குழந்தைகள் நலம் மற்றும் தெருவோர குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பான ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு நம் இந்திய நாட்டில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு பேரணி சமீபத்தில் நாடு தழுவிய அளவில் பாரத் யாத்ரா என்ற பெயரில் நடைபெற்றது. சென்னையில் பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் லதா ரஜினிகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் எதற்காக ? அதன் நோக்கம் என்ன ? அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அதன் நிறுவனர் . லதா ரஜினிகாந்த் எடுத்துரைத்தார். ஒரு நல்ல நோக்கத்திற்காக, சமுதாய விழிப்புணர்வுக்காக நடைபெறும் இந்த முயற்சியில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நிறுவனம் பல என்.ஜீ.ஓ நிறுவனங்களுடன் சேர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது. லதா ரஜினிகாந்துடன் பவுல்,நிர்மல், மிர்னாலினி, காதாம்பரி, ராஜ மீனாக்ஷி, ஐசக் , வசந்தி பாபு, Dr. யாமினி, அரவிந்த் ,நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் லதா ரஜினிகாந்த் பேசியதாவது,
“தெருவோர குழந்தைகளை பாதுகாப்பது தான் ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் தலையாய நோக்கம். தற்போது சென்னையிலுள்ள வால்டக்ஸ் ரோடில் சாலையோரம் தங்கியிருக்கும் குடும்பங்களை தயா பவுண்டேஷன் சார்பில் நாங்கள் தத்து எடுத்துள்ளோம். இனி அவர்கள் யாரும் தெருவோர வாசிகள் கிடையாது அவர்கள் அனைவரும் அபயம் குடும்பத்தார்கள். சாலையோர குழந்தைகள் திருடுபோவதை பற்றி பேசிய அவர், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நம்மால் எதையும் கொடுத்து அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. போலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளை மட்டும் நம்பாமல் இதை ஒட்டு மொத்த சமுதாயமும் விழிப்புணர்வு கொண்டு குழந்தைகளை பாதுக்காக்க வேண்டும்.” என்றார்.
“குழந்தைகளுக்கு தேவையான விஷயம் அன்பு, அரவனைப்பு, அதரவு மட்டுமே. இதைத் தவிர மற்ற எமோஷன்கள் அவர்களுக்கு தவறான அதிர்வை கொடுத்து விடும். பிள்ளைகள் விஷயத்தில் முதலில் பெற்றோருக்கு அக்கறை தேவை. எக்காரணத்தைக் கொண்டும் நமக்கு இருக்கும் அழுத்தத்தையோ, வருத்தத்தையோ காரணம் காட்டி குழந்தைகளின் மீது ஒரு தவறான அதிர்வை தந்துவிடக் கூடாது.” என்று கேட்டுக் கொண்டார். “தற்போது தயா பவுண்டேஷன் பல என்.ஜீ.ஓக்களுடன் கைகோர்த்து குழந்தை நல விஷயத்தில் ஒரு ஒட்டு மொத்த சமுதாய மாற்றத்தைக் கொண்டு வர முயற்ச்சித்து வருகிறது. ஸ்டூண்ட் வெல்பேர் அஸொசியஷன், குழந்தைகள் மன நலம், ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் என பல வகைகளில் குழந்தைகளின் நலனை மேம்படுத்த அனைத்து வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஒட்டு மொத்த சமுதாய மாற்றத்திற்கான முயற்ச்சியில் சமுதாயத்தின் அனைவரின் ஆதரவும், உதவியும், ஊடக நண்பர்களான உங்கள் உதவியும் பெருமளவில் தேவை என்பதை கேட்டுக் கொள்கிறேன்.” என்றும் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லதா, ரஜினிகாந்த் என்ன முடிவு எடுப்பார் என்பதைக்காண தங்கள் குடும்பத்தினர் காத்திருப்பதாகவும் அவர் என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.