சென்னையில் மேம்பட்ட ரோபோட்டிக் அறுவை சிகிச்சை சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், காவேரி மருத்துவமனை குழுமம் ‘காவேரி 3X சென்னை’ என்ற புதிய ஒருங்கிணைந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியின் மூலம், சென்னையில் செயல்பட்டு வரும் காவேரி மருத்துவமனையின் மூன்று கிளைகளிலும் ஒரே தரநிலையுடன் நவீன ரோபோட்டிக் அறுவை சிகிச்சை சேவைகள் வழங்கப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் 4-ஆம் தலைமுறை டா வின்சி (Da Vinci) ரோபோட்டிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை புற்றுநோயியல், சிறுநீரக மற்றும் சிறுநீர்பாதை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல், சிறுநீரக உறுப்புமாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் துல்லியமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், மகளிர் நோயியல் புற்றுநோய்கள், புரோஸ்டேட் அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை நீக்கம், ஃபைப்ராய்டு சிகிச்சை, தைராய்டு அறுவை சிகிச்சை, பித்தப்பை மற்றும் குடலிறக்க அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கலான மருத்துவ நிலைகளுக்கு இந்த ரோபோட்டிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ரோபோட்டிக் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் காவேரி மருத்துவமனை பெற்றுள்ள அனுபவமும், நிபுணத்துவமும் இந்த திட்டத்தின் முக்கிய பலமாகக் கருதப்படுகிறது.
இந்த புதிய திட்டம் குறித்து காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “மேம்பட்ட தொழில்நுட்பம், பல்துறை மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஒரே தரமான சிகிச்சை முறைகளை சென்னையில் உள்ள எங்களது மூன்று மருத்துவமனைகளிலும் ஒருங்கிணைக்கும் முயற்சியே ‘காவேரி 3X சென்னை’ திட்டம். நோயாளிகள் தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே உலகத் தரத்தில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை சேவைகளை பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்லாமல், நோயாளிகளின் குணமடையும் வேகத்தையும், சிகிச்சை வெற்றியையும் மேம்படுத்துவதே எங்களது முக்கிய நோக்கமாகும். சென்னை மக்களுக்கு உலகத் தரமான மருத்துவ சேவையை இன்னும் எளிதாகக் கொண்டு சேர்க்கும் முக்கிய மைல்கல்லாக இந்த திட்டம் அமையும்” என்றார்.
‘காவேரி 3X சென்னை’ திட்டத்தின் மூலம், மேம்பட்ட ரோபோட்டிக் அறுவை சிகிச்சை சேவைகள் சென்னையில் மேலும் பரவலாக கிடைக்கும் என்பதுடன், பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கான துல்லியமான மற்றும் குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை முறைகள் நோயாளிகளுக்கு எளிதில் அணுகக்கூடியதாக மாறும் என மருத்துவத் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
