2.0 படம் ரசிகர்களை அதிசயிக்க வைக்கும்! – ரஜினி நம்பிக்கை!

இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் 3D வடிவில் உருவாகியுள்ள இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். நாளை (29 ம் தேதி) ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தின் புக்கிங் ஆரம்பித்து சில மணி நேரங்களில் முடிந்துவிட்டது. உலகம் முழுவதும் 10,000 திரையங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இது 12000 ஆகா மாறும் என தெரிகிறது. ஒரு தமிழ் தமிழ் படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை.இதை ரஜினியின் 2.0 USAவில் மட்டும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறதாம். தமிழ்- 307 திரையரங்குகள், தெலுங்கு- 270 திரையரங்குகள், ஹிந்தி- 223 திரையரங்குகள், மொத்தம்- 800 திரையரங்குகள் வெளிநாட்டில் ஒரு தமிழ் படத்துக்கு இது அதிகம் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது ரஜினிகாந்த் பேசியதாவது, “தெலுங்கு மக்கள் நல்லவர்கள். அவர்களை எல்லோரும் விரும்புவார்கள். தெலுங்கு உணவு உலக பிரசித்தமானது. தெலுங்கு இசை ஆனந்தமயமானது. தெலுங்கின் பெருமையை மகாகவி பாரதியாரே பாராட்டி இருக்கிறார். எந்திரன் படம் எடுத்தபோது முழு படத்தையும் 3டியில் மாற்ற முயன்றோம். ஆனால் முடியவில்லை. 2.0 படம் 3டியில் வருகிறது. படத்தின் கதையை ‌ஷங்கர் சொன்னதும் இதை படமாக அவரால் எடுக்க முடியுமா? என்று சந்தேகம் எழவில்லை. அவரால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. பாகுபலி படத்தில் கதையும் பிரமாண்டமும் இருந்ததால் உலக அளவில் பேசப்பட்டு வெற்றி பெற்றது.

அது போல் 2.0 படமும் புதிய தொழில் நுட்பத்தில் பேசப்படும் படமாக இருக்கும். இது 100 சதவீதம் பெரிய வெற்றி படமாக அமையும் என்று நம்புகிறேன். 2.0 படத்தை நான் பார்த்த பிறகு மக்களே இந்த படத்தை விளம்பரப்படுத்துவார்கள் என்றேன். அந்த அளவுக்கு படத்தில் வி‌ஷயங்கள் இருக்கிறது.

1975–ல் நான் நடித்த முதல் படமான அபூர்வராகங்கள் வெளியானபோது அதை பார்க்க எனக்கு எவ்வளவு ஆர்வம் இருந்ததோ 43 வருடங்களுக்கு பிறகு 2.0 படத்துக்காக அதே ஆர்வத்தோடு இருக்கிறேன். படத்தில் 45 சதவீதம் விஷுவல் எபெக்ட் உள்ளது. பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளும் உள்ளன. டிரெய்லர், பாடல்கள் சாம்பிள்தான். 2.0 படம் ரசிகர்களை அதிசயிக்க வைக்கும். ஆச்சரியம் ஏற்படுத்தும். சினிமா துறைக்கே பெருமை ஏற்படுத்தும் படமாக இருக்கும். சினிமாவில் எனது அடுத்த அவதாரம் பேட்ட படம்.’’என்று ரஜினிகாந்த் பேசினார்.