“இந்தியன் 2” படத்தில் சேனாபதியின் ‘பர்ஸ்ட் லுக்’ !

கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996-ம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘இந்தியன்’ படம் பலதரப்பினரின் கவனத்தை கவர்ந்தது. தற்போது மக்கள் நீதி மய்யம் என்னும் தனிக்கட்சியை கமல்ஹாசன் தொடங்கியுள்ள நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்தார். இதில் கமல் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் தேர்வாகியுள்ளார்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் சிம்பு நடிப்பதாக செய்தி வெளியாகியது. குறிப்பாக கமலுக்கு பேரனாக சிம்பு நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் ரவி வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் ஆகியோர் வசனம் எழுதுகின்றன

இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் வயதான சேனாபதி கதாபாத்திரத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ புகைப்படம் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வர்மக்கலை முத்திரையான இருவிரல் ஆக்ரோஷத்துடன் வெளியான இந்தப்படம் பலரையும் கவர்ந்துள்ளது. இந்தியன்2 படப்பிடிப்பு வரும் 18-ம் தொடங்கும் என்ற அறிவிப்பையும் இந்த ‘பர்ஸ்ட் லுக்’ புகைப்படத்துடன் இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ளார்.

இந்தியப் படத்தில் சேனாதிபதி என்ற  பெயரில் சுதந்திரப் போராட்ட தியாகியாக, அநியாயத்தை தட்டிக் கேட்கும் முதியவராகக் கமல் நடித்து இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். அவரது தோற்றமும் உடல் மொழியும் தத்ரூபமாக 80 வயது முதியவரை கண்முன் நிறுத்தியது. மேலும் அந்தக் கேரக்டர் வர்மக் கலையை பயன்படுத்தி எதிரிகளைக் கொல்வதை வாடிக்கை யாகக் கொண்டிருக்கும். அந்தவகையில் இந்தியன் 2 படத்திலும் வர்மக் கலையை தொடரும் வகையில் விரல்களை மடக்கிய நிலையில் காட்சி வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.