சிலம்பரசன் TR – இயக்குநர் வெற்றிமாறன் – பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு – ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ படத்தின் ஐந்து நிமிட ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்கிலும், 17 ஆம் தேதி இணையத்திலும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, புதிய சாதனையை படைக்க உள்ளனர்.
சிலம்பரசன் TR நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு, ‘அரசன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக்கும் கடந்த வாரம் வெளியானது. இதில் சிலம்பரசனின் தோற்றம் மற்றும் டைட்டில் ரசிகர்களை வெகுவாக வசீகரித்ததுடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற செய்தது. அத்துடன் படத்தை பற்றிய புது தகவல்களுக்காக ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் படக் குழுவினர் ப்ரோமோ வீடியோ குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை பகிர்ந்துள்ளனர். ‘அரசன்’ படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் ஐந்து நிமிட அளவிலான காணொலியை அக்டோபர் 16ஆம் தேதி அன்று மாலை ஆறு மணியளவில் திரையரங்குகளிலும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் 17ஆம் தேதி அன்று காலை 10 மணியளவில் யூடியூபில் வெளியாகிறது.
இந்த ப்ரோமோ வீடியோவில் வெற்றிமாறனின் கதை சொல்லல்- சிலம்பரசன் TR ன் ஆற்றல் வாய்ந்த நடிப்பு – வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மதிப்பு- ஆகியவை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ப்ரோமோ வீடியோ – ரசிகர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற ஆவலையும் தூண்டி இருக்கிறது.
அத்துடன் ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை துல்லியமாக அறிந்த சிலம்பரசன் TR – 2011 ஆம் ஆண்டில் வெளியான ‘வானம்’ படத்திற்காக முதலில் ஆல்பம் – பாடல் ஒன்றை திரையரங்கத்தில் வெளியிட்டு முன்மாதிரியான புதிய முயற்சியை முன்னெடுத்தார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து தற்போது ‘அரசன்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோவை முதலில் திரையரங்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களை திரையரங்க அனுபவத்தை ரசித்து கொண்டாடுவதற்கான வாய்ப்பினை உருவாக்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை இணையத்தில் இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகிறது.
சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – கலைப்புலி எஸ் தாணு – கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு பாணி – தமிழ் திரையுலகில் ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வருவதற்கான பலன் அளிக்கும் புதிய முயற்சி என திரையுலகினர் பாராட்டுகிறார்கள்.
‘அரசன்’ படத்தில் பங்களிப்பு செய்யும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் புதிய தகவல்களைப் பற்றிய அதிகாரப்பூர்வமான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசன் படத்தின் ஐந்து நிமிட ப்ரோமோ வீடியோவிற்கு பிறகு சிலம்பரசன் TR-ன் தனித்துவமான நடிப்பு ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவரும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.