ரஜினியின் அண்ணாமலை-க்கு 28 வயசு

0
372

ஆக்டர் விஜய்யிடம் ஒரு முறை எந்த ரஜினி படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டதற்கு பட்டென்று அவர் சொன்ன பதில் அண்ணாமலை. ஆம்.. தமிழில் ஹிட் அடித்த சினிமாவின் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத ஒரு படம் அண்ணாமலை.

ரஜினிகாந்த் நடித்து கவிதாலயா தயாரிப்பில் சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையமைப்பில் வைரமுத்துவின் பாடல் வரிகளில் உருவான படம் அண்ணாமலை. முதல் முதலாக தேவா இப்படத்துக்காக ரஜினிகாந்துக்கு உருவாக்கிய டைட்டில் இசை இன்றும் பல ரஜினி படங்களுக்கு டைட்டிலில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவு ஒரு மாஸ் ஆன இசை அது.

முந்தைய தலைமுறை நடிகர்கள் நடிக்க வரும்போது பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை பேசிக் காட்டி விட்டு நடிக்க வந்தார்கள். அடுத்த தலைமுறை முழுக்க அண்ணாமலைக்கு அடிமை. விஜய் நடிக்க வந்த புதிதில் அவர் அப்பாவிடம் நடித்து காட்டியதும் கூட அண்ணாமலை காட்சியை தான். அந்த அளவுக்கு பெரும்பாலான நடிகர்களின் ஃபேவரைட் சினிமா அண்ணாமலை.

ரஜினி ரசிகர்கள் பலரும் கூட பாட்ஷாவை விட அண்ணாமலை தான் மிக நெருக்கமான படம் என்று கூறுகிறார்கள். சமீபத்தில் பாட்ஷா டிஜிட்டலில் ரீரிலீஸ் செய்யப்பட்ட போது பல ரசிகர்களும் அண்ணாமலை படத்தை இதே போல ரிலீஸ் பண்ணுங்க என வெறித்தனமாக வேண்டுகோள் விடுத்தனர். அப்படி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படமான அண்ணாமலை இன்றோடு 28 வருடங்களை நிறைவு செய்கிறது.

வழக்கமான மசாலா படத்தையும் தாண்டி இந்த படத்துக்குள் ஏதோ மேஜிக் இருக்கிறது. அது என்னவென்று தான் தெரியவில்லை என்று பல சினிமா விமர்சகர்கள் அண்ணாமலையை பற்றி கூற கேட்டதுண்டு. அப்பாவியான பால்காரன், செம ஸ்டைலான பணக்காரன் என இரண்டு கதாபாத்திரத்திரங்களின் உணர்வுகளையும் ரசிகனுக்குள் கடத்துகின்ற மாதிரி ஒரு ஆகச்சிறந்த நடிப்பு ரஜினியுடையது. நடிப்பது ரீமேக் படமாக இருந்தாலும் அதை ஒரிஜினலை தாண்டி சிறப்பான படமாக கொடுக்கும் வித்தை ரஜினியுடையது.

ரஜினியின் கேரியரிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்த இந்த படம் உருவான விதத்தை கேட்டால், இவ்வளவு சிக்கலுக்கும் நடுவில் இப்படி ஒரு சிறப்பான படமா? என எல்லோரும் மூக்கின் மேல் விரல் வைப்பார்கள். சுரேஷ் கிருஷ்ணாவின் அபரிமிதமான திறமைக்கு இந்த படம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. பாலச்சந்தர் தயாரிப்பில் மூன்று படங்கள் திட்டமிடப்பட்டு, அண்ணாமலை படத்தை இயக்கும் பொறுப்பு விசுவிடம் சேர்ந்தது. அவர் விலகினார். பின் வசந்த இயக்குனராக அறிவிக்கப்பட்டார். அவர் படப்பிடிப்புக்கு மூன்று நாட்கள் இருக்கும் சூழலில் விலகி விட, திடீரென்று படத்துக்குள் வந்தவர் தான் சுரேஷ் கிருஷ்ணா. படம் வெளியாகும் தேதியை அறிவித்து விட்டதால் எந்த தாமதமும் இன்றி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று பாலச்சந்தர் சொல்லி விட்டார். மார்ச் மாதம் படப்பிடிப்பை ஆரம்பித்து, ஜூன் மாதம் இறுதியில் படம் ரிலீஸ். இத்தனைக்கும் நடுவில் பல சிறப்புகளை இந்த படத்தில் செய்தது மெகா சாதனை.

ரஜினிகாந்த் வெறும் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு இருந்து வந்த காலத்தில், அந்த சூப்பர் ஸ்டார் அடைமொழியை, பிராண்டாக மாற்றிய படம் அண்ணாமலை. அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் என்ற அனிமேஷன் லோகோ தேவாவின் மிரட்டலான இசையோடு முதல் முறையாக அறிமுகமான போது ரசிகர்கள் பலருக்கும் எழுந்த ஆனந்தத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதன் பிறகு பாண்டியன், எஜமான், உழைப்பாளி படங்களில் அந்த பிராண்ட் லோகோ உபயோகப்படுத்தவில்லை என்றாலும் மீண்டும் வீரா, பாட்ஷா படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி, அதை ஒரு சம்பிரதாயமாகவே மாற்றியவர் சுரேஷ் கிருஷ்ணா. சூப்பர் ஸ்டார் என்பது பிராண்டாக மாறியதாலோ என்னவோ அந்த அடைமொழிக்கு இத்தனை போட்டி நிலவுகிறது.

அண்ணாமலை படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. ரஜினி படங்களில் கதாபாத்திரத்தின் பெயரையே தலைப்பாக வைக்கும் ட்ரெண்ட் துவங்கியது அண்ணாமலையில் இருந்து தான்.

அண்ணாமலை படத்தில் ஆரம்பித்து பெரும்பாலான அவரது பட தலைப்புகள் ரஜினியின் மனதில் தோன்றும் ஏதோ ஒரு தலைப்பாக இருக்கும். திரைத்துறையில் அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா, பாபா என அனைத்து படங்களிலும் இது தான் தலைப்பா? என ஒவ்வொரு படத்துக்கும் கேட்பார்கள், நெகட்டிவாக பேசுவார்கள். பின் அந்த தலைப்புகளை உச்சரிக்காத உதடுகளே இருக்காது. அந்த அளவுக்கு பரிச்சயமே இல்லாத தலைப்புகளை கூட உச்சத்துக்கு கொண்டு போகும் வல்லமை ரஜினிக்கே உரித்தானது. ரஜினி அறிமுகமாகும்போதே பாடல் காட்சியோடு அறிமுகமாவது ட்ரெண்டாகியதும், அதை பின்பற்றி அடுத்து வந்த ஹீரோக்களும் இண்ட்ரோ பாடல் வைக்க ஆரம்பிப்பதற்கு விதை போட்ட படம் இந்த அண்ணாமலை தான்.

ரஜினியின் இண்ட்ரோ பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடும் செண்டிமென்ட் துவங்கியதும் இந்த படத்தில் இருந்து தான். அது லிங்கா வரை தொடர்ந்து வருகிறது. அடுத்து கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் கூட எஸ்பிபி தான் ரஜினிக்கு இண்ட்ரோ பாடலை பாட இருக்கிறார்.

அண்ணாமலையில் இருந்து ஒவ்வொரு படத்திலும் ரஜினி பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையில் பொருத்தி பார்த்துக் கொண்டார்கள். அந்தளவுக்கு தத்துவார்த்தமாக அமைந்த பல வசனங்களுக்கு பிள்ளையார் சுழியாக இருந்த படம் அண்ணாமலை. ஒரு சோறு பதமாக, “துரோகியக் கூட மன்னிச்சிடலாம், ஆனால் நண்பன் துரோகியாகிட்டா அவனை மன்னிக்கவே கூடாது” என்ற வசனத்தை சொல்லலாம். படத்தில் ரஜினி பேசிய சில வசனங்களை ரசிகர்கள் சமகால அரசியலோடும் தொடர்பு படுத்திக் கொண்டார்கள்.

அண்ணாமலை படத்தில் இருந்து ஆக்ஷன், காமெடி, காதல் என்பது போல ‘ரஜினி படம்’ என்ற ஒரு புது ஜானரே பிறந்தது எனலாம். விஜய், அஜித் ஆகியோர் பெரும்பாலும் பயணிக்க விரும்பிய ஜானர், இன்றும் அந்த வழியில் பயணிக்கிறார்கள் என்று சொல்லலாம்.

தேவாவின் இசையை பற்றி குறிப்பிடாமல் இந்த கட்டுரையை முடிக்க முடியாது. ரஜினி, இளையராஜா கூட்டணியில் தளபதி, மன்னன் என இரண்டு படங்களில் சொக்கி போயிருந்த ரசிகர்களுக்கு தேவா இசையமைக்கிறார் என்ற செய்தி பெரிதாக ஈர்க்கவில்லை. படம் ரிலீஸ் ஆன பிறகு அத்தனை பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் ஓராண்டு வரை கலக்கியது. அதுவும் அந்த சூப்பர் ஸ்டார் என்ற அனிமேஷன் லோகோவுக்கு அவர் கொடுத்த இசையை 15 ஆண்டுகள் யாருமே மாற்றவில்லை. ரசிகர்கள் சோர்ந்து போகும் நேரத்தில் கேட்கும் ரஜினி பாடல்களில் ‘வெற்றி நிச்சயம்’ பாடலும் ஒன்று.

அண்ணாமலை ரிலீஸ் நேரத்தில் சென்னை மாநகராட்சி சுவர்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று தடை விதித்திருந்தது. மேலும் தயாரிப்பாளர் தரப்பிலும் பாடல்களை தூர்தர்ஷனில் சில வாரங்கள் ஒளிபரப்பவில்லை. இது ரஜினி, ஜெயலலிதா மோதல், ஆளுங்கட்சி ரஜினி படத்தை தடுக்கிறது என்ற செய்திகளுக்கு வலு சேர்ப்பதாகவும் அமைந்தது.

அண்ணாமலை உலகம் முழுதும் அப்போது ரூ 15 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படம் அப்போதைய ஹையஸ்ட் படமாக இருந்தது.