சிலரோட குரல் அம்புட்டு பேருக்கும் பிடிச்ச குரலாக அமைந்திருக்கும். முக்கியமாக, எல்லா மியூசிக் டைரக்டர்களுக்கும் அட்ராக்ட்டிவான குரலாக அமைஞ்ச்சிருக்கும். அப்படி, இசையமைப்பாளர் உணர்வுக்குப் பொருத்தமான குரல் கிடைச்சுட்டா, நம் உணர்வுகளை உசுப்பிவிடும் பாடல்களை அந்தக் குரல் நமக்குக் கடத்திவந்து கொடுத்துவிடும். பாடகர் ஜெயச்சந்திரனின் குரல் அப்படித்தான்!
முன்னொரு கால சினிமாவில் கனமான குரல் வளம் கொண்ட பாடகர்கள் தான் அதிகம் இருந்தாய்ங்க. அவிய்ங்களை முன்னிலைப்படுத்தியே அந்த கால திரையிசை உலகமும், வெள்ளித் திரையும் இயங்கி வந்துச்சு. எம்.ஜி,சிவாஜி மற்றும் அதன் பிறகு ரஜினி, கமல் போன்றவர்களின் வருகையால் திரையுலகம் மென்மையான குரல்வளம் கொண்டவர்களால் நிறைஞ்ச்சிது. அந்த சமயத்தில் அவர்களைப் போன்ற இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் பிரதிபலிக்க எஸ்.பி.பி. என்ற பிதாமகன் கிடைத்தார். அதே போன்று எந்தவொரு ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நதியோட்டமாக மனதை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்பட்டார். இந்த இருவரும் தங்களது ஆளுமையால் திரையிசையை ஆண்டு வந்த சமயத்தில் கேரள தேசத்தில் இருந்து ஒரு மயக்கும் குரல் வந்தது. அந்த குரல் தமிழ் ரசிகர்களை மயக்கி கட்டிப்போட்டது. அந்த குரலுக்குச் சொந்தக்காரர்தான் பளியத்து ஜெயச்சந்திரக்குட்டன் என்ற பி. ஜெயச்சந்திரன்.
1965-ம் வருசம், போருக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடந்துச்சு. இதில் ஜெயச்சந்திரன் மெய்யுருகப் பாடினார். அந்தப் பாடலை இந்தியாவின் ஒளிப்பதிவு மேதை என்று போற்றப்பட்டவரும் இயக்குநர் ஸ்ரீதரின் ஆஸ்தான கேமராமேனுமான ஏ.வின்சென்ட், கேட்டார். உடனே ஜெயச்சந்திரனை அழைச்சு கைகுலுக்கினார். தோள் தட்டிப் பாராட்டினார். கூடவே’குஞ்சாலி மரக்கார்’ எனும் படத்துக்கு பாடவைத்தார். இதுவே அவருக்கு முதல் படம்; முதல் பாட்டு! ஆனால், இதையடுத்துக் கிடைச்ச வாய்ப்பு, முதல் படமாக, முதல் பாடலாக அமைஞ்சுடுச்சு. ’களித்தோழன்’ படத்தில் ஜெயச்சந்திரனின் பாடல் ஒலித்தது. குரலில் கட்டுண்டுபோனார்கள் கேரள ரசிகர்கள்.(கட்டிங் கண்ணையா)
1972-ம் ஆண்டு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ’பணி தீராத வீடு’ அப்படீங்கற மலையாளப்படத்தில் இவருக்கு வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட்டடிச்சுது. மறுபடியும் மெல்லிசை மன்னர் ’மூன்று முடிச்சு’ படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். இரண்டு பாடல்கள். இந்த இரண்டு பாடல்களையும் கமலுக்குப் பாடினார். இன்றைக்கும் ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்’ என்ற சாங்க்கையும் ‘ஆடிவெள்ளி தேடி உன்னை’ என்ற பாடலையும் கேட்டுப்பாருய்ங்க. அப்படியே கமலின் குரலுக்கு இணையானதொரு குரலாகவும் ஸ்டைலாகவும் பாடியிருப்பார்.
கொஞ்சம் கொஞ்சமாக ஜெயச்சந்திரன் குரலுக்கென தனிக்கூட்டம் உருவாச்சு. ‘’ஜெயச்சந்திரனோட குரல்ல பாதி ஜேசுதாஸ் இருக்கார்; பாதி எஸ்பி.பி. இருக்கார். புதுமாதிரியா இருக்குப்பா அவரோட வாய்ஸ்’’ என்று தமிழ் ரசிகர்கள் கொண்டாடினாய்ங்க.
அப்போ இளையராஜா வந்தார். எழுபதுகளின் மத்தியில் வந்த இளையராஜா, எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற படத்துக்கு இசையமைத்தார். ‘சித்திரச்செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ என்ற பாடலை ஜெயசந்திரனுக்கு வழங்கினார். தொடர்ந்து, இளையராஜா தன் இசையில் எஸ்பி.பி-க்கு இந்தப் பாடல்தான், ஜேசுதாஸ் அண்ணாவுக்கு இந்தப் பாடல்தான், மலேசியா வாசுதேவனுக்கு இந்தப் பாடல்தான், எஸ்.என்.சுரேந்தருக்கு, தீபன் சக்கரவர்த்திக்கு, கிருஷ்ணசந்தருக்கு என்றெல்லாம் பாடல்களை வகைவகையாகக் கொடுத்தார். அந்தப் பட்டியலில் ஜெயச்சந்திரன், தனியிடம் பிடிச்சார்.
‘கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…’, ‘வசந்த காலங்கள்… இசைந்து பாடுங்கள்…’, ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…’, ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே…’, ‘மாஞ்சோலை கிளிதானோ…’, ‘கொடியிலே மல்லிகைப்பூ…’, ‘என் மேல் விழுந்த மழைத்துளியே…’, ‘கட்டாளம் காட்டுவழி…’ உட்பட மனதை ரம்மியமாக்கும் பாடல்களைப் பாடியவர். தமிழ், மலையாளம் உட்படப் பல்வேறு மொழிகளில் 15ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை செய்தவர், ஜெயச்சந்திரன்.
துல்லியமான உச்சரிப்பு, பொருளுணர்ந்து பாவ நயத்தோடு குரலால் மெருகூட்டுவது ஆகியவற்றில் தனித்தன்மையோடு பிரகாசித்தார், ஜெயச்சந்திரன். பி. சுசீலாவுடன் பாடிய ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ (‘நானே ராஜா நானே மந்திரி’) பாடலுக்கு மயங்காதவர் யாருமே இல்லை. மனோஜ் கியான் இசையில் ‘இணைந்த கைகள்’ படத்தில் ‘அந்தி நேரத் தென்றல் காற்று’ என்ற பாடலை எஸ்.பி.பி.யுடன் சேர்ந்து பாடியிருந்தார்.(சினிமா பிரஸ் கிளப் ஸ்பெஷல் ரிப்போர்ட்)
டி.ராஜேந்தருக்கு எஸ்பி.பி-யின் குரல் மீது எக்கச்சக்க லவ்வே உண்டு. ஆனாலும் மற்ற குரல்களையும் அவர் ரசிக்காமல் இருந்ததில்லை. முதன்முதலா இசையமைச்ச ‘ஒருதலை ராகம்’ படத்திலேயே, ‘கடவுள் வாழும் கோயிலிலே கற்பூரதீபம்’ என்ற பாடலை இவரிடம் கொடுத்தார். அவரின் குரலாலும் அந்தக் குரல் மூலம் நம்மைத் தொட்ட டி.ஆரின் வரிகளாலும் நாமே அழுது கரைந்தோம். ‘இரயில் பயணங்களில்’ படத்தில், ’வசந்தகாலங்கள் இசைந்து பாடுங்கள்’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம், அந்த ‘பெல்பாட்ட’ காலத்துக்குள் சென்று பயணிக்கத் தொடங்கிபுடுவோம். அப்படியொரு மாயாஜாலக் குரல் ஜெயச்சந்திரனுடையது!
விக்ரமனின் ‘பூவே உனக்காக’ படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் சுஜாதாவுடன் பாடிய ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடலில் ஜெய் சேட்டனின் குரல் வசீகரம் சொல்லாமலே எல்லோருக்கும் புரிஞ்ச்சுது. மேலும் ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் இவர் பாடிய ‘கட்டாளம் காட்டுவழி’ பாட்டுக்கு தமிழக அரசின் விருது பெற்றார்.அது மட்டுமின்றி தமிழ்த்திரையுலகில் இவர் செய்த சேவையைப் பாராட்டி 1997ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. மலையாளத்திலும் நிறைய விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் மலையாள சினிமாவில் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தி படத்திலும் பாடியுள்ளார். தமிழில் இரண்டு முறை தமிழ்நாடு ஸ்டேட் விருது, மலையாள சினிமாவில் உயரிய விருதான ஜே.சி.டேனியல் விருது, கேரள அரசின் விருது, தேசிய விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்று விருதுக்கே பெருமை சேர்த்தாராக்கும்
மாயக்குரலால் வசீகரித்த ஜெயச்சந்திரனின் பாடல்களை இன்று இரவு வேளையில், கேட்டுப்பாருங்கள். நாளை ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’ என்று யாராவது நம்மிடம் கேட்டால்… அதற்கு, ‘ஜெயச்சந்திரன் பாட்டுகள்தான்’ என்று பதில் சொல்லுவோம். அப்படியொரு ஆனந்தமான குரல் அவருக்கு. நம்மையெல்லாம் ஆனந்தத்தில் ஆழ்த்திவிடுகிற குரல் ஜெயச்சந்திரனுடையது! அப்பேர்ப்பட்டவர் காலமாகி விட்டார் என்று சொன்னால் நம்பவா முடியும்..!