இப்படத்தை நான் கண்டிப்பாக பார்க்க மாட்டேன். ‘அவள்’ நாயகி ஆண்ட்ரியா அதிரடி பேச்சு!

நாயகன் சித்தார்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படம் ‘அவள்’. இதில் அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். நடிகர்கள் சுமன், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை சித்தார்த்தின் எடாகி எண்டர்டெயின்மென்ட் மற்றும் வியாகாம்18 மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப் படம் பற்றிய எந்தவொரு தகவலுமே வெளியிடாமல் இருந்தனர். இதையடுத்து தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறும் நிலையில், படத்துக்கு ‘அவள்’ என பெயரிட்டு இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் படம் தயாராகியுள்ளது. முழுக்க திகில் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள படத்தை மிலிந்த் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா சென்னையில் அண்மையில் (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு விழாவில் சித்தார்த் பேசிய போது, “நானும், இயக்குனர் மிலிந்தும் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனர்களாக ஒன்றாக வேலை பார்த்தோம். எங்கள் நட்பு 17 வருடங்களைத் தாண்டியது. இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற ஓர் உண்மைக்கதையை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை எழுதியிருக்கிறோம். மைனஸ் 10 டிகிரி குளிரில் ஒரு மாதம் வரை இமாச்சல பிரதேசத்தில் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.

நல்ல ஒரு பேய் படத்தை எடுத்து மக்களை பயமுறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. இந்தப் படம் கண்டிப்பாக பார்ப்பவர்களை பயமுறுத்தும். அந்த அளவுக்கு ஹாரர் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்துக்கு பின் இயக்குனர் மிலிந்த் பேசப்படுவார். ஒரு காட்சியில் கூட கிராபிக்ஸ் பயன்படுத்தவில்லை.

மூளை அறுவை சிகிச்சை நிபுணரும், அவருடைய மனைவியும் ஓய்வுக்காக பனிமலை பிரதேசத்துக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்களது பக்கத்து வீட்டுக்கு ஜெனி என்ற பெண்ணுடன் பெற்றோர்கள் குடியேறுகிறார்கள். அந்த பெண்ணின் பிரச்சினை எப்படி இவர்களையும் பாதிக்கிறது என்பது தான் திரைக்கதை.

நாயகி ஆண்ட்ரியா நன்றாக தமிழ் பேசக்கூடிய நடிகை. அவர் படத்தின் மிகப்பெரிய தூண். ‘ரங்தே பசந்தி’ படத்துக்குப் பிறகு 12 வருடங்கள் கழித்து இந்தப் படத்தில் அதுல் குல்கர்னியும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம்.’ஜில் ஜங் ஜக்’ படத்தில் வேலை செய்த டீம் இதிலும் பணியாற்றி இருக்கிறது. இப்படி ஒரு பெரிய பட்ஜெட் பேய் படத்தை நாங்கள் எடுத்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம்”இவ்வாறு சித்தார்த் பேசினார்.

நடிகை ஆண்ட்ரியா, “ரொம்ப சந்தோஷம், எனக்கு அடுத்தடுத்து வித்தியாசமான கதைகள் கொண்ட படங்கள் அமையுது. இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த சித்தார்த் மற்றும் மிலிந்த் ராவ்விற்கு நன்றி. ஆனா, நான் நடித்த இப்படத்தை கண்டிப்பாக பார்க்க மாட்டேன். ‘அவள்’ மாதிரியான ஹாரர் படங்கள் பார்க்கிறதுன்னா எனக்கு கொஞ்சம் பயம்” என்று கூறினார்.

“சென்னை எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். ஏனென்றால் இந்த சென்னை தான் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. உலகநாயகன் கமல் அவர்கள் தான் ஹேராம் படத்தில் என்னை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்தினார். ரங்தே பசந்தி படத்துக்கு பின் 12 வருடங்கள் கழித்து சித்தார்த்துடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. எப்போதுமே நல்ல சினிமா நல்ல ஒரு குழுவால் தான் உருவாகிறது. பாலிவுட் எப்போதும் தமிழ் சினிமாவை உற்று கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது. தொழில்நுட்பம், இசை போன்றவற்றில் தமிழ் சினிமா எப்போதும் முன்னோக்கியே இருக்கிற்து. தமிழ, தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த அவள் படம் வெளியாக இருக்கிறது. இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான ஹாரர் படமாக இருக்கும்” என்றார் நடிகர் அதுல் குல்கர்னி.

இசையமைப்பாளர் கிரீஷ் கோபாலகிருஷ்ணன் பேசும் போது, “2012ல் மெரினா, 2014ல் விடியும் முன் படங்களுக்கு இசையமைத்தேன். எனக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்வேன் என்பதால் தான் மிக குறைந்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறேன். சித்தார்த், மிலிந்த் இருவரும் என்னை ஹாரர் படத்தில் வேலை செய்ய விருப்பமா? எனக் கேட்டு இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தார்கள். கடந்த ஒரு வருடம் இந்த படத்தில் வேலை செய்தது மிகப்பெரிய அனுபவம்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குனர் சிவஷங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.