நேத்ரா இசை வெளியீட்டு விழாவில் ஏ.வெங்கடேஷ் நெகிழ்ச்சி!

கிட்டத்தட்ட 22 படங்களை இயக்குநரும் நடிகருமான ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் கனடிய – இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நேத்ரா’ படத்தை வரும் பிப்ரவரி முதல் வாரம் ரிலீஸாக ஏற்பாடு நடக்கிறது.

பகவதி, ஏய், மலை மலை உட்பட 22 படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ஏ.வெங்கடேஷ். வினய், சுபிக்‌ஷா, ரித்விகா மற்றும் பலர் நடித்து கனடா வாழ் ஈழத்தமிழர் பரா.ராஜசிங்கம் மற்றும் வெங்கடேஷ் இணைந்து தயாரித்து உருவாகியுள்ள படம் நேத்ரா. வரும் பிப்ரவரி 8-ல் திரைக்கு வரும் இப்படத்தை ஸ்டார் மூவீஸுக்காக தியாகராஜன் வெளியிடுகிறார்.

இதையொட்டி சென்னையில்  நடைபெற்ற இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கள் கே.பாக்யராஜ், சரத்குமார், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, வசந்தபாலன் உட்பட பல திரைப் பிரபலங்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் வெங்கடேஷை வாழ்த்திப் பேசிய நடிகர் சரத்குமார், “ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்போல, இவர் ஆக்ஸிடென்டல் தயாரிப்பாளராகி விட்டார். கண்டிப்பாக வணிக ரீதியிலான வெற்றியைப் பெறுவார் என நம்புகிறேன். ஏனென்றால், சரியாகத் திட்டமிட்டுச் சொன்ன தேதிக்குள் ஷூட்டிங்கை முடிக்கும் ஒரு சில இயக்குநர்களில் வெங்கடேஷும் ஒருவர். அப்படிப்பட்ட திறமைசாலி”என்றார்

அத்துடன், “இந்தப் படம் முழுக்க முழுக்க கனடாவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. என்னை வைத்துப் படம் எடுக்கும்போது மட்டும் உள்ளூரிலேயே படம் எடுத்தார். இப்போது ஒரு முழு படத்தையே வெளிநாட்டில் எடுத்துள்ளார்’’ என கிண்டலாய் சொன்னார்.

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசும் போது,“இதுவரை வெறும் ஆக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் படங்களை மட்டும்தான் எடுத்துள்ளேன். முதல் முறையாக ஒரு த்ரில்லர் கதையைப் படமாக்கி உள்ளேன். அதிலும் வேறு வழியின்றி தவிர்க்க முடியாத காரணங்களால் இதற்கு நான் தயாரிப்பா ளராகவும் ஆகிவிட்டேன். ஆனால்`படத்தை வெளியிட எந்த விநியோகிஸ்தரும் முன் வராத போது, தானாக இதை வாங்கி வெளியிடுகிறார் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் சார். பிரசாந்த் இல்லாத ஒரு படத்தை இவர் வெளியிடுவது இதுவே முதல் முறை. அதற்கே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்’’ என்றார்.