கல்கத்தாவிலும், பம்பாயிலும் கோலாப்பூரிலும் மட்டும் இயங்கி வந்த இந்திய சினிமாவை சேலம் நோக்கித் திரும்பிப் பார்க்க வைச்சவர் இந்த ‘செல்லுல்லாய்ட் சீமான்’. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 150 படங்களைத் தயாரிச்சவர். 55 படங்கள் இயக்கியவர். 40 ஆண்டுகள் இடைவிடாமல் இயங்கிச் சாதனை படைத்த அவர்தான், மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற சினிமா சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பிய டி.ஆர். சுந்தரம். “முதலாளி” அப்படீன்னு முன்னணி நட்சத்திரங்களாலும் ஸ்டூடியோ தொழிலாளர்களாலும் நிஜ அன்போடும் அழைக்கப்பட்ட சுந்தரத்தின் சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ‘திரைப்படத் தயாரிப்பு முறை என்றாலே ஹாலிவுட்டுக்கு இணையாக யாருமில்லை’ என அங்கலாய்ப்பவய்ங்க நாற்பதுகளில் வாழ்ந்திருந்தால் அப்படிக் கேட்க வாய்ப்பே இல்லை. ஹாலிவுட்டுக்குச் சற்றும் குறையாத முழுமையான கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு பிரம்மாண்ட ஸ்டூடியோவை இயற்கை எழில் சூழ்ந்த சேலம் – ஏற்காடு மலையடிவாரத்தில் அமைச்சாரிவர்.
அங்கே ஷூட்டிங் ஃப்ளோர் , பாடல் ஒலிப்பதிவுக்கூடம், ப்ராப்பர்ட்டி டிபார்ட்மெண்ட், பிலிம்லேப், ப்ரிவியூ தியேட்டர், மாஸ் கிச்சன் என ஒரு திரைப்படம் முழுமையாகத் தாயாராகி வெளியே வரும் வரைக்குமான அத்தனை வசதிகளை ஏற்படுத்தினார் ‘ஸ்டூடியோ சிஸ்டம்’என்னும் ராணுவக் கட்டுக்கோப்புடன் இத்தனைபெரிய ஸ்டூடியோவை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். தனது ஸ்டூடியோவுக்குத் தேவையான தொழிலாளர்களை அருகிலிருந்த கிராமங்களில் இருந்தே வேலைக்கு அமர்த்திக்கொண்ட சுந்தரம், அவிய்ங்களுக்கு ஆசிரியர்களை அமர்த்தி தினசரி ஒருமணிநேரம் ஸ்டூடியோவுக்கு உள்ளேயே பள்ளிக்கூடம் நடத்தினார்.அது மட்டுமல்ல; டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட், வாலிபால் கிரவுண்டு, டேபிள் டென்னிஸ், கேரம் போர்டு, சடுகுடு மைதானம், ரீடிங் ரூமுடன் கூடிய நூலகம் போன்ற பல வசதிகளை ஸ்டூடியோவுக்குள்ளே ஏற்படுத்திக்கொடுத்து வாழ்க்கையையும் சினிமாவையும் தன் தொழிலாளர்கள் காதலிக்கும்படி செஞ்சாராக்கும்.
ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளர்கள் தனி, இயக்குநர்கள் தனி என்ற முறைதான் அங்கிருந்து ரசிக்கும்படியான படங்கள் வருதற்கு இன்றளவும் முக்கியக் காரணமாக இருக்குது உல்லையா?. ஹாலிவுட்டின் இந்த முறையை சுந்தரம் இறுகப் பிடித்துக்கொண்டதால் கண்ணதாசன், மருதகாசி, கலைஞர் மு. கருணாநிதி, கா.மு.ஷெரிப் தொடங்கி பல புகழ்பெற்ற எழுத்தாளர்களைத் திரைக்கதாசிரியர்களாகவும் பாடலாசிரியர்களாகவும் அறிமுகப்படுத்தினார்.
அதேபோல் ஹாலிவுட்டிலிருந்து பல ஒளிப்பதிவாளர்கள், ஸ்டண்ட் இயக்குநர்களை அன்றே அழைத்துவந்த முன்னோடி. இவர் தயாரிக்காத சினிமா வகைமையே இல்லை எனலாம். புராணத்தில் ஃபாண்டஸி, முதல் முழுநீள நகைச்சுவை சினிமா, கொலையைத் துப்புதுலக்கும் மர்டர் மிஸ்டரி படங்கள், முழுநீள ஸ்டண்ட் படம், என்று சளைக்காம தயாரிச்சா. மலையாள சினிமாவின் முதல் பேசும்படமான ‘பாலன்’(1938) தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான ‘ அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, தமிழ் சினிமாவுக்கு ஜேம்ஸ் பாண்ட் வகைப் படங்களை அறிமுகப்படுத்தியது என அசாத்திய தன்னம்பிக்கைக்காரராக விளங்கினார்.பல ஆங்கிலப் படங்களையும் ஆங்கில நாவல்களையும் தமிழுக்கு ஏற்ப தழுவி பல வெற்றிப்படங்களைத் தயாரித்தார். அசல் திரைக்கதைகளுக்கும், தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற கதைகளுக்கும் முழுமையான ஆதரவளித்தார்.
கண்டிப்புக்கு பேர் போன சுந்தரம், படப்பிடிப்பின் போது ஒரு சர்வாதிகாரிப் போல்தான் நடந்து கொள்வார். படப்பிடிப்பை திட்டமிட்டு நடத்தி, படத்தை குறித்த நேரத்தில் வெளியிடும் பழக்கமுடையவர். தனது ஸ்டுடியோவில் தயாராகி, எதிர்பாராதவிதமாக எரிந்து போன ‘போஜன்’ படத்தை ஒரே மாதத்தில் திரும்பவும் படமாக்கி திரையிட்ட சாதனையாளர் சுந்தரம். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களை தயாரித்தது.
பாரதியாரின் பாடல்களை முதன்முதலில் திரைப்படங்களில் பயன்படுத்தத் தொடங்கிய ரசனைக்காரார். இவை எல்லாவற்றுக்கும் உச்சமாகத் தனது நிறுவனத்தின் பெயரால் பங்குகளை ஷேர் மார்க்கெட்டில் வெளியிட்டு ஐந்து லட்சம் திரட்டி பிரம்மாண்டப் படங்களை எடுத்தவர் என இவரது சாதனைகள் அடங்க மறுப்பவை.
டி.ஆர். சுந்தரம், தனது எந்த சினிமா தயாரிப்புக்கும் வெளியிலிருந்து பணம் கடனாக வாங்குவதில்லை. தானே படத்திற்கான பட்ஜெட்டை தயாரித்து, குறித்த தேதியில் படப்பிடிப்பைத் தொடங்கி, குறித்த நேரத்தில் படத்தை வெளியிடுவார். தமிழ் நாட்டிலேயே வெளியிலிருந்து கடன் பெறாமல் சொந்தப் பணத்திலேயே படம் தயாரித்த ஒரே நிறுவனம், மாடர்ன் தியேட்டர்ஸ் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இருமுறை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகப் பொறுப்பு வகித்து தமிழ் சினிமாவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் இவர் ஆற்றிய பணிகள் பல. அவரது திரைத்துறைப் பங்களிப்பைப் போற்றும் வண்ணம், அவரது சிலை சென்னை அண்ணாசாலையில் அமைந்திருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. சேலம் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ ஸ்டூடியோ வளாகம் தற்போது அடுக்குமாடி குடியிருப்பு வளாகமாக மாறிவிட்டது. அந்த சரித்திர சாம்ராஜ்யத்தின் நினைவுச் சின்னமாக ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ ஸ்டூடியோவின் நுழை வாயில் மட்டுமே அங்கே தற்போது எஞ்சியிருப்பதும் அதையும் இடிக்க சிலர் திட்டமிட்டதும் எக்ஸ்ட்ரா எபிசோட் ஸ்டோரி.
டி.ஆர். சுந்தரம் நினைவு நாள் சிறப்புக் கட்டுரையிது