பிரபுதேவா நடித்திருக்கும் ‘லஷ்மி’ திரைப்படம் ஒரு நடனத் திருவிழாவைக் காட்டப் போகிறது..!

நடிகர் பிரபுதேவா நடித்திருக்கும் ‘லஷ்மி’ திரைப்படம் ஒரு நடனத் திருவிழாவைக் காட்டப் போகிறது..!நடனம் என்பது ஒரு ஆற்றல். நடனம் ஆடுபவர்கள் மட்டுமல்லாமல் நடனத்தை ரசிப்பவர்களுக்கும் ரசிக்கும் ஆற்றலை அளிக்கும் ஒரு கலை இது. அந்த வகையில் நடனத்தில் மூழ்க விரும்பும் அனைவருக்குமான ஒரு படமாக உருவாகியுள்ளது ‘லஷ்மி’  திரைப்படம். பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பில் ஸ்ருதி நல்லப்பா மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆகியோர் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் பேபி டிவ்யா படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பிரபு தேவாவின் சிஷ்யையாக நடித்துள்ளார்.

நடனப் புயல் பிரபுதேவாவின் நடனத்திற்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார் சாம் சி.எஸ். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா நடன காட்சிகளை மிகச் சிறப்பாக படம் பிடித்திருக்கிறார். படத் தொகுப்பாளர் ஆண்டனி தன் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். இயக்குநர் விஜய் படத்தை இயக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குநர் விஜய் பேசுகையில், “தமிழ் சினிமா நீண்ட காலத்துக்கு பிறகு நடனம் பற்றிய ஒரு திரைப்படத்தை பார்க்க இருக்கிறது. ‘லஷ்மி’ திரைப்படம் சர்வதேச தரத்திலும், எமோஷன்  இந்திய தரத்திலும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்று படக் குழுவான நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

மேலும் இந்த ‘லஷ்மி’ திரைப்படம் ஒரு மிகப் பெரிய நடன திருவிழாவாக வரவேற்கப்படும்.. ஏற்றுக் கொள்ளப்படும்.. அங்கீகரிக்கப்படும் என்றே நாங்கள் நம்புகிறோம்.

‘லஷ்மி’ நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் ஒரு சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம். இந்தப் படத்தில் நடனக் கலையை முடிந்தவரை முழுமையாக கொடுத்திருக்கிறோம்.

படத்தில் என்ன இருக்கும் என்ற ஒரு ஆவலை ட்ரைலர் ரசிகர்களுக்கு உருவாக்கி இருக்கும் என நம்புகிறோம். பிரபுதேவா தனது கேரியரில் மிகச் சிறந்த உழைப்பு என்று சொல்லும் அளவுக்கு தனது நடிப்பை இந்தப் படத்தில் வழங்கியுள்ளார்..” என்றார் இயக்குநர் விஜய்.