மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்!

80களில் ரஜனி – கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் நடிப்புலகில் இருந்தது போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் – மலேசியா தேவன் குரல்களும் தனித்துவமாக முன்னணியில் இருந்த குரல்கள். ஆனாலும் அப்போது “தமிழ் சினிமாவில் டி.எம்.சௌந்தரராஜன் போலப் பாட யார் இருக்கிறார்?” என்று சிலபலர் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குத் தக்கதொரு பதிலாக வந்து சேர்ந்தவர்தான் மலேசியா வாசுதேவன். ஆனாலும் அவர் டி.எம்.எஸ். மாதிரியும் பாடவில்லை, வேறு யார்போலவும் பாடவில்லை. அவர் அவர் மாதிரித்தான் பாடினார்.

கே.ஜே.ஜேசுதாஸ் சாயலில்தான் ஜெயச்சந்திரன் குரல் இருக்கிறது என்றால் யாரும் மறுக்க மாட்டார்கள். எஸ்.பி.பால சுப்பிரமணியம் குரலை உன்னிப்பாகக் கவனிப்பாருக்கு கண்டசாலா நினைவுக்கு வரவே செய்வார். பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலும்கூட ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் ரகம்தான். இப்படிச் சொல்வதால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் அவரவருக் கான தனித்துவமே இல்லை என்பதாகாது. ஆனால், இந்த யாரின் சாயலும் இல்லாமல், இந்த யாரையும் விட தனது கம்பீரமான தனித்த குரலைத் தமிழ் சினிமாவில் நெடுங்காலத்துக்குப் பதிவு செய்தவர் டி.எம்.எஸ். மட்டுமே. தமிழை மிகச்சரியாக உச்சரித்த அவரின் அந்தக் குரலைத்தான் சாதாரண ரசிகன் “ஆண்” குரல் என்று அங்கீகரித்தான். அந்த ஆண் குரலுக்குப் பின்னாளில் வெற்றிடம் ஏற்பட்டு விடுமோ எனும் அச்சத்தைப்போக்க தமிழ் சினிமாவிற்குள் வந்துசேர்ந்தவர்தான் மலேசியா வாசுதேவன்.

கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வாசுதேவன் பிறந்தது மலேசியாவில். பிழைப்பு தேடி மலேசிய ரப்பர் தோட்டத்தைத் தஞ்சமடைந்த அவரது பெற்றோருக்கு அவர் எட்டாவது குழந்தை. மலையாள தேசத்தவர் என்றாலும் சுற்றி வசித்தவர்கள் தமிழர்களென்பதால் தமிழராகவே வளர்ந்தார் வாசு. தமிழ்ப் பள்ளியிலேயே படித்தார். தன்னோடு பிறந்த எல்லோருமே இசையை விரும்புகிறவர்களாய் இருந்தது வாசுதேவன் பாட்டுத்தேவனாகப் பரிணமிக்க ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தந்தது. இசை கற்றிருந்த அப்பாவிடமும், அண்ணனிடமும் ஆரம்பகாலத்தில் இசை பயின்றார். விளையும் பயிர் முளையிலே என்பதற்கு ஒப்ப எட்டு வயதிலேயே மேடையில் பாடத்தொடங்கியவர் அவர். அப்போதே அவருக்கு நடிக்கவும் விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த இரண்டு துறைகளிலும் மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார்.

ஆனாலும் இசைஞானி இளையராஜாதான் மலேசியா வாசுதேவனுக்கு மிகப் பெரிய வாய்ப்பை வழங்கினார், தான் இசையமைத்த பதினாறு வயதினிலே படத்தில். கவியரசு கண்ணதாசனின் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..’ என்ற அந்தப் பாடல் ஒரே இரவில் வாசுதேவனை முன்னணிப் பாடகராக்கியது. அதன் பிறகு ஏராளமான படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடினார். கோடைகால காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி என அவர் பாடிய மெலடிப் பாடல்கள் காலத்தால் அழியாதவை.

ஆனாலும் புதிய பாடகர்களின் வரவு மற்றும் அவரது உடல்நிலை காரணமாக சில ஆண்டுகளாக அவரால் பாட முடியாமல் அவஸ்தைப் பட்டு வந்தார்.

மகன் யுகேந்திரனை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சிகள் செய்தார்.வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மகனும் சுய முயற்சிகள் இல்லாமல் ஜாலியாக பொழுதைக் கழித்தார் என்கிறார்கள். வேறு வழி இன்றி சொந்தப் படம் எடுக்கும் முடிவிற்கு வந்தார். சம்பாதித்த பணத்தை எல்லாம் படத்தில் கொட்டினார்.பணம் போதவில்லை. செலவுகள் எகிறியது. அதிக வட்டிக்கு பல லட்சங்கள் கடன் வாங்கினார்.

ஒரு வழியாக படம் முடிந்தது. ஆனால் விற்கவில்லை. துடித்துப் போனார் வாசுதேவன். என்ன செய்வது என்று தெரியவில்லை. நஷ்டம். அத்தனையும் நஷ்டம். சொந்த ரிலீஸ் செய்யும் தவறான முடிவிற்கு வந்தார். அதற்கும் கடன் வாங்கினார். படம் ரிலீஸ் ஆனது. ஒருவாரம் கூட படம் ஓடவில்லை. பக்கவாதம் தாக்கியது. படுக்கையில் வீழ்ந்தார். உதவி செய்ய நாதி இல்லை. பாடவும் இயலவில்லை.

கலங்கிய நிலையில், மனம் பேதலித்து படுத்த படுக்கையாய் கிடந்தார். கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரித்தார்கள்..! மனம் நொந்த நிலையில் இதே பிப் 20ம் தேதி மறைந்து போன அந்த பூங்காற்று திரும்புமா..?