சாமி 2′-ம் பாகத்தில் த்ரிஷா நடிக்கிறார்.. ஆனால் இல்லை!

ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘சாமி 2’ படத்தில் விக்ரம், த்ரிஷா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சென்னை, டெல்லி மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பும் நடைபெற்றது. ஆனால், ‘சாமி 2’ படத்திலிருந்து த்ரிஷா திடீரென்று விலகினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “படைப்பாக்கக் கருத்து வேறுபாட்டால், நான் ‘சாமி 2’ படத்திலிருந்து விலகத் தீர்மானித்தேன். படக்குழுவுக்கு நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்தார். அவருடைய விலகலுக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரிவிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் த்ரிஷா மீது புகார் கொடுக்கப்பட்டது. த்ரிஷா ‘சாமி 2’ படத்தில் நடிக்காவிட்டால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நெல்லையில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஹரி, த்ரிஷா ‘சாமி 2’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறியுள்ளார். ‘சாமி 2’ படத்தில் இருந்து த்ரிஷா இன்னும் விலகவில்லை என்று தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், த்ரிஷா தரப்பு இதை மறுத்துள்ளது. ” ‘சாமி 2’ படத்தில் இருந்து விலகியது உண்மை. சாமி 2 படத்தில் நடிக்கவில்லை. முடிவில் மாற்றமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘சாமி 2’ படத்தில் த்ரிஷா இருக்கிறாரா? இல்லையா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதனிடையே மற்றொரு நாயகியான கீர்த்தி சுரேஷ் – விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.