‘மண்டாடி மண்டாடி’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘மண்டாடி’ படத்தின் இரண்டாவது பாடலான ‘உசுரே நீதான் புள்ள’ வெளியாகியுள்ளது.
சூரி நடிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பேசப்படாத கடலோர வாழ்க்கையையும், பாய்மரப் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான ‘மண்டாடி மண்டாடி’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது ‘உசுரே நீதான் புள்ள’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சூரி மற்றும் மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடல், இருவருக்குமிடையேயான காதல் உணர்வையும் அழகான இணைப்பையும் மையமாகக் கொண்டுள்ளது.
இதமான மெலடி இசையுடன், மனதை வருடும் காதல் வரிகளும் இணைந்துள்ள ‘உசுரே நீதான் புள்ள’ பாடலை ஜெயஸ்ரீ மதிமாறன் எழுதியுள்ளார். கபில் கபிலன் மற்றும் சஞ்சனா இணைந்து பாடியுள்ளனர்.
“சுருக்கு பைய்யா சுருங்கும் காலம் வர, உன்னில் ஒன்னா வாழ வேணும் புள்ள” என இடம்பெறும் வரிகள், பாடலின் காதல் உணர்வை அழகாக வெளிப்படுத்துகின்றன.
முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த இரண்டாவது பாடலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. சூரி – மஹிமா நம்பியாரின் கெமிஸ்ட்ரி மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் மெலடி இசை பாடலுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
எல்ரெட் குமார் தலைமையிலான ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
