தப் படத்தில் நடித்ததில் எனக்குப் பெருமையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் “எனக்கும் சாவித்திரிக்கும் இடையே நிறைய ஒற்றுமை இருப்பதைப் புரிந்துகொண்டேன். சாவித்திரி நன்றாக நீச்சல் அடிப்பார். அதேபோல், எனக்கும் நீச்சல் என்றால் ரொம்பப் பிடிக்கும். நாங்கள் இருவரும் தேநீர் பிரியர்கள். அவர் கிரிக்கெட் விளையாடுவார். நானும் பள்ளியில் படித்தபோது கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். அவருக்கு கார் ஓட்டப் பிடிக்குமாம், எனக்கும்தான். இப்படி எனக்கும் அவருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன” என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.